என்றென்றும் ராமன் 4: கன்னட மொழியின் இராமகாதைகளில் சில...

இந்திரனுடைய மகன் ஜயந்தன். வானுலக அதிபதியின் பிள்ளை என்பதனால் சற்றே மதர்ப்போடு இருந்தவன்.
என்றென்றும் ராமன் 4: கன்னட மொழியின் இராமகாதைகளில் சில...

இந்திரனுடைய மகன் ஜயந்தன். வானுலக அதிபதியின் பிள்ளை என்பதனால் சற்றே மதர்ப்போடு இருந்தவன். சித்திர கூடத்தின் சுந்தரவனக் காடுகளில் இராமனும் சீதையும் தங்கியிருந்த நேரம். அருகில் பாய்ந்து கொண்டிருந்த நதியில் இறங்கி ஒருவர்மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளையாடிய இராமனும் சீதையும், கரையேறினார்கள். இதற்குள்ளாக இலக்குவன் அவர்களுக்கான காய் கனிகளை ஆயத்தப்படுத்தியிருந்தான். உண்டு களித்தார்கள். அப்படியே அமர்ந்தார்கள். ஜயந்தன் கவனித்துக் கோண்டே இருந்தான்.

காகம் ஒன்றின் வடிவத்தை எடுத்தான் ஜயந்தன். சீதையின் பாதங்களைத் தொட முனைந்தான். காகம் ஒன்று தன்னுடைய கால் விரல்களைத் தொடுவதுபோல் வந்துவிட, பயந்துபோன சீதை,  அப்படியே இராமனைப் பற்றிக் கொண்டாள். வேகமாகப் பற்றியதில் அவளுடைய முழங்கை இடித்து நொந்தது. சீதையின் முகம் நோவினால் சுளிவதைக் கண்ட இராமனுக்குக் கோபம் பொங்கியது. அப்படியே கையை நீட்டி, சற்றே தொலைவில் இருந்த புல்லொன்றைக் கிள்ளி, காகத்தின் மீது ஏவினான்.

திருணாஸ்திரமாக மாறிய புல், நெருப்பைக் கக்கிக் கொண்டே காகத்தை விரட்டியது. ஜயந்தக் காகம், பிரம்மாவிடம் சென்றது; பலனில்லை. இந்திரனிடம் சென்றது; பலனில்லை.

சிவபெருமானிடம் சென்றது; பலனில்லை. திக்குத் தெரியாமல் காகம் பறந்து பறந்து அலைந்தபோது, தந்தையான இந்திரன் மகனிடம் ஓடோடி வந்தான்.  "எங்கு சென்றாலும் யாரைக் கேட்டாலும் யாராலும் உனக்கு அபயம் தர இயலாது.  திரிலோக நாயகனான இராமனிடமே செல். அபயம் யாசி'' என்று மகனுக்கு நல்வார்த்தை சொல்ல, சீதையும் இராமனும் அமர்ந்திருந்த கானகத்திற்கே காகம் திரும்பியது.  

இராமன் பாதங்களில் சரணடைந்தது. கஜேந்திரனையும் துருவனையும் இன்னும் பற்பல அடியார்களையும் காப்பாற்றிய எம்பெருமான் தன்னையும் காக்கவேண்டும் என்று யாசித்தது. 

இராமன் புன்சிரித்தான். ""எய்த பாணத்தை நிறுத்துவதென்பது இயலாது; ஆனாலும் அபயம் கேட்டுவிட்டாய்; எனவே தருகிறேன்'' என்று கூறிய இராமன், காகத்தின் உயிரை எடுக்காமல், அதன் கண்களில் ஒன்றை எடுத்து திருணாஸ்திரத்துக்கு இரை ஆக்கினார். காகம் உயிர் தப்பியது. ஆனாலும் பார்வை குன்றியது. இதனோடு இந்தக் கதை முடியவில்லை. அபயம் கேட்ட உயிருக்கு அபயம் தர வேண்டாமா? காகத்தின் ஒற்றைக் கண்ணுக்கே இருபக்கத்துப் பார்வையும் இருக்கும் என்று வரம் தந்தாராம். பார்வை முழுமையாகக் கிடைத்துவிடுமே! இராமனுடைய கருணாவிலாசத்தைக் குறிப்பதற்காக, வழக்கமான காகாசுரன் கதைகளில் இருந்து சற்றே மாற்றி, "ஒரே கண்ணில் இருபக்கத்துப் பார்வையும்' என்று இந்நிகழ்வை வழங்குகிறது, கன்னட மொழியிலுள்ள தொரவே (தோர்வே) இராமாயணம். குமார வால்மீகி என்றழைக்கப்பட்ட தொரவே நரஹரி அவர்கள், 15}ஆம் நூற்றாண்டில் இயற்றிய காப்பியம் இது. 

