என்றென்றும் ராமன்-3 மலையாள ராமன்- எழுத்தச்சன் வழியில்...

பாரத தேசத்தின் பிற பகுதிகளைப் போலவே, மலையாளப் பகுதிகளிலும் இராமகாதை நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்துள்ளது.
என்றென்றும் ராமன்-3 மலையாள ராமன்- எழுத்தச்சன் வழியில்...
Updated on
3 min read

பாரத தேசத்தின் பிற பகுதிகளைப் போலவே, மலையாளப் பகுதிகளிலும் இராமகாதை நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்துள்ளது.  சேர நாடாக இந்தப் பகுதிகள் இருந்த காலத்திலேயே, சேரமானாகத் திகழ்ந்த குலசேகர ஆழ்வார், இராமனுக்குத் தாலாட்டு இசைத்தார். மலையாள மரபின் தொடக்கக் காலங்களில், செவி வழியிலான கதைப் பாடல்களிலும் நாட்டுப்புற இசையிலும், இராமாயண நிகழ்ச்சிகளும் கதைக் கூறுகளும் நிரம்பவே இருந்தன. 
11}ஆம் நூற்றாண்டின் நிறைவுக் காலத்தில், நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் நிறையத் தோன்றின. அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில், இவ்வகைப் பாடல்கள் பல்கிப் பெருகின. இந்தக் காலகட்டத்தை மலையாள இலக்கியத்தின் பாட்டுக் காலம் (அல்லது பாட்டிலக்கிய காலம்)  என்றே குறிப்பிடுகின்றனர். 

இன்றளவும் மலையாளத்தின் முதல் இராமகாதையாகக் கருதப்படுவது பாட்டிலக்கியமாக அமைந்துள்ள ராமசரிதமே.  சீராமன் என்பவர் இயற்றிய ராமசரிதம், வால்மீகி இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடியொற்றி, கதைப் போக்கில் எந்த மாற்றமும் இல்லாமல், 164 படலங்களில் 1814  செய்யுள்களைக் கொண்டுள்ளது. யுத்தம் நடக்கையில் கூறப்படுகிற முன் நிகழ்வுகளாகக் கதையின் பிற பகுதிகள் காணப்படுகின்றன. பண்டிதர்களுக்காக இல்லாமல், பொதுமக்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கோடு அமைந்த ராமசரிதத்தின்படி, இராமன் மகாவிஷ்ணுவின் அவதாரம். தமிழ்க் கலப்பு நிறைந்தது இக்காவியம். 

பாட்டிலக்கிய முறையிலேயே 14}ஆம் நூற்றாண்டில் எழுந்தது அய்யிப்பிள்ளா ஆசானுடைய ராமகதாப்பாட்டு. 3,163 செய்யுள்களில், உத்தர காண்டம் தவிர்த்த ஆறு காண்டங்கள், வால்மீகியின் வழிமுறையில் அமைந்துள்ளன. இசை நாடகமாக கிராமிய மக்கள் இதனைச் சுவைத்தார்கள். பேச்சுத் தமிழ்க் கலப்பு நிறையவே இதில் உண்டு. 

14}ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், ராம பணிக்கர் என்னும் கவிஞரால் இயற்றப்பட்டது  கண்ணச ராமாயணம். கண்ணசம் என்பது கவிஞரின் குடும்பப் பெயர். ஏழு காண்டங்களும் 3059 பாட்டுகளில் தரப்பட்டுள்ளன. மலையாளத்தின் முதல் முழுமையான இராமகாப்பியம் என்றே இதனைப் போற்றுவதுண்டு. தமிழிலக்கியத்துக்குக் கம்பராமாயணம் போல், மலையாளத்துக்குக் கண்ணசராமாயணம் என்றும் சிலாகிப்பதுண்டு. 
பின்னர், 15}ஆம் நூற்றாண்டில் எழுந்தது, புனம் நம்பூதிரியின் பாசராமாயண சம்பு. 20 பிரபந்தங்களில் 1879 செய்யுள்களாக அமைந்துள்ள இந்த மணிப்பிரவாள காப்பியத்தில், இராவணனுடைய ஜாதகம் பற்றிய குறிப்பும் உள்ளது. 
இத்தனை இராமாயணங்களா? ஆமாம். இன்னமும் உண்டு. 

கொட்டாரக்கர தம்புரானின் ராமனாட்டம் (17}ஆம் நூற்றாண்டு), கதகளிக்கான பல்வேறு ஆட்டக் கதைகளில் காணப்படும் இராமாயணக் கதைக் கூறுகள், குஞ்சன் நம்பியாரின் அஹல்யாமோக்ஷம், கும்பகர்ணவதம், ராவணவதம் உள்ளிட்ட துள்ளல் பாடல்கள், கோட்டயம் கேரள வர்மா உள்ளிட்ட பலரின் இராமாயண நிகழ்ச்சி ஆதாரத் துள்ளல் பாடல்கள் என்று இந்த வரிசை நீளும்.

