உடனே அருளும் உத்தம நரசிம்மர்!

நாராயணன்  யோக நரசிம்மராக   விருச்சிக மாதத்தில் விசுவாமித்திரர், ஸ்ரீவசிஷ்டர்..
உடனே அருளும் உத்தம நரசிம்மர்!

நாராயணன்  யோக நரசிம்மராக   விருச்சிக மாதத்தில் விசுவாமித்திரர், ஸ்ரீவசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிவர்களுக்கும்,  ஒரு கடிகை (நொடிப்பொழுது) நேரம் சோளிங்கர் திருமலையில் காட்சி தந்ததால்  இத்திவ்ய தேசம் "கடிகாசலம்' என பெயர் பெற்றதாக  வரலாறு. 

யோகஸ்தானத்தின் அருகில்  போகஸ்தானத்தில் உறையும் நரசிங்கபுரம் கல்யாண நரசிங்கரை வழிபட பில்லி, சூனியம்,  சத்ரு பயம் அகலுவதோடு, லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும்.  தீராத கடன், ரோகம்  நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு  வந்து பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.  இவர் கல்யாண லட்சுமி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகிறார்.

முனிவர்களுக்குக் காட்சி தந்த இடத்தில் அமைந்திருந்த கோயில் பல்லவர்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர், சிதிலம் அடைந்து, சோழர்கள் காலத்திலும், விஜயநகர அரசர்கள் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. முதலாம் குலோத்துங்கன் ,முதலாம் விக்கிரமாதித்தியன் காலத்துக் கல்வெட்டு
களும் காணப்படுகின்றன. 

கல்வெட்டுகள் மூலம்   விஜயநகர அரசர்கள் காலத்தில் கோயில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. நரசிங்கபுரத்தைச் சுற்றியுள்ள 31 சிற்றூர்கள் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன . 

16}ஆம் நூற்றாண்டில் அரசாண்ட வீரவேங்கடாபதி தேவமஹாராயர், அச்சுததேவ மகாராயர் போன்றவர்கள்  காலத்தில் இக்கோயில் மிகவும் உன்னதமான  நிலையில் மக்கள் வழிபாட்டில் இருந்துள்ளது.

ஜெயங்கொண்ட சோழநல்லூரான சந்திரகிரி ராஜ்ஜியத்து தென்கரை மணவிற் கோட்டத்து கூவம் தியாகசமுத்திர நல்லூரான நரசநாயக்கர்புரத்தில் அமைந்துள்ளது எனப்படுகிறது.
நரசிங்கபுரத்துக்கு அருகில் உள்ள  மப்பேட்டைச் சேர்ந்த தளவாய் அரியநாத முதலியார், விஜயநகர அரசர்களிடம் அமைச்சராகப் பணியாற்றினார். அவர் காலத்தில் இக்கோயிலுக்கும், மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலுக்கும் பல திருப்பணிகளைச் செய்துள்ளார்.

கோயில் ஐந்து நிலையோடு கூடிய அழகிய ராஜகோபுரம்,  கொடி மரம், பலிபீடம்,  மஹா மண்டபம்,  முன்மண்டபம், அர்த்தமண்டபம் தாண்டி கருவறையில் இருதள விமானத்தில்  மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், மகாலட்சுமியை மடியில் அமரவைத்து,   அணைத்தபடி  பக்தனுக்கு அருளும் அனுக்ரக மூர்த்தியாய்  வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி அருள் தருகிறார். திருமகள்  பெருமாளுடன் சேர்ந்து பக்தனை நேர்பார்வை பார்த்தபடி அமர்ந்திருப்பதால்  தரிசிப்பவர்களுக்கு அருளோடு பொருளும் கிடைக்க அருள்பாலிக்கிறார்.

 மூலவருக்கு எதிரில் சுமார் 4 அடி உயரத்தில் கம்பீரமாக 16 நாகங்களைத் தன் உடலில் தரித்துக் கொண்டிருக்கும் கருடாழ்வாரை தரிசிக்கலாம்.  உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன்,   அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம்.

தென்மேற்கில் கிழக்கு நோக்கி, 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் ஆகர்ஷிக்கும்  சிரிப்புடன் அருளுகிறாள். முன் மண்டபத்தில்  ஆழ்வார்களும், சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் தரிசனம் தருகின்றனர். வாரத்தில் வியாழனில் கருடன், அனுமனையும்  வெள்ளி தாயாரையும்  சனி ஞாயிறு ஆகிய நாள்களில் பெருமாளையும் வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ள உகந்த தலம்.

நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இந்த நாளில் தரிசனம் செய்வது உகந்தது. தரிசித்து 8,16,32  சுற்றுகள் என வலம் வந்து ,பிரார்த்தனைகள் செய்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சித்திரை பெüர்ணமி, ஆனி 10 நாள் பிரமோத்ஸவம்,  நரசிம்ம ஜயந்தி,  ஆடிப் பூரம், வைகுண்ட ஏகாதசி, கருட வாகன புறப்பாடு,  ஸ்ரீராம நவமி, 
திருவாடிப்பூரம் ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.   காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரை,  மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாகத்தில் இருந்து 3 கிமீ. தொலைவில் அமைந்துள்ள தலம் நரசிங்கபுரம். 

தொடர்புக்கு: 9487194649, 8072934248 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com