பக்தர்களுக்கு இறங்கி வந்த பரந்தாமன்!

கடலில் உதிக்கும் சூரியன் தினமும் முதலில் தன் கிரணங்களை பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே படர விட்டு, ஒளியைக் குறைத்து மீண்டும் பிரகாசத்துடன் வணங்கி மேலெழும் இடம் ஒன்று இருந்தது.
பக்தர்களுக்கு இறங்கி வந்த பரந்தாமன்!


கடலில் உதிக்கும் சூரியன் தினமும் முதலில் தன் கிரணங்களை பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே படர விட்டு, ஒளியைக் குறைத்து மீண்டும் பிரகாசத்துடன் வணங்கி மேலெழும் இடம் ஒன்று இருந்தது. அதற்கு முன் அவ்விடத்தில் கெளசிகர், அத்திரி, விசுவாமித்ரர், கெளதமர், பரத்வாஜர், வசிஸ்டர் மற்றும் காஸ்யபர் ஆகிய ஏழு ரிஷிகளும் திருமாலின் தரிசனம் வேண்டி தவமிருந்தனர். 

நாராயணன் அங்கு தோன்றி காட்சி தந்து அருளினார். அவ்விடம் இன்றைய சென்னை எழும்பூர் பகுதி ஆகும். நாராயணன் அவ்விடத்தில் முனிவர்களுக்கு காட்சி தந்ததோடு, திருமால் தன் இடத்திலிருந்து எழுந்து வந்து பாதம் பதிந்த அந்த பூமியை, சூரியன் தினமும் வணங்கி எழும் ஊராக விளங்கியதால் "எழும்—ஊர்' எனப்பட்டது. நாளடைவில் "எழும்பூர்' என வழங்கப்பட்டது.

திருமாலன் எழும்பி வந்து நின்ற இடத்தில் நாராயணன் திருமேனியை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென பக்தர்கள் விரும்பினர். அன்றிரவு, அக்கோயிலிலுக்கு வரும் அனைத்து பக்தர்களின் கனவிலும் ஒருமித்த நிலையில் நாராயணன் தோன்றி, "தான் கலியுகத் தெய்வமாக திருமலை ஸ்ரீநிவாசப்பெருமாளாக மலையிலிருந்து கீழே வந்து எழுந்தருள்வதாகத் தெரிவித்தார். 

பக்தர்கள் அனைவரும் ஸ்ரீநிவாசப்பெருமாளை அர்ச்சாவுருவமாக சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தருள்வித்து கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். சொத்து சுகம் வேண்டாதோர், அதீத பக்தியுடையோர், தம் குலம் விளங்க தானம் செய்ய விரும்பியோர் நித்திய பூஜைகள், உற்சவாதிகள் சிறப்புடன் நடைபெறவும் தமது சொத்துக்களை கோயிலுக்கு எழுதி வைத்து, கோயில் பணிகள் சிறப்புடன் நடைபெறவும் ஏற்பாடு செய்தனர்.

ஸ்ரீநிவாசனை நம்பினோர் வேண்டியது கிடைத்து சிறப்புற விளங்கவும் தொடங்கினர். அப்பகுதி மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதோடு, பெருமாள் கண்கண்ட தெய்வமாகவும், அவ்விடம் அபிமானத்தலமாகவும் விளங்கத் தொடங்கியது.

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பத்மாவதி தாயாரும், ஆஞ்சநேயப் பெருமானும் ஸ்ரீராமர், ஆண்டாள் மற்றும் தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் பக்தர்களுக்கு தங்களுடைய அருளை வாரி வழங்கி அனைவரையும் மேன்மைப்படுத்தினர்.

இத்தலத்தில் வேண்டிவந்து வணங்கும் தன் இறையன்பர்களின் தேவைகளை வேண்டியவாறு பூர்த்தி செய்து, எல்லா நலன்களையும் தருவதால் பக்தர்கள் வருகை எப்போதும் குறைவின்றி விளங்கத் தொடங்கியது.

திருமலையில் நடைபெறும் அதே உற்சவ நாள்களில் சித்திரைப் புத்தாண்டு, சித்திரை சதயம், திருவாதிரை முடிய ஸ்ரீஉடையவர் உற்சவம் -10 நாள்கள் உள்பட, மார்கழி மூல நட்சத்திரத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி பகல்பத்து - இராப்பத்து உற்சவம் என ஆண்டு முழுவதும் உற்சவங்கள் இத்திருக்கோயிலில் தொடர்ந்து நடைபெறுகின்றன. மார்கழியில் நடைபெறும் அத்யயன உற்சவத்தில் பகல் பத்தை விட இராப்பத்து விழா சிறப்பானதாக நடக்கும். 

இவ்வாண்டு இராப்பத்து உற்சவம் ஜனவரி 13 -இல் துவங்கி, 23-ஆம் தேதி வரை சிறப்பு அலங்காரங்களுடன் நடைபெறுகிறது.

அமைவிடம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் தெருவில் ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 044-2819 3439 / 98424 16402. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com