நித்திய சொர்க்கவாசல்!

யுகங்களில் கலியுகம் இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும். கலியுகத்தில் செங்கோல் தாழும். கொடுங்கோல் உயரும்.
நித்திய சொர்க்கவாசல்!
Updated on
2 min read


யுகங்களில் கலியுகம் இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும். கலியுகத்தில் செங்கோல் தாழும். கொடுங்கோல் உயரும்.

மக்கள் செலுத்தும் வரிகள் அதிகரிக்கும். அரசுகள் நம்பிக்கை வழிபாடுகளைப் பாதுகாக்க இயலாத நிலை ஏற்படும். மக்கள் உணவுக்காக வேறிடங்களுக்கு இடம் பெயர நேரிடும். மக்களுக்குள் பொறாமை அதிகமாகி வெறுப்பு வளரும்.

ஒழுக்கமின்மை, கொலைகள் அதிகரிக்கும். இறுதியில் கல்கி அவதாரம் நிகழும். திருமால் வெள்ளைக் குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான "கலி'யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற "சத்திய யுகம்' பிறக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

"வேம்' என்றால் பாவம்; "கட' என்றால் நாசமாதல் எனப் பொருள்படும். பாவங்களைச் சுட்டெரிக்கும் வல்லமை பெற்றவன் "வேங்கடேசன்'. அவ்வகையில் கலியுகத்தில் "வேங்கடேசன்' என்ற திருநாமத்தோடு திருமால் கோயில் கொண்டுள்ள திருத்தலம் கலியுக வேங்கடேசப் பெருமாள் கோயிலாகும். 

எல்லா கோயில்களிலும் மூலவர் சந்நிதிக்கு நேராக ராஜகோபுரமும், நுழைவு வாசலும் இருக்கும். ஆனால் இங்கு வடக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் ஒன்று தான் நுழைவு வாயிலாகும். 

பெருமாள் கோயில்களில் "வடக்குவாசல்' என்பது வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்பட்டு, இறைவன் செல்லும் "சொர்க்கவாசல்'ஆகும். ஆனால் இத்திருக்கோயிலில் வடக்கு வாசலே நுழைவு வாயிலாக இருப்பதால் இது "நித்திய சொர்க்கவாசல்' என்றும், இக்கோயில் "வைகுண்டம்' எனவும் அழைக்கப்படுகிறது.

வடக்கு கோபுர வாசல் வழியே நுழைந்தால், மகா மண்டபத்துக்குள் விநாயகர் } நாகர் கிழக்கு நோக்கி அமைந்தருள்கின்றனர். அதே வரிசையில் கருடாழ்வார் மேற்குப் பார்த்த படி, மூலவரை வணங்கிக் கொண்டிருக்கிறார்.

சதுர்புஜ வரதராஜப் பெருமாளுடன் லட்சுமி தேவி அமர்ந்திருக்க, பக்கத்தில் மணிகட்டிய வாலை தலைக்கு மேல் உயர்த்தியபடி, இடது கரத்தில் சௌந்திரிகா மலரை ஏந்தி, வலக்கரத்தால் ஆசி வழங்கியபடி சஞ்சீவி ஆஞ்சநேயர் அருள்கிறார்.

கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேசப் பெருமாள் சங்கு, சக்கரம், வரத ஹஸ்தம், கடி ஹஸ்தம் உடையவராக நான்கு கரங்களுடன், புன்னகை தவழ இருபுறமும் திருமகளும், நிலமகளும் உடனுறைய நின்றருள் புரிகின்றார். 

கலியுக வெங்கடேசப் பெருமாள் கட்டளைப்படி ஈசான்ய மூலையில் அறுங்கோண வடிவில் தனி விமானத்தின் கீழ் பிரதிஷ்டையாகியுள்ள நவகிரகங்கள் பக்தர்களுக்கு அல்லல் தராமல் இருக்க, அனைத்தும் வரிசை மாறி அமைந்திருக்கின்றன. 

வழக்கமாக நடுவில் இருக்கும் சூரியனுக்குப் பதிலாக சந்திரனும், அவருக்கு வலப்புறத்தில் சாயாதேவி} இடப்புறத்தில் உஷாதேவியுடன் சூரிய பகவான் எழுந்தருளியிருக்கிறார். 

சனி தெற்கு நோக்கியும், அவரது நட்புக் கிரகங்களான புதன், சுக்கிரன் இருபுறமும் இருக்கின்றனர். கலியுக வெங்கடேசப் பெருமாளை வழிபடுவோருக்கு நவகிரக பாதிப்பு ஏற்படாது என்பது ஐதீகம்.

இவ்வாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஜனவரி 13}ஆம் தேதி (மார்கழி } 29) அன்று, அதிகாலை நாலே முக்கால் மணி முதல் ஐந்தேகால் மணிக்குள் நித்திய சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்!
அமைவிடம்: தஞ்சாவூர் தெற்கு ராஜ வீதியில் கலியுக வேங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 

தொடர்புக்கு: 04362223385 / 96988 11156. 

இரா.இரகுநாதன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com