முருகப் பெருமான் அருள்புரியும் கந்தசாமி கோயில்..!
By | Published On : 21st October 2022 05:39 PM | Last Updated : 21st October 2022 05:41 PM | அ+அ அ- |

முருகன் வழிபாட்டில் சிறந்து விளங்குவது செய்யூர் கந்தசாமி கோயிலாகும். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கிழக்கே அமைந்துள்ளது இத்தலம்.
முருகனுடைய ஊர் என்பதால் "சேய்யூர்' என அழைக்கப்படுகிறது. மேலும், செய்கை, செயூர், செய்கையம்பதி, வல்லவன் நகர், அயில் வனம் எனவும் குறிப்பிடுவதைக் காணலாம். இதுவே காலப்போக்கில் மருவி "செய்யூர்' என இன்று அழைக்கப்படுகிறது.
முருகன் பிள்ளைதமிழ், சேயூர் கலம்பகம், சேயூர் முருகன் உலா, சேயூர் முருகன் பதிகக் கோவை, சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெஞ்சு விடு தூது போன்ற இலக்கியங்களில் சேயூரின் நிலவளம், தலச்சிறப்புப் பற்றி விரிவாகக் கூறப்படுவதைப் படித்து மகிழலாம்.
திருக்கோயில்கள்: இவ்வூரில் சோழ மன்னர்கள் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வன்மீக நாதர், கைலாசநாதர், கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில்களில் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தலச்சிறப்பு: 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 பூத வேதாள கணங்கள் முருகனை வழிபட்ட தலம் இது. காசி முனிவருக்கும் மாயை என்பவளுக்கும், சூரபத்மன், சங்கமகன், தாரகன் என்ற மூன்று அசுரக்குமாரர்கள் பிறந்து தேவர்களுக்கு பல வகையிலும் துன்பம் அளித்தனர். தேவர்கள் அழிஞ்சில் மரங்கள் நிறைந்த பகுதியில் சிவனை வேண்டி துதிக்க இறைவன் தன்னிலிருந்து பைரவரை தோற்றுவித்தார். பைரவரிடமிருந்து பூதகணங்கள் தோன்றின. நந்தியம்பெருமானும், கணபதியும் பூதப்படைகளுக்கு தலைமை ஏற்று அசுரர்களை அழித்தார்கள். சிங்கமுகாசுரன், தாரகன், சூரபத்மன் ஆகியோரை முருகன் அழித்தார். இந்திரன் தனது மகள் தெய்வானையை முருகனுக்கு மனம் செய்வித்தார்.
சூரபத்மனை போரில் அழிக்க உதவிய பைரவரின் பூத வேதாள கணங்கள் வள்ளி } தெய்வானையுடன் முருகனின் திருமணக் கோலத்தைக் காண விரும்புகின்றனர். இத்தலத்தில் முருகன் தனது தேவியருடன் காட்சி அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.
கோயில் சிறப்பு: கிழக்கு நோக்கிய கருவறையில் முருகன் தனது இரு தேவியருடன் எழுந்தருளி அருள்புரிகின்றார். திருச்சுற்றில் சுவர்களில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வேதாளகணங்கள் சிற்ப வடிவில் காட்சித் தருவது சிறப்பாகும். ஒவ்வொரு தெய்வ வடிவத்துக்கும் அருகே பெயர் உரிய நட்சத்திரமும் எழுதப்பட்டுள்ளது.
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியில் "வேதாள கணம் புகழ் வேலவனே" எனப் போற்றப்படுவதையும் குறிப்பிட வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாள்களில் தமது நட்சத்திரத்துக்கு உரிய வேதாள கணங்களை வழிபட்டு அவர் மூலமாக தமது வேண்டுதல்களை முருகன் நிறைவேற்றி அருள் புரிவது இத்தலத்தின் சிறப்பு.
கோயில் அமைப்பு: கருவறையில் எழுந்தருளியுள்ள முருகனின் சந்நிதி வாயிலில் துவார பாலகர்களாக சுவீரன், சுஜனன் ஆகிய இருவரும் காட்சி தருகின்றனர். கருவறை தேவகோட்டங்களில் முருகனே நடனமாடும் } நிருத்த ஸ்கந்தர், பால ஸ்கந்தர், பிரம்ம சாஸ்தா, சிவகுருநாதர், புளிந்தர் (துர்க்கை அம்மனுக்குப் பதிலாக) ஆகிய வடிவங்களில் எழுந்தருளி அருள் புரிவது சிறப்பாகும். கருவறைக்கு எதிரில் கல்லிலே வடிக்கப்பட்ட வேல் அமைந்திருப்பதும் சிறப்பு.
கிழக்கு வாயிலின் இருபுறமும் பைரவரும் குகசூரியனும் எழுந்தருளியுள்ளனர். பைரவரின் மூலவர் முருகனை நோக்கியபடி அமைந்திருப்பதும் சிறப்பு. இதன் அருகே கோயிலுக்கு திருப்பணி செய்வித்த "கழுக்குன்றன்' சிற்பத் திருமேனியையும் கண்டு வணங்கலாம். திருச்சுற்றில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், சோமநாதர் என்ற பெயருடன் அருள் புரிய திருமாலும் } பிரம்மாவும் துவாரபாலர்களாக விளங்குகின்றனர். மீனாட்சி அம்மனும் எழுந்தருளியுள்ளார்.
தெற்கு நுழைவு வாயிலில் வல்லப கணபதி, வீரபத்திரர், நவ வீரர்களின் (வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசுவரன், வீரபுரந்திரன், வீரமார்த்தாண்டன், வீரராக்கதர், வீராந்திகன்) சிற்ப வடிவங்களும் காட்சித் தருவது சிறப்பாகும்.
வழிபாடுகள்: தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை பைரவாஷ்டமி, ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
-கி. ஸ்ரீதரன்,
(தொல்லியல் துறை - பணி நிறைவு).