நலமே நல்கும் நீலன்

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் தென்னலக்குடி எனப்படும் திருநீலக்குடி உள்ளது.
நலமே நல்கும் நீலன்

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் தென்னலக்குடி எனப்படும் திருநீலக்குடி உள்ளது. இங்குள்ள கோயில் இறைவன் பெயர் மனோக்ஞநாதர்.  இரட்டைஅம்பாள்இருவேறு சந்நிதிகளில் இருக்கின்றனர். 

நலமும் வளமும் ஆயுள் அபிவிருத்தியும் செய்யும் தலமாக சாலையோரம் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற கோயில். நீள் வயலில் விளைந்துள்ள நெல்லின் மணத்துடன் கோயிலுக்கு முன்னால் தேவி தீர்த்தம் என்ற பெரிய தீர்த்தக்குளம்உள்ளது. 

கோயில் கட்டும் முன் வில்வக் காடாக இருந்தது.  இவ்வனத்தில் சிவன் விரும்பி வந்து குடிகொண்டதால் வில்வாரண்யேஸ்வரர் என்று பெயர்.  தல மரம் மருத்துவக் குணங்கள்கொண்ட பஞ்ச வில்வங்களில் மஹா வில்வம் ஆகும் .

பிரம்மன் ஊர்வசியைப் படைத்தவுடன் சிறிது சலனப்பட்டுப் போனதால், உண்டான பாவம் போக்க இங்கு வந்து தீர்த்தக் கிணறு எடுத்து அபிஷேகம் அர்ச்சனைசெய்து வழிபட்டு பாவம் போக்கினார்.  ஆதலால் பிரம்மனுக்குத் தலைவன் என்ற பெயரில் "பிரும்மநாயகர்' எனப்படுகிறார்.

லிங்க வடிவ மூலவர் } சிறப்பான, அதிசய மூர்த்தியாகும்.  இங்கு மூலவரின் தைலாபிஷேகம் சிறப்பானது. கருவறையில் இருக்கும் லிங்கத்தின் மீது எண்ணெய் அபிஷேகம் செய்தால் அது சுவாமிக்குள் இறங்கி ஐக்கியமாகிவிடுவதால் "தைலாப்பியங்கேசர்' என வழிபடுகின்றனர்.

இத்தலத்தில் இறைவனை காமதேனு பசு வந்து வணங்கி இங்கேயே தங்கி இறைவனை வழிபடத் துவங்கியதால் இது காமதேனு பசுவின் ஊராகி,  இறைவனுக்கு காமதேனுபுரீஸ்வரர் என்ற காரணப் பெயரும் வழங்குகிறது.

அழகம்மை என்கிற நிகரில்லாதவள் என்னும் அநூபமஸ்தனி என்ற பெயரில் திருமணக் கோலத்தில் நின்றவாறுஅருளுகிறாள்.தவக்கோலம்மை என்கிற பக்தாபீஷ்டபிரதாயினி என்ற தவக்கோலஅம்பாளும் உண்டு . 

கோயிலுக்கு முன்புறம் தவக்கோல அம்பாள் எடுத்த தேவி தீர்த்தம், உள்ளே  கிணற்று வடிவில் மார்க்கண்டேய தீர்த்தம்,  வெளியே பாரத்வாஜ தீர்த்தம்,  பிரமதீர்த்தக் கிணறு, காவிரிக்கரையோரம் க்ஷீரகுண்டம் என பஞ்ச தீர்த்தங்கள் உள்ள தலமாகும்.

அமுதுகடைந்த காலம் முதல் இறைவன் திருநீலகண்டராக மாறி, இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தலமாதலால் நீலகண்டர் உறையும் திருநீலக்குடி என தேவாரம் சொல்லுகிறது.
7}ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் தனது தேவாரத்தில் வைத்த மாடும் மனைவியும் எனத் துவங்கும் 11 பாடல்கள் கொண்ட தேவாரப் பதிகம் பாடியுள்ளார்.

கல்லில் எனைக் கட்டி கடலில் போட்டபோதும் "நெல்லுநீள்வயல் நீலக்குடிஅரன்'  என்ற நல்ல நாமம், சொல்லி அழைக்க அன்றே என் துன்பங்களில் இருந்து உய்ந்தேன் எனஊர், இறைவனின் சிறப்பை சொல்லும் தேவாரம் இந்த இறைவன் சக்தியைத் தெரிவிக்கும் கோயிலில் உள்ள பலா மரம் தெய்வீகமானது. 

சந்நிதியின்முகப்பு வாயிலைக் கடந்ததும் நேரே மூலவர் தரிசனம் கிடைக்கும். உள்பிரகாரத்தில் சூரியன், பிரம்மா வழிபட்ட பிரம்மலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர், சண்முகர், விசுவநாதர், மஹாலட்சுமி,  தெய்வீகப் பலா,  நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள் ,உள்ளன. இருஅம்பாள் சந்நிதிகளும்அடுத்தடுத்து உள்ளன.

மரண பயம், எம பயம் உள்ளவர்கள் இங்கு இறைவனைத் தொழுது, எருமைக் கன்று,  எள்,  நீலப்பட்டு முதலியவற்றை பரிகார தானம் செய்ய அவை நீங்கும். ராகு தோஷமிருந்தால் உளுந்து நீல வஸ்திரம், வெள்ளி நாகர்,  வெள்ளி பாத்திரம் தானம் செய்வது தோஷம் போக்கும் எனப்படுகிறது.  

சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி, கனகாபிஷேகம் ஆகியன இங்கு செய்துகொள்ளுவது மிக உயர்ந்தது. இவரை வழிபடுவதால் நோய்களில் இருந்து விடுபடுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி,  திருமணம் கை கூடுதல்,  மகப்பேறு உண்டாதல் போன்றவை நல்கும் என்பது ஐதீகம்.

கும்பகோணம் - காரைக்கால் சாலையில்,  கும்பகோணத்தை அடுத்துள்ளது. ஆடுதுறையிலிருந்தும் தென்னலக்குடிக்கு பேருந்து வசதி உள்ளது.
தகவல்களுக்கு 9789704070,  6374457549.

-இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com