என்றென்றும் ராமன்-2: தெலுங்கு உலகில் ராம பக்தி!

​இராமகதை பலராலும் பலமுறை எழுதப்பட்டுவிட்டது.  ஒவ்வொரு நாளும் உணவு அருந்துகிறோம் என்பதற்காக உண்ணாமல் விட்டு விடுவோமா?
என்றென்றும் ராமன்-2: தெலுங்கு உலகில் ராம பக்தி!


இராமகதை பலராலும் பலமுறை எழுதப்பட்டுவிட்டது. ஒவ்வொரு நாளும் உணவு அருந்துகிறோம் என்பதற்காக உண்ணாமல் விட்டு விடுவோமா? இராமகதையும் இப்படித்தான்  எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம், வாசிக்கலாம், நேசிக்கலாம். இராம நாமத்தின் பெருமையை இவ்வாறு விவரிப்பவர் யார் தெரியுமா? ஆதுகூரி மொல்ல (அல்லது மொல்லமாம்பா) என்னும் 15}ஆம் நூற்றாண்டு தெலுங்குக் கவிதாயினி.  இராமகாதையை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இராமாயண விழுமியங்களை வருங்காலத் தலைமுறைகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய பேச்சு மொழியில் காவியம் படைத்தார். பத்யங்களும் (செய்யுள்கள்), வசனங்களும் (உரைநடை) கலந்த இக்காப்பியத்துக்கு மொல்ல ராமாயணம் என்றே பெயர். 

மொல்ல ராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் நூதனமானதொரு நிகழ்ச்சி. கங்கைக் கரையில் குகனைச் சந்திக்கிற இராமன், தங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டுகிறான். மகிழ்ச்சியுடன் குகன் தலையசைத்தாலும், உள்ளுக்குள் சிறிதே அச்சம். இராமனுடைய பாதத் தூளியை ஏந்திக் கொண்டு, கல் ஒன்று பெண்ணாகிவிட்டது. 

ராமு பாதமுலு சோகின தூளி வஹிஞ்சி ராயி யே
ருபதநொக்க காந்தயயென்னட பன்னுக நீதனி பாதரேணு
யெடவடி நொடùஸôகே நாதி யெட்லகுனொயனி சம்சயாத்முடை
கடிகே குஹுநுடு ராமபாத கஞ்சயுகம்பு பயம்புபெம்புனான்

கல் பெண்ணானதைப் போல், இராமனின் பாதத் தூளி பட்டால், இந்தப் படகு என்னாகுமோ..? அச்சத்தோடு ஐயப்பட்டுக் கொண்டே, (பாதத் தூளிகளை நீக்குவதற்காக) இராமனின் பாதங்களை குகன் கழுவினான். அத்யாத்ம இராமாயணத்திலும் இந்த நிகழ்வு காணப்பட்டாலும், மொல்லமாம்பா வர்ணிக்கும்போது, இன்னொரு நயமும் கூடிவிடுகிறது - இராம அணுக்கம் இத்தகைய மாற்றத்தைத் தோற்றுவிக்கும் என்றால், நம்மையும்கூட இராமநாமம் எவ்வாறெல்லாம் மேம்படுத்தும்! 

பாரதத்தின் பிற பகுதிகளைப் போலவே, இராமனும் இராமாயணமும், தெலுங்கு நாட்டின் அன்றாட அங்கங்கள்.  கைப்பிள்ளையைக் குளிப்பாட்டும்போது, தவறாமல் தாய்மார்கள் உச்சரிக்கும் மந்திரம்: ஸ்ரீ ராம ரக்ஷô; நூறெல்லு ஆயுசு ளஸ்ரீ ராமன் காக்கட்டும்; (உனக்கு) நூறு ஆயுள்ன. 

தெலுங்கு இராமாயணங்களில், நான்கு நூல்கள், இராமகாதையை முழுமையாகத் தருபவை: ரங்கநாத ராமாயணம், பாஸ்கர ராமாயணம், கொட்ட வரதராஜு ராமாயணம், மொல்ல ராமாயணம். இவை தவிர, அய்யலராஜு ராமபத்ருடு இயற்றிய ராமாப்யுதயம், திம்மகவி ராமாயணம், எர்ரண்ண ராமாயணம், அன்னமய்ய ராமாயணம், கொரவி சத்யநாராயண ராமாயணம், அனந்த கவி ராமாயணம், திக்கண்ணாவின் நிர்வசனோத்தர ராமாயணம், ராகவ பாண்டவீயம், சுக்ரீவ விஜயமு,  ரகுநாத ராமாயணம் என்று ஏராளமான இராமகாதைகள். இவற்றுள் சில முழுமையாகவே கிடைக்கவில்லை; சிலவற்றில் சில பகுதிகள் கிட்டவில்லை.   ஆனால், கிடைத்திருப்பவை இராம உணர்வின் அமுதத் துளிகள்! 

