அனுக்கிரக மூர்த்தி சனீஸ்வர பகவான்

சைவக் குரவர்கள் திருநாவுக்கரசர்,  சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடி பெருமை சேர்த்த திருத்தலமாக விளங்குகிறது
அனுக்கிரக மூர்த்தி சனீஸ்வர பகவான்

சைவக் குரவர்கள் திருநாவுக்கரசர்,  சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடி பெருமை சேர்த்த திருத்தலமாக விளங்குகிறது திருநள்ளாறு அருள்மிகு பிரணாம்பிகை சமேத  தர்பாரண்யேஸ்வரர் கோயில்.  

திருநள்ளாறு ஈஸ்வரனைப் புகழ்ந்து சம்பந்தர்  நான்கு பதிகமும், திருநாவுக்கரசர்  இரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இந்தக் கோயிலின் தல விருட்சம் தர்ப்பை. தர்ப்பைக்காடு (ஆரண்யம்) செழித்து வளர்ந்த பகுதியில் ஈஸ்வரன் தோன்றியதால் தர்பாரண்யேஸ்வரர் என்ற நாமம் வந்தது.

"போக மார்த்த பூண்முலையாள்' என்று தொடங்கும் திருப்பதிக ஏட்டை, கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சம்பந்தர் இட்டபோது, ஏடு பச்சையாக நிலைப்பெற்று  நின்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் நின்றசீர் நெடுமாறன் காலத்தில் நடந்த இந்த நிகழ்வையொட்டி, இந்தக் கோயில் அம்பிகையான பிரணாம்பிகை பச்சைப் பதிகம் தந்த அம்பிகையாக அருள்பாலிக்கிறார்.

சப்தவிடங்க தலங்களில் திருநள்ளாறும் ஒன்றாகும். நள சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷம் அகல,  நளன் திருநள்ளாறு வந்து கோயில் தீர்த்தத்தில் நீராடி, பிரதான தெய்வமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபட்ட காரணத்தால், சனி விலகியதாக வரலாறு. 

தர்பாரண்யேஸ்வரர் வாக்கின்படி, சனீஸ்வர பகவான் கோயிலின் வட கிழக்காகத் தனியாக இருந்து அருள்பாலிக்கிறார்.  ஈஸ்வரன் தந்த அருள்வாக்கின்படி இங்குள்ள சனீஸ்வர பகவான் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

நளன் நீராடி விமோசனம் பெற்றதால் திருநள்ளாற்றில் உள்ள தீர்த்தத்துக்கு "நளதீர்த்தம்' என்ற பெயரும் உண்டானது. நளனுக்கு விமோசனம் கிடைத்தது முதல் இத்தலத்துக்கு வந்து தீர்த்தத்தில் நீராடி, தர்பாரண்யேஸ்வரரையும், அம்பிகையையும், சனீஸ்வர பகவானையும் வழிபடுவோருக்கு துன்பங்கள் நீங்குவதாக நம்பிக்கை.

இந்தக் கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.  பொதுவாக, உக்கிரமூர்த்தியாகிய சனி பகவான் இந்தக் கோயிலில் அனுகிரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அபய முத்திரையுடன் அருள் வழங்குகிறார். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபடும்போது நோய்கள் தீருதல், செல்வ வளம் பெருகுதல், அச்சம் விலகுதல் உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதாக ஐதீகம். 

சனீஸ்வர பகவான் பிரதானமாக நின்று  அருள் வழங்குவதால், இந்தக் கோயிலில் நவ கிரக சந்நிதி கிடையாது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம், தியாகராஜராட்டம், தெப்பம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்தக் கோயிலில் தங்கத்தாலான காக வாகனம் உள்ளது. பிரம்மோற்சவம், சனிப்பெயர்ச்சி விழா காலத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா நடைபெறுகிறது.

சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு: இந்தக் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்புக்குரியதாகும். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி,   டிசம்பர் 20}ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு கிரகப் பெயர்ச்சியை குறிப்பிடும் வகையிலான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. 

இந்த நாளில் சனீஸ்வரபகவானுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை போன்றவற்றில் பங்கேற்க கோயில் நிர்வாகத்தில் பதிவு செய்யவேண்டும். புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 04368-236530.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com