சங்கடங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார்

ஸ்ரீரங்கம் கோயிலில் சக்தி வாய்ந்த சக்கரத்தாழ்வார் தனி சந்நிதியில் கோயில் கொண்டு விளங்குகிறார்.  சனிக்கிழமைகளில் மக்கள் திரளாக வழிபடுகின்றனர். 
சங்கடங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார்

ஸ்ரீரங்கம் கோயிலில் சக்தி வாய்ந்த சக்கரத்தாழ்வார் தனி சந்நிதியில் கோயில் கொண்டு விளங்குகிறார்.  சனிக்கிழமைகளில் மக்கள் திரளாக வழிபடுகின்றனர். 

நித்தியசூரிகள் 
திருமாலுக்கு ஐந்து ஆயுதங்களை சிறப்பாகக் கூறுவார்கள்.  இவர்களை "நித்தியசூரிகள்"  என அழைப்பர்.  இவர்களில் சக்கரப்படையாக இருந்து சேவை செய்பவர் "சுதர்சனம்' என அழைக்கப்படுகிறார்.  திருமாலைவிட்டு அகலாத நிலையில், தொண்டு செய்கிறார்.

சுதர்சன் 
திருவாழி ஆழ்வான், திகிரி, ஷேதிராஜன், சுதர்சன், சக்கரத்தண்ணல்  என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.  "சுதர்சன்'  என்ற பெயருக்கு நல்வழி காட்டுபவர் என்பது பொருள். ஞானம் அளிப்பவர்,  ஆரோக்கியம் அழிப்பவர்,  செல்வம் தருபவர், விரோதிகளை அப்பவர் எனப் போற்றப்படுகின்றார். 

சக்கரத்தாழ்வாரின் உருவ அமைப்பை சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.  8 அல்லது 16 கரங்களுடன் நெருப்பு ஜுவாலை போன்ற முடி அமைப்புடன் முகத்தில் கடைவாய் பற்களுடன் மூன்று கண்களுடன் காட்சி தருகிறார்.  அறுகோண அமைப்பில் எழுந்தருளி அருள்புரிகின்றார்.  பின்புறத்தில் யோக நரசிம்மரின் வடிவைக் காண்கிறோம். சிவனால் நிர்மாணிக்கப்பட்ட சக்தி வாய்ந்த சக்கரம் ருத்ர சக்தியை தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ளது. 

மகா சுதர்சனத்தை வழிபடுபவர்கள் மகேஸ்வரான சிவனையும் திருமாலையும் வழிபட்ட  புண்ணியத்தைப் பெறுகின்றனர்.  சுதர்சன சதகம், சுதர்சனமாலா மந்திரம், சுதர்சன காயத்ரி போன்றவை சக்கரத்தாழ்வார் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன.

ஆழிக்கல் 
மாமல்லபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி குகையில் உள்ள சிற்பங்களில் திருமாலை வணங்கும் கோலத்தில் மனித வடிவில் காட்சி தருகிறார்.  கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வார்க்கு  "சக்கரபாணி கோயில்'  என்று தனிக் கோயில் உண்டு. திருமோகூர், காஞ்சிபுரம்,  திருவெள்ளறை முதலிய  கோயில்களில் சக்கரத்தாழ்வார் சிறப்பாக வழிபட பெறுகிறார்.  வைணவக் கோயில்களுக்கு நிலம் தானமாக அளிக்கும்பொழுது, சக்கரம் பொறித்து எல்லைக் கல் நடுவார்கள். இதனை ஆழிக்கல் என 
அழைப்பர்.

ஸ்ரீரங்கம் கோயில்
ஸ்ரீரங்கம் கோயிலில் கோயில் கொண்டு விளங்கும் சக்கரத்தாழ்வார் மூலவர் 16 கரங்களுடன் காட்சி தருகிறார்.  மூலவரைச் சுற்றி 108 அட்சரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூலவர் சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோக நரசிம்மரின் வடிவம் காணப்படுகிறது.  உற்சவருக்கு எட்டு கரங்கள் உள்ளன. கிழக்கு நோக்கிய சந்நிதியின் வாயிலில் இடது தூணில் ஆஞ்சநேயரை வழிபடுகிறோம். சந்நிதி திருச்சுற்றின் மேற்கு மூலையில் ராமானுஜரை தெய்வமாகக் கருதி ராமானுஜர் நூற்றந்தாதியை பாடிய திருவரங்கத்த
முதனார் சேவை சாதிக்கிறார். 

வரலாற்றுச் சிறப்பு
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஜடாவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டில் "திருவாழி ஆழ்வார்" என அழைக்கப்படுகின்றார். இங்கு "குலசேகரன் சந்தி' என்ற வழிபாடு நடத்த தீர்மானிக்கப்பட்டதை அறிய முடிகிறது. 
விஜய நகர மன்னன் விருப்பான் காலத்தில் கோயில் விமானம், கோபுரம், மண்டபம் ஆகியன கட்டப்பட்டன. பாச்சல் கிராமத்தில் நிலம் வழங்கப்பட்டது. திருவாழி ஆழ்வாருக்கு அமுது படைப்பதற்காக ஸ்ரீரங்க நாராயண ஜீயர் நிலம் அளித்ததாக இரு கல்வெட்டுகள் அளிக்கும் செய்தியால் அறிய முடிகிறது. "கோயில் ஒழுகு' என்ற நூலிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

திருப்பள்ளி ஓட உத்ஸவம்
ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் பெருமாளுக்கு "திருப்பள்ளி ஓட உத்ஸவம்' முன்பு நடைபெற்றது. காவிரி வெள்ளத்தால் ஓடம் செல்லத் தொடங்கியது. பக்தர்கள் கலங்கினர். அப்பொழுது கூர நாராயண ஜீயர் சுதர்சன சதகத்தால் சக்கரத்தாழ்வாரை துதிக்க திருப்பள்ளி ஓடம் கரைக்கு வந்து சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

எந்தத் தீய சக்தியையும் எதிர்த்து அழிக்கவல்லது மகாசுதர்சனம் என்று சுதர்சன மூல மந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மந்திரம்,  தந்திரத்தை அழித்து,  நல்லவர்களைத் துயரங்களிலிருந்து காக்க வல்லது சுதர்சன சக்கரம்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த சக்கரத்தாழ்வாரை வழிபட்டு, சங்கடங்கள் நீங்கி வளம் பெறுவோம்.

-கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com