இராமகாதையைச் செவியுற்றவர்களுக்கு, பாலம் கட்ட உதவிய அணிலைப் பற்றியும் தெரிந்திருக்கும். உலகின் பிற பிரதேசங்களில் வாழ்கிற அணில்களுக்கு முதுகில் கோடுகள் கிடையாது. இந்தியப் பனை அணில் அல்லது முப்பட்டைப் பனை அணில் என்று பெயர் பெற்று, தென்னிந்தியா, இலங்கை போன்ற பகுதிகளை இயற்கைத் தாயகமாகக் கொண்ட அணிலுக்கு, முதுகில் மூன்று கோடுகள் உள்ளன. சேதுப் பாலம் கட்டுவதற்குத் தலைப்பட்டபோது, இந்த அணில் வர்க்கம் உதவியதாம்; உதவிக்கு நன்றி கூறும் வகையில், தன் கையிலெடுத்து இராமன் தடவிக் கொடுத்தான்; ஆகவேதான் மூன்று கோடுகள்! 

இந்த அணில் கதை, ஆதி காப்பியமான வான்மீகத்தில் இல்லை. இராமாயணக் கணக்கு என்றால், தெலுங்கின் ரங்கநாத இராமாயணத்தில்தான் இக்கதை முதலில் தலைகாட்டுகிறது. ஆனால், அதற்கும் முன்னதாக அணில் தகவலை நமக்கு உரைப்பவர், தொண்டரடிப்பொடி ஆழ்வார். குரங்குகள் மலையையும் மலைப் பாறைகளையும் தூக்கிக் கொண்டு ஓடின. ஆனால், சின்னஞ்சிறிய அணில் பாவம், எந்தப் பாறையைத் தூக்க முடியும்? அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தது புத்திசாலியான அணில். கடல் நீரில் குளித்துவிட்டு மண்ணில் புரண்டது; ஈர உடலில் மண் துகள்கள் ஒட்டிக் கொள்ள, அப்படியே கொண்டு போய், பாலக் கட்டுமானத்தில் உதிர்த்தது. 

"குரங்குகள் மலையை நூக்க, குளித்துத் தாம் புரண்டிட்டோடிதரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலம் போலேன்' என்பது ஆழ்வாரின் பாசுரம். பாறைகளுக்கு இடையில் மண்ணை உதிர்த்து, அலைகடல் நீரை அடைக்கப் பார்த்தது அணில். கற்களுக்கு இடையில் சிமெண்டோ காங்க்ரீட் கலவையோ இடுவதாக எண்ணியதோ! 

இதே தகவலை ரங்கநாத ராமாயணம் தருகிறது. சேதுப் பாலம் கட்டத் தொடங்குகிறார்கள். கடினமான அந்தச் செயலில், முதல்நாள் 14 யோஜனை தொலைவுக்குத்தான் பாலம் கட்ட முடிகிறது. ஆனால், மூன்று நாள்களில், ஏறத்தாழ 85 யோஜனைகளுக்குப் பாலம் கட்டிவிட்டார்கள்.  சிறிதளவே மிச்சம். நான்காம் நாள் காலை, பாலப் பணிகளைப் பார்வையிட இராமன் சென்றான். கூடவே இலக்குவன், வீடணன், சுக்ரீவன் ஆகியோர். குரங்குகளெல்லாம் கற்களையும் மலைகளையும் மரங்களையும் நளனிடம் தந்து கொண்டிருக்க. எங்கிருந்தோவொரு சிறிய அணில் அங்கு வந்தது. ‘மிக விரைவாகவே, பாலக் கட்டுமானம் நிறைவடையவேண்டும்; வீரக் குரங்குகள் இவர்களுக்கு நானும் உதவவேண்டும்' என்றே அணிற்பெண்ணாள் ஆலோசித்தாள். 

இராமத் திருவடிகளை தியானித்தபடியே கடலுக்குச் சென்ற அவள், தன்னையே நீராட்டிக் கொண்டாள். மண்ணில் புரண்டாள். பாலத்தின் பரப்புக்குச் சென்று, பாறைகளின் மீதுநின்று, தன்னையே உலுக்கிக் கொண்டாள். மணல் துகள்கள் உதிர்ந்துபோக, மீண்டும் கடலுக்குச் சென்றாள். மீண்டும், மீண்டும்..

"அங்கே பார் லக்ஷ்மணா, மண்ணெல்லாம் உதிர்க்கும் அந்தச் சிறிய ஜீவனைப் பார். பாலத்தின் கற்களின் இடைவெளிகளை மண்ணால் நிரப்புகிறாள். எவ்வளவு அன்பு! தன்னால் இயன்றதை அன்போடு செய்கிறாள்' என்றுரைத்த இராமன், "அவளை அழைத்து வா, நான் சந்திக்கவேண்டும்' என்று ஆவலோடு சுக்ரீவனுக்கு ஆணையிட்டான். 