தவிரவும், இராமாயண நிகழ்வுகள் அல்லது கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட சிறு சிறு பாடல்நூல்களும் உள்ளன. 

இராமாயணக் குறத்திப்பாட்டு, சீதாவிலாசம் அம்மானப்பாட்டு போன்றவற்றைக் காட்டலாம். வால்மீகி இராமாயணத்தின் மலையாள மொழிபெயர்ப்புகள் - கேரள வர்மா, மகாகவி வள்ளத்தோள் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் பிரபலமானவை. இராமன்மீதான பெருமிதத்தால் எழுந்த நூல்களும் ஏராளம். குமாரன் ஆசானின் பால ராமாயணம், பத்மநாப குரூப்பின் ராமசந்த்ரவிலாஸம், எஸ். கே. நாயரின் கம்பராமாயண மொழிபெயர்ப்பு, கோபால குரூப்பின் ராமசரித மானஸ மொழிபெயர்ப்பு என்று அடுக்கலாம். 

இந்த வரிசையில்தான்,  துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனுடைய அத்யாத்ம ராமாயணக் கிளிப்பாட்டு நெடிதுயர்ந்து நிற்கிறது. மலப்புறம் பகுதியில் திரூர் என்னும் ஊரில் இவர் பிறந்திருப்பினும், தமிழ்நாடு உள்ளிட்ட பற்பல பகுதிகளுக்கும் சென்று வடமொழி உள்ளிட்ட மொழிகள் பலவற்றை இவர் கற்றதாகத் தெரிகிறது. 

கற்கிடக(கடக மாதம் = ஆடி மாதம்) மாதமானது இராமாயணம் ஓதுகிற மாதமாகப் போற்றப்படுகிறது (இராமாயண மாதம் என்றே பெயர்); இந்த மாதத்தில், வீடுகளிலும் ஆலயங்களிலும் கிளிப்பாட்டை ஓதுவது வழக்கம். சிவன் - பார்வதி உரையாடலில் வருகிற இராம காதையைக் கிளியொன்று எடுத்துரைக்கிறது. 

ஸ்ரீ ராம நாமம் பாடி வந்ந பைங்கிளிப் பெண்ணே
ஸ்ரீ ராம சரிதம்  நீ சொல்லீடு மடியாதே
சாரிக பைதல் தானும் வந்திச்சு வந்த்யன்மாரே
ஸ்ரீ ராம ஸ்துதியோடே பறஞ்ஞு துடங்ஙினாள்

"இராம நாமத்தை உரைத்துக் கொண்டே வந்துள்ள அழகிய கிளியே, தயக்கமின்றி இராம கதையை எனக்குக் கூறு' என்று கவிஞர் கேட்க, பைங்கிளிப் பெண்ணும்பெரியோரை வணங்கி, இராமன் புகழ் கூறும் கதையை உரைக்கத் தொடங்கினாள். 

மறுநாள், இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், அயோத்தி மக்கள் யாரும் இரவு உறங்கவில்லையாம். மறுநாள் காலையில் இராமனைக் காண்பதற்காக, ஆர்வத் துடிப்போடு விழித்திருந்தனர்.  பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று எவரும் அன்றிரவு  உறங்கவில்லை. திருமுடிப் பட்டம் பளபளக்க, மஞ்சள் பட்டணிந்து, அணிமணிகள் பூண்டு, நூறு மன்மத கந்தர்வர்கள் ஒன்றிணைந்த அழகோடு,புன்னகை வதனத்தோடு, இலக்குவன் வெண்குடை பிடிக்க, யானை மீதேறி இராமன் வருவதைக் காணும் களிப்பில் இரவெல்லாம் அவர்கள் விழித்திருந்தனர். 

ராத்ரியாம் ராக்ஷஸி போகுன்னதிலென்னு
சீர்த்த விஷாதமோடெüத்சுக்யம் உட்கொண்டு
மார்த்தாண்ட தேவனே காணானஞ்ஞுநோக்கியும்

இரவென்னும் அரக்கி இன்னமும் போகவில்லையே என்று வருந்தினார்கள்; கதிரவனை இன்னமும் காணோமே என்று கலங்கினார்கள்; மகிழ்ச்சியும் தவிப்புமாகக் கண்விழித்துக் காத்திருந்தார்கள். 

