பித்ருக்களின் மகிமை

வீட்டில் பித்ரு காரியங்களான தர்ப்பணம், சிராத்தம் ஆகியன முடிந்தவுடன், தெய்வ காரியங்களான வாசலில் கோலம் போடுவது, விளக்கேற்றி பூஜை செய்வது ஆகிய முறைகளை முன்னோர் வகுத்து வைத்துள்ளனர்.
பித்ருக்களின் மகிமை
Updated on
2 min read

வீட்டில் பித்ரு காரியங்களான தர்ப்பணம், சிராத்தம் ஆகியன முடிந்தவுடன், தெய்வ காரியங்களான வாசலில் கோலம் போடுவது, விளக்கேற்றி பூஜை செய்வது ஆகிய முறைகளை முன்னோர் வகுத்து வைத்துள்ளனர்.  ஆகையால், வீட்டில் எந்த சுப நிகழ்ச்சிகள் செய்தாலும், பித்ருக்களைப் போற்றும் வகையில் முதலில் நாந்தி சிராத்தம் செய்துவிட்டுதான் ஆரம்பிப்பார்கள். நித்ய கர்மாவான பிரம்ம யக்ஞத்தில் தேவர்களுக்கு ஒரு முறையும், ரிஷிகளுக்கு இரு முறையும், பித்ருக்களுக்கு மூன்று முறையும் தர்ப்பணம் செய்கிறோம்.

சில தெய்வ சேத்திரங்களையே பித்ரு பரிகார சேத்திரங்களாக வைத்திருக்கிறார்கள். புராணங்களில் சில இடங்களில் தெய்வங்களே பித்ரு கர்மாக்கள் செய்ததாக உள்ளது. சில இடங்களில் தெய்வங்களே வந்து சிரார்ந்த உணவு சாப்பிட்டதாக உள்ளது. இதிலிருந்து நாம் நம் பித்ருக்களின் பலத்தையும், மகிமையையும் தெரிந்து கொண்டு குடும்பத்தில் பித்ருக்களின் பலத்தைக் கூட்டுவோம்.  

ஸ்ரீ ததீசி முனிவருக்கும் ஸ்ரீ சுவர்ச்சா தேவிக்கும் சிவனின் அம்சமாகத் தோன்றி அரச மரத்தடியிலேயே வளர்ந்ததால் "பிப்லாதர்' என்ற பெயர் பெற்றார். அதர்வண வேதத்தில் உள்ள "பிரஸ்னோபநிஷத்' இவர் இயற்றியது. ஒரு சந்தர்ப்பத்தில் சனி பகவான், பிரதி சனிக்கிழமை அதிகாலை அரச மரத்தை ஏழு முறை வலம் வந்து, அங்கு எறும்புகளுக்கு உணவிட்டு, பிப்லாதரை மனதில் நினைத்து வணங்குபவர்களுக்கு தாம் மனம் குளிர்ந்து அருள் புரிவதாக வரம் தந்தார். ஆகையால், வரும் சனிப் பெயர்ச்சியிலிருந்து மேலே கூறிய படி செய்து ஸ்ரீ பிப்லாதர் மற்றும் சனி பகவான் அருள் பெறுவோம்.  "ஓம் ஸ்ரீ பிப்லாத மகரிஷிப்யோ நமோ நம!' என்று மந்திரம் கூறுவது நன்று.  -மதுரகாளிதாசன்

நாடெங்கும் 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான். 108 திவ்ய தேசங்களில் 36 வைணவக் கோயில்கள் இருப்பதும் இங்குதான். வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும், சைவம் வளர்த்த 63 நாயன்மார்களும் பிறந்தது இங்குதான். சிவன் கோயில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பதும் தமிழ்நாட்டில்தான்.  பஞ்ச பூதக் கோயில்கள், நவக்கிரகக் கோயில்கள், 27 நட்சத்திரங்களுக்கான கோயில்கள் இருப்பதும் இங்குதான்.
பதிணெண்சித்தர்கள் வாழ்ந்து சமாதியானதும் தமிழ்நாட்டில்தான். பழந்தமிழர்கள் கொண்டாடும் ஐந்தினை கடவுளர்களான முருகன் (குறிஞ்சி),  திருமால் (முல்லை), இந்திரன் (மருதம்),  வருணன் (நெய்தல்), கொற்றவை (பாலை) இருப்பதும் தமிழ்நாட்டில்தான். ஆகவே, தமிழ்நாடு புண்ணிய பூமிதான்! 

-தேனி பொன்கணேஷ்

பிரதோஷம் என்பது திரயோதசி திதி என்னும் 13-வது திதியில் வருவதாகும். செவ்வாய்க்கிழமையன்று வரும் பிரதோஷம் விசேஷமானதாகும். அந்த நாளில் விரதமிருந்து சூரிய அஸ்தமனத்துக்கு முன் 90 நிமிடங்கள் சிவ தரிசனம் செய்வது உத்தமம். இதனால் கடன், நோய்களில் இருந்து நிவாரணமும், ஆயுள் ஆரோக்கியமும் உண்டாகும். கார்த்திகை, ஆவணி மாதங்களில் சனிக்கிழமையன்று வளர்பிறையில் வரும் பிரதோஷம் அதி உத்தமமாகும். அன்று சிவ பூஜை செய்து விரதமிருந்தால், சர்வ பலன்களையும் அடையலாம்.
-அண்ணா அன்பழகன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com