பொருநை போற்றுதும் - 200

தனித்தனியாக இருந்த எண்மரும், சிவனாரின் ஆணைப்படி, மகிஷனை அழிப்பதற்காக ஒன்று சேர்ந்தனர்.
பொருநை போற்றுதும் - 200

தனித்தனியாக இருந்த எண்மரும், சிவனாரின் ஆணைப்படி, மகிஷனை அழிப்பதற்காக ஒன்று சேர்ந்தனர். இவ்வாறு ஒன்றான வடிவமே சாமுண்டி. சாமுண்டி மகிஷனை அழித்தாள். மகிஷன் தவறை உணர்ந்து அம்பிகையின் சிங்க வாகனம் ஆனான். அம்பிகையும் மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படலானாள். 

ஆக, அம்பிகையின் ஒரு வடிவமேமுத்தலை கொண்ட முப்பிடாதி அம்மன். முத்தலைஎன்பதற்கேற்ப, இவளுக்கு ஆறு கரங்கள் இருப்பதுண்டு. பல்வேறு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, சிங்கத்தின் மீது அமர்ந்தவளாகவும் இவளை ஒருசில சிற்பங்களில் காணலாம். 

பிள்ளை வரம் தருபவளாகவும், கல்வியையும் ஆற்றலையும்தருபவளாகவும் இவள் வழிபடப்படுகிறாள். இவள் மீது ஏராளமான நாட்டுப்புறப் பாடல்களும் வில்லுப்பாட்டுப் பாடல்களும் உள்ளன.  வைகாசி மாதத்தில் இவளுக்கு பேருற்சவம் நடத்துவது வழக்கம். "ஓம் த்ரிவதனாயை ச வித்மஹே, த்ரிசூலஹஸ்தாயை ச தீமஹி, தன்னோ தேவி ப்ரசோதயாத்'  என்றொரு காயத்ரியும் இவளுக்கு உண்டு. 

தாமிரவருணிக் கரை தெய்வங்கள் என்று பார்க்கும்போது, சாஸ்தாவுக்குத் தனியிடம் உண்டு. ஐயனார்,  சாஸ்தா,  ஐயப்பன் ஆகிய தெய்வங்கள் மூன்றுமே ஒரே கடவுளின் அம்சங்களே. காவிரிக்கரையில் ஐயனார் என்னும் பெயர் பிரபலம்; பொருநைக்கரையில்,  ஒரு சில இடங்களில் ஐயனார் என்றழைக்கப்பட்டாலும்  (எடுத்துக்காட்டாக, சொரிமுத்து ஐயனார்),  பல இடங்களில் சாஸ்தா என்றே வழங்குவது வழக்கம்.  பூரணை,  புஷ்கலை என்னும் தேவியர் இருவரும் சாஸ்தாவின் தர்மபத்தினியராகக் காட்சி தருவது வழக்கம். 

இவ்வகையில், கொழுமடை சாஸ்தா வெகு பிரசித்தம்.  சாஸ்தா என்னும் வடமொழிப் பெயருக்கு "ஆசிரியர்,போதிப்பவர்' போன்ற பொருள்கள் உண்டு. சாஸ்தா வழிபாடு தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாகப் பரவியிருந்தது என்பதைக் காட்டும் வகையில்,பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சாத்தன் என்னும் பெயரும்,பண்டைத்தமிழ்ப் புலவர்கள் குறித்த பதிவுகளில் சாத்தனார் என்னும் பெயரும்காணப்படுகின்றன. 

சிலப்பதிகாரப் பதிவுகளில் சாத்தன் என்னும் பெயர் புத்தருக்கு வழங்கப்பட்டாலும், தேவாரப் பதிகத்திலும் இப்பெயர் காணப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்கலாம்.  சாதவாகனன் (யானை வாகனர்) என்னும் பெயராலும் இவர் குறிக்கப்படுகிறார்.

மேலச்செவலுக்கு அருகிலுள்ளது கொழுமடை.  இங்கு, தர்மசாஸ்தா எழுந்தருளியிருக்கிறார்.  ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர், கீழச்செவல் நதிக்கரையில் சுயம்பு லிங்கமாகவும், அதனுள் சாஸ்தா வடிவமாகவும் பரம்பொருள் தம்மை வெளிப்படுத்திக் கொண்டாராம்.  காலப்போக்கில், இவ்விடம் முழுவதும் மண்ணடித்துப் போனது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக, நிலத்தை உழும்போது, லிங்கமும்சாஸ்தாவும் வெளிப்பட்டதாக ஐதிகம். 

யோகாசனத்தில்அமர்ந்தவராக,வாகனமான யானை முன்னால் நிற்க, மலர்ந்த முகத்தோடு காட்சி தருகிறார். ஆதிசாஸ்தா என்றும்,சட்டநாதர் சாஸ்தா என்றும் பெயர்கள் வழங்கப்பெறுகின்றன. 

பல்வேறு குடும்பங்களுக்குக் குல தெய்வமாகத் திகழும் கொழுமடை சாஸ்தாவுக்குப் பண்டிகை நாள்கள் யாவுமே சிறப்பு நாள்கள் எனினும், ஒவ்வொரு சனிக்கிழமையும் வெகு சிறப்பு. 

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com