கைகேயியின் வரங்களால், இராம பட்டாபிஷேகம் தடைப்படுகிறது. தந்தையைக் காண வருகிறான் இராமன். அவனைக் கட்டித் தழுவ முற்படும் தயரதனார், மயங்கிச் சரிகிறார். தான் கேட்ட வரங்களைத் தந்துவிட்டு, அவற்றைக் கூறுவதற்கு இயலாமல் தயங்குகிறார் என்பதை விளக்கும் கைகேயி, "தந்தையின் வாக்கை மகன் காப்பாற்ற வேண்டும், தந்தையைப் புரிந்துகொள்' என்று இராமனிடம் விவரிக்க முற்படுகிறாள்.  

இராமன் கொடுக்கும் விடை, அவன் மனத்தின் அகலத்தையும் அவன் அன்பின் ஆழத்தையும் தெளிவாகக் காட்டும். 

தாதன் அர்த்தமாயிட்டு ஜீவனெ 
தன்னேயும்
மாதாவு தன்னேயும் சீதயெ தன்னேயும்
ஞான் உபேக்ஷிப்பான் அதினில்லா 
சம்சயம்
மனசே கேதம் எனிக்கு இல்லயேதும்
ரஹ்யமென்னாகிலும் தாதன் நியோகிக்கில்
த்யாஜ்யம் என்னால் மென்னறிக நீ 
மாதாவே
லக்ஷ்மணன் தன்னே த்யஜிக்கென்னு சொல்லிகிலும்
தல் க்ஷணம் ஞான் உபேக்ஷிப்பானறிக நீ - 

இதை எனக்குச் சொல்ல வேண்டுமா தாயே? தந்தையாருக்காக, எந்தவொரு சந்தேகமும் இல்லாமல், என் உயிரை, என் தாயை, ஏன் சீதையையும், மனதில் துயரமில்லாமல் விட்டுக் கொடுப்பேன். என் தந்தையார் விரும்பினால், தாயே, இந்த ராஜ்யத்தை விட்டுக் கொடுப்பேன்; அவர் கூறினால், அந்தக் கணமே இலக்குவனைக்கூட விட்டுக் கொடுப்பேன். 

எழுத்தச்சனுடைய இராமாயணத்தில் இராமபக்தியும், இராமனுடைய கருணாவிசேஷமும்தாம் பிரதான சிறப்புகள். ஒரு சில கதை மாற்றங்களும் உண்டு. கரனும் பிற அரக்கர்களும் அழிந்த பின்னர், இராவணனுடைய நடவடிக்கைகள் எவ்வாறிருக்கும் என்பதை உணர்ந்துகொண்ட இராமன், "உன்னைத் தூக்கிப் போக பிக்ஷý வடிவத்தில் இராவணன் வருவான்; எனவே, மாயா சீதையை உருவாக்கிப் பர்ணசாலையில் வைத்துவிட்டு, அக்னியின் இல்லம் சென்றுவிடு. இராவணன் அழிவுக்குப் பின்னர் சந்திப்போம்' என்று சீதையிடம் கூறுகிறான். 

ஆக, பர்ணசாலையில் இருந்தது மாயாசீதை; இராவணன் தூக்கிப் போனது மாயா சீதை; சிறை வைத்தது மாயா சீதை. பின்னர், அக்னிப்பிரவேசத்தில், நெருப்புக்குள்ளிருந்து அசல் சீதை வெளியே வர, மாயா சீதை உள்சென்று விடுவாள். இது இராமனையும் சீதையையும் அக்னியையும் தவிர, இலக்குவனுக்குக்கூடத் தெரியாது.  இந்தக் கதை மாற்றத்தின் காரணமே, இராமன்மீதும் சீதைமீதுமான பக்தி. அரக்கன் ஒருவன் பிராட்டியைத் தூக்குவதா என்னும் பக்தி (இதே மாற்றத்தை வடமொழி அத்யாத்ம இராமாயணத்திலும் துளசிதாசரின் இராம சரித மானஸத்திலும் காணலாம்). 

நிறைவாக ஒரு காட்சி. இராம பட்டாபிஷேகம் நிறைவடைந்து எல்லோருக்கும் பரிசுகள் வழங்கப் பெறுகின்றன. அனுமனுக்கு மாலையொன்றைச் சீதை அளிக்கிறாள். என்ன வரம் வேண்டுமென்று இராமன் அனுமனை வினவ, "ராம நாமம் கேட்டுக்கொள்வான் அனரதம், பூமியில் வாழுவான் அனுக்ரஹிசீடனம்' என்றே அனுமன் விண்ணப்பிப்பான். இராம நாமத்தைச் செவிமடுப்பதற்காக, பூவுலகில் வாழவேண்டும் } இதுவே வேண்டும்; இதுவே பேறு; இதுவே சுகம்; இதுவே களிப்பு. இராமநாமம் கேட்பதும், இராமனை நினைப்பதுமே நிறைவு. 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com