மறந்ததை மஹாளயத்தில் செய்!
By DIN | Published On : 09th September 2022 06:13 PM | Last Updated : 09th September 2022 06:13 PM | அ+அ அ- |

mahalaya amavasya
உடல், உயிர், பொருள் அனைத்தும் முன்னோர் நமக்கு அளித்ததே. அவ்வாறு நாம் அனுபவிக்கும்போது பித்ருக்கள் செய்த ஒரு சில பாவ, புண்ணிய பலன்களையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.
பித்ருக்கள் எப்போதும் தங்கள் குலம் தழைக்க என்றும் ஆவலுடன் இருப்பவர்கள். அவர்கள் அடுத்த பிறவி எடுக்கும் வரையில் பித்ரு லோகத்தில் இருக்கும் வரையில் அவர்களுக்கு தாகமும் பசியும் எடுப்பதாக ஐதீகம். அதனைப் போக்கவே "பிதிர் தினங்கள்' என்றழைக்கப்படும், அமாவாசை, மஹாளயபட்ச நாள்களில் அதற்குரிய மந்திரம் சொல்லி எள்ளுடன் கலந்த நீரை கொடுக்கிறோம். அந்த நாள்களில் அவர்கள் நம் இல்லம் தேடி வந்து இதற்காகக் காத்திருப்பார்கள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இச்சடங்குகளையே திருக்குறளும் பிற இலக்கியங்களும் "நீத்தார் கடன்' என்று போற்றுகிறது.
முன்னோர்களுக்கு திதி கொடுக்காமலிருந்தால் அவர்கள் வருத்தத்துடன் திரும்பிச் செல்வர். தங்கள் குலம் வளர வேண்டும் என்று அவர்கள் ஆத்மார்த்தமாக விரும்பினாலும் அவர்களுடைய பசியும் தாகமும் அவர்களை வருத்தத்தமடையச் செய்யும். அதனால் சிலர் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.
இந்தச் சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. இதையே "பித்ரு தோஷம்' என்று கூறுகிறார்கள். இந்தத் தோஷம் நீங்காவிட்டால் எந்தப் பூஜைகளும், மற்ற பரிகாரங்களும் எதிர்பார்த்த பலன்களைத் தராது.
திதி கொடுப்பதென்பது மிகவும் எளிதான ஒன்று. நதிக்கரையிலோ, குளக் கரையிலோ அல்லது கடற்கரையிலோ, இல்லாவிட்டால் இல்லத்திலோ முன்னோரை நினைத்து அதற்குரிய மந்திரங்களுடன் சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே முன்னோர்களின் தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன
புராணங்கள்.
திதி கொடுப்பதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது. பித்ருக்களை நினைத்து நாம் செய்யும் தர்ப்பண பூஜைகள் நமக்குப் பொருளையும், ஆயுளையும், ஸ்வர்க்கப் பேறு முதலான சுப பலன்களையும் கொடுக்கும். பகைவர்களை ஓடச் செய்து, நமது குலத்தைத் தழைத்தோங்கச் செய்யும் என்றும் அது குறிப்பிடுகிறது. ஏன் நீருடன் எள்ளைச் சேர்க்கிறோம்? மகாவிஷ்ணுவிடமிருந்து அவர் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமென்றும், முன்னோர்கள் மகிழ்வர் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மானிடர்கள் மட்டுமல்ல; தெய்வங்களும் பூலோகத்தில் அவதரித்தபோது அவர்களும் பித்ரு கடன் ஆற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராமபிரான் தனக்காக உயிர் தியாகம் செய்த ஜடாயுவுக்கு தர்ப்பணம் செய்தார் என்பதும், திலதர்ப்பணபுரி (பூந்தோட்டம் கூத்தனூர் சரஸ்வதி கோயில் அருகில்) என்னும் தலத்தில் தன் தந்தை தசரத மகாராஜாவுக்கு திதி கொடுத்தார் என்பதும் புராண வரலாறு. அப்போது சிவன், ராமபிரானின் முன்பாகத் தோன்றி முன்னோர்களுக்கு பிதுர்கடன் செய்து, தர்ப்பணம் செய்ததால் எல்லா நன்மைகளும் உன்னைத் தேடிவரும் என்று அருளியதாகப் புராண வரலாறு கூறுகிறது.
தந்தை வழியில் காலமாகிவிட்ட தகப்பனார், தாத்தா, கொள்ளுத் தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, மற்றும் அதேபோல் அம்மா வழியில் அவர்களின் பரம்பரை, என்று பன்னிரண்டு பேருக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.
மஹாளயபட்சத்தில் திதி கொடுப்பது மிகவும் சிறந்தது. மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது. அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாள்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என தங்களுக்கு உணவும் நீரும் வழங்குவதை ஏற்று, தங்களின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் அவர்களை ஆசீர்வதித்து, திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு (2022) மகாளய பட்சம் செப். 11-ஆம் தேதி தொடங்கி, 26-இல் நிறைவடைகிறது. "மறந்ததை மஹாளயத்தில் செய்' என்ற வாக்கியப்படி இதுவரை திதி கொடுக்காமல் விட்டிருந்தாலும், இந்த மகாளயபட்ச நாள்களில் நம் முன்னோர்களையும்(பித்ருக்கள்), உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து அவர்களுக்குத் எள்ளும் நீருடன் திதி கொடுத்து, இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து பித்ருக்களின் பரிபூரண அருளாசியை பெறுவோம்.
- அபிராமி மைந்தன்