பாரதத்தின் பிற மொழிகள் போலவே, கன்னடத்திலும் ஏராளமான இராமகாதைகள் உண்டு. ஏதோவொரு வகையில் இராமன் எங்களுக்கு நெருக்கமானவன், அணுக்கமானவன் என்று கூறிக்கொள்ளும் மானுட விருப்பத்தின் வெளிப்பாடுகள்தாம் இத்தனை இராமாயணங்கள்.

12}ஆம் நூற்றாண்டு தொடங்கி, 20}ஆம் நூற்றாண்டு வரையிலும் கன்னடத்தில் எழுந்துள்ள இராமகாதைகளை வரிசையாகக் கூறினாலே மூச்சு முட்டும். பம்ப ராமாயணம், குமுதேந்து ராமாயணம், இராம விஜய காவியம், உத்தர ராமாயணங்கள் மூன்று (1560, 1600, 1637 ஆண்டுகளில் தனித்தனியாக இயற்றப்பட்டவை), அத்வைத ராமாயணம், மூலக ராமாயணம், இராமசந்திர சரித ராமாயணம், மார்க்கண்டேய ராமாயணம், பட்டலேஸ்வர ராமாயணம், சங்கர ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், மூலபல ராமாயணம், ஸ்ரீமத் ராமகதா அப்யுதயம், சீதா ராமாயணம், திருமலேச சரிதம், வரத விட்டல ராமாயணம், இராம அப்யுதேய கதா குஸýமஞ்சரி, ஸ்ரீ இராமபட்டாபிஷேகம், இராமகதாவதாரம், அத்புத ராமாயணம், இராம அச்வமேதம், இராமாயண சங்கிரஹம், ஜின ராமாயணம் மற்றும் சேஷ ராமாயணம்!

பண்டைய காலத்திலிருந்தே கங்க, சாளுக்கிய, இராஷ்டிரகூட மற்றும் ஹொய்சால அரசுகளில், சமண செல்வாக்கு இருந்தது. இதனால், இப்போதைய கர்நாடக மாநிலத்தின் பற்பல பகுதிகளில் சமணம் செழித்திருந்தது. இவற்றின் விளைவாக, சமண ராமாயணங்கள் பல, கன்னட மொழியில் எழுந்துள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள இராமகாதை களில் சில, சமண நெறியில் ஆனவை. இவை தவிர, சமண ராமாயணங்கள் என்னும் தனித்துவப் புகழோடு திகழ்பவையும் பலப்பல.

விமல சூரியின் பெüமசர்யு (2 / 3 நூ), சங்க தாசரின் வாசுதேவ ஹிண்டி (5 நூ),ரவிசேனரின் பத்மசரிதம் ( 10 நூ), சுயம்புதேவரின் பத்ம சரிதம் (8 நூ) ஆகியவை சுவேதாம்பர மார்க்கத்தையும், குணபத்திரரின் உத்தர புராணம் (9 நூ), ஹரிசேனரின் ப்ருஹத் கதாகோசம் (10 நூ), புஷ்பதந்தரின் மகாபுராணம் (10 நூ) ஆகியவை திகம்பரமார்க்கத்தையும் சேர்ந்தனவாகும். இவை தவிர, சீலாசார்யரின் செüபன்ன மகாபுருஷ சர்யு, பத்ரதேவரின் கஹாவளி, ஹேமசந்திரரின் த்ரிஷஷ்டி ச்லாகபுருஷ சரிதம், தேவ விக்ஞானியின் ராம சரிதம், மேகவிஜயரின் லகு த்ரிஷஷ்டி ச்லாக புருஷ சரிதம் போன்றவையும் இராமன் புகழைப் பேசுகின்றன. 

இராமகாதையின் ஏதேனும் சில கூறுகளையோ நிகழ்வுகளையோ கொண்டவை என்று இன்னுமொரு முப்பத்தைந்து நூல்களையாவது பட்டியலிடலாம். இந்த வரிசையில், கன்னட மொழியின் புகழ்மிக்க இராமகாதைகளில் ஒன்று, நாகசந்திரர் என்னும் அபிநவ பம்பரின் இராமசந்திர சரித புராணம் என்னும் பம்ப ராமாயணம்.மைசூரு தொல்லியல் ஆய்வகத்தின் முயற்சிகளால், பனையோலைகளிலிருந்து எடுத்தெழுதப்பெற்ற இக்காப்பியம், 1870}களில் நடைபெற்ற (அப்போதைய) மதராஸ் பல்கலைக்கழகத்தின் பிஏ தேர்வுகளுக்காகப் பகுதி பகுதியாக அச்சிடப்பட்டு, பின்னர் முழுமைப் பதிப்பைக் கண்டுள்ளது.