அணிலரசியை அழைத்து வந்த சுக்ரீவன், இராமன் கரத்தில் அவளை இட்டான். தன்னுடைய வலது கையை அவள் முதுகில் வைத்து, மூன்று விரல்களால் இராமன் தடவிவிட, மூன்று கோடுகள் அங்குத் தோன்றின. இலக்குவனும் சுக்ரீவனும் வீடணனும் தத்தம் கரங்களில் அவளைத் தாங்கி வாஞ்சையை வெளிப்படுத்தினர்.
ஆழமான பக்தியைக் குறிப்பதற்கு, "உடுத பக்தி' (உடுத = அணில்) என்னும் சொல்லாட்சியே தெலுங்கில் தோன்றிவிட்டது.   
ரங்கநாத இராமாயணத்தை இயற்றியவர் கோன புதரெட்டி என்பவர். வான்மீகத்திலோ கம்பரிலோ இல்லாத சில அற்புதங்களைத் தம்முடைய காப்பியத்தில் சேர்த்துள்ளார். இந்திரஜித்தன் இறந்துவிட்டான். தன்னுடைய கணவனோடு இணைந்து விடவேண்டுமென்று அவன் மனைவி சுலோசனா தவிக்கிறாள். 

"மகனே, எப்படியாயினும், விபீஷணர் இருக்கும்போது கவலையில்லை; உன்னைப் பார்த்துக் கொள்வார்' என்று மகனிடம் கூறிவிட்டுப் புறப்படுகிறாள். கணவன் உடலைப் பெற்றுக் கொடுக்கும்படி மாமனார் இராவணனிடம் யாசிக்கிறாள். மகன் உடல் பகைவர்களின் இடத்தில் கிடப்பதால் தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று பத்துத் தலையன் கையை விரிக்கிறான்.  தானே புறப்படுகிறாள். தேவலோகத்து அரம்பை வந்துவிட்டாளோ என்று அனுமனும் பிறரும் அதிசயிக்க, இராமன் இருக்குமிடம் செல்கிறாள். அடைக்கலம் கோரி அவள் நிற்க, ஏறத்தாழ இந்திரஜித்தனை உயிர்ப்பிக்கும் எண்ணத்திற்கு இராமன் சென்றுவிடுகிறான்.

அனுமனுடைய வாக்கு, இராமனை நிகழுலகம் கொணர, அங்கதனை அழைத்து இந்திரஜித்தன் உடலை அவளிடம் ஒப்படைக்கப் பணிக்கிறான். உள்ளத்தில் இராமபக்தியோடு இலங்கையை அடைந்து இராவணனைச் சந்திக்கிறாள். இராமனின் கருணையை, இலக்குவனின் மரியாதையை, வீடணன் அன்பை, சுக்ரீவன் வல்லமையைக் கண்களில் கண்ணீரோடு விவரிக்கிறாள்.

பகைவர்களும் இராமனை மதித்தனரா? 
இராமகாதையின் நுட்பமே இதுதானே! பகைவர்கள், வேண்டப்படாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் யாரும் கிடையாது. எல்லோரையும் அரவணைப்பதுதான் இராமநுட்பம். 
சுலோசனா என்ன, இராவணனே இராமனைப் போற்றுவதும் ரங்கநாத இராமாயணத்தில் உண்டு. 

இராமனை அச்சுறுத்துவதாக எண்ணிக்கொண்டு, அணிகலன்களையெல்லாம் அனைவரையும் அணியச் செய்து, ஆயிரம் குடை பிடிக்கச் செய்து, அரண்மனை கோபுரத்தின்மீது அமர்ந்து, பத்துத்தலையன் சபை நடத்துகிறான் ஆடம்பரப் பளபளப்பைக் கண்ட இராமன், புன்சிரித்துக்கொண்டே அம்பெய்ய, குடைகளை வீழ்த்தி, அணிகலன்களை அகற்றி, கிரீடங்களைத் தள்ளி, சாமரங்களை நீக்கி, அத்தனையையும் ஒற்றை அம்பே சாதித்துவிடுகிறது. இராவணன் வியக்கிறான். 

நல்லவோ ரகுராம, நயனாபிராம, வில்லவித்யா குருவ, வீராவதார, வாபுரே ராம பூபால, லோகமுல நீபாடி வில்லுகாடு நேர்ச்சுனே கலுக  "வில்லாற்றலில் நினக்கு நிகரானவர் யார் ராமா?' என்னும் இராவண வியப்பில்தான் எவ்வளவு பொருள்! பத்து வாய்களாலும் நீண்ட நேரம் இராமபுகழ் பாடினானாம் இராவணன். சபையினர் தடுத்தபோது, இராமபுகழை யாரும் முழுதாகப் பாடமுடியாது என்று வேறு இயம்பினானாம். 
இராவணன் கொடுத்து வைத்தவன், பத்து வாய்கள் இருந்தனவே, என்று தோன்றுகிறதில்லையா? 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com