12}ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகசந்திரர், எடுத்த எடுப்பிலேயே, பாடுவதற்கான உயர்வை ராம காதையைத் தவிர வேறெதுவும் தந்துவிடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிடுகிறார். இராமகாதை என்னும் மிகப் பெரிய சமுத்திரத்தின் அமுதத்தைத் தேக்கிக் கொண்ட சிறிய குளமென்று தமது காப்பியத்தை அடக்கத்தோடு இவர் குறிப்பிடுவது அழகோ அழகு. சமண ராமாயணங்களுக்கே உரித்தான சில மாற்றங்கள் (கதை மாற்றங்கள் உட்பட), நாகசந்திரரின் காப்பியத்திலும் உண்டு.

இராமன் கானகம் ஏகிவிட, பரதன் ஆட்சி செய்கிறான்.

தசரதர் தீûக்ஷ பெற்றுவிடுகிறார். இராமனின் தாயான அபராஜித மாதேவியும் ராஜமாதா சுமித்திரையும் வருத்தத்தில் தவிக்கிறார்கள். இராமனையும் இலக்குவனையும் திரும்ப அழைத்து வரும்படி, கைகேயி பரதனைப் பணிக்கிறாள். பின்னர் அவளேயும் செல்கிறாள். ஆனாலும், பரதனை ஆளச் சொல்லி இராமன் திருப்புகிறான். அதிகார ஆசையாலன்றி, இராம தர்மத்துக்காக, பரதன் ஆள்கிறான்.

இராவணனுக்குப் பத்துத் தலைகள் எப்படி வந்தன? குழந்தையாக இருக்கும்போது, கழுத்தில் அணிந்திருந்த அணிகலனில் இராவணக் குழந்தையின் முகம் பிரதிபலித்தது; பத்து பிம்பங்கள் தோன்றிவிட்டன (ஆணவத்தாலும் மதர்ப்பாலும் இல்லாதவற்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டவன் பத்துத்தலையன் என்பதைச் சொல்லாமல் சொல்லும் தகவல்).

வாலியின் தங்கை ஸ்ரீபிரபை என்பவளைப் பெண் கேட்டான் இராவணன்.  அன்மார்க்கி (தர்ம நெறியை மீறுபவன் / மார்க்கத்தைப் புறக்கணிப்பவன்) ஒருவனுக்குச் சகோதரியைத் தரமாட்டேன் என்று வாலி மறுத்துவிடுகிறான். "மதாந்தம் தர்மான்னுகன் அல்லன்' என்றே சுக்ரீவனிடமும் பிறரிடமும், இராவணனைக் குறித்து வாலி சொல்கிறான்.

தண்டகவனத்தில் சஞ்சரிக்கும்போது, கிரெüஞ்ச நதியைத் தாண்டிய பகுதியில், கரன் ஆட்சி நடத்தும் வட்டாரத்துக்கு இராமன் "சீதை' இலக்குவன் மூவரும் வருகிறார்கள். கரனுடைய மனைவி, இராவணனின் தங்கையான சந்திரநகி. இவர்களின் பிள்ளைகளில் மூத்தவனான சம்புகன், எதேச்சையாக இலக்குவனால் அழிக்கப்படுகிறான். சந்திர நகியின் ஓலத்தால், கரனுக்கு உதவச் செல்கிற இராவணன், சீதையைக் கண்டு மயங்குகிறான். கரனோடு இலக்குவன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, இலக்குவனுடைய சிம்மநாதம் போல் ஒலித்து, இராமனை ஏமாற்றி, சீதையிடமிருந்து இராமனை அகற்றுகிறான். இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, சீதையை இராவணன் தூக்கிச் செல்ல, பின்னர் போர் மூள, இலக்குவனே இராவணனை அழிக்கிறான். 

சொல்லப்போனால், கதை முழுவதும், பல்வேறு போர்களில் ஈடுபடுவபவனும், வெற்றி பெறுபவனும் இலக்குவனே ஆவான். அவனுக்கு உதவுகிற பங்குதான், இராமனுடையது (இராமனால் முடியாதென்பதன்று; உயிர்க்கொலையை நிராகரிக்கும் சமண தத்துவத்தின்படி இராமன் யாரையும் கொல்லக்கூடாது). கரனுக்காக இராவணன் சிம்மாசனத்தை விட்டு எழும்போதே, "அஸ்மித புண்ய தசானன' பத்துத்தலையனின் புண்ணியம் அஸ்தமிக்கத் தொடங்குகிறது. மேன்மையில் 16 வில் நீளத்துக்கும் 18,000 ஆண்டுகளுக்கும் ஓங்குகிற இராமபட்டாரிகர், குபேராத்ரியில் முக்தி அடைகிறார் என்று கதை நிறைவடைகிறது. எந்த நெறியாயினும், எந்த மரபாயினும், இராமனுடைய 
அறமும் அன்பும் அருளும் எல்லோரையும் ஆள்கின்றன என்பது புரிகிறதில்லையா? 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com