கோவிந்தனை வென்ற கோதை!

உண்ணும் சோறு,  பருகும் நீர்,  தின்னும் வெற்றிலை யாவும் கண்ணனையே என பெரியாழ்வார் பெற்ற பெண் பிள்ளை கேட்டு வளர்ந்தாள்.
கோவிந்தனை வென்ற கோதை!

உண்ணும் சோறு,  பருகும் நீர்,  தின்னும் வெற்றிலை யாவும் கண்ணனையே என பெரியாழ்வார் பெற்ற பெண் பிள்ளை கேட்டு வளர்ந்தாள்.  தந்தையும் மகளும் இறைவன் திருப்பணியிலேயே தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். 

பெரியாழ்வார் ஆண்டாளை வளர்த்தார்.  அவளுக்கு கண்ணனின் பெருமைகளை உணவோடு கலந்து உணர்வோடு ஊட்டினார். பிறகு என்ன?  பூமாதேவியின் அவதாரமான கோதை சதா பெருமாளின் நினைவுடனே வளர்ந்தாள்.  எந்தப் பொருளைப் பார்த்தாலும் கண்ணனின் நினைவுகள் எனும் அளவுக்கு அவள் இருந்தாள். மண்ணைப் பார்த்த உடனேயே "ஓ! இது எம்பெருமான் வாமன அவதாரம் எடுத்தபொழுது தனது ஒரு பாதத்தால் அளந்த பூமி அல்லவா?,  எம்பெருமான் பாததுளிகள் நிறைந்தது அல்லவா!' என்று ஆர்ப்பரிப்பாள். 

வானத்தைப்பார்த்தவுடன், " மேக வண்ணன்,  நீல வண்ணனின் நினைவுகளால் உந்தப் பெற்று அவன் வீற்றிருக்கக் கூடிய வைகுந்தம் இதுதானோ?' என்று போற்றுவாள். 
கண்களிலே நீர் பெருகியவாறு கடல் வண்ணனை பூஜிப்பாள். நாகப் பாம்பு படமெடுத்து நின்றால் அச்சமின்றி அதன் பின்னாலேயே சென்று, ""இது எம்பெருமானுடைய படுக்கையாகிய ஆதிசேஷன்''  என்று சொல்லுவாள்.

இப்படி ஆண்டாள் நாச்சியாரை மயக்கமடையச் செய்துவிட்டாளே என் ஸ்ரீரங்கன் என்று பெரியாழ்வார் பாடுகிறார்.
இந்தச் சூழலில்தான் மார்கழி மாதம் வருகிறது.  தன்னுடைய தோழிகளுடன் கூடி ஸ்ரீவில்லிபுத்தூரையே கோகுலமாக்கி இறைவனைப் பாடி பாவை நோன்பை தொடங்குகின்றாள். பறை என்று சொல்லும் வீடு பேறு,  சொர்க்கம், அமரநிலையைத் தருகின்றவனான வாசுதேவனை பாடுகின்றார்கள். 

மார்கழி மாதம், மதி நிறைந்த நன்னாளில் அவர்கள் கூடுகின்றார்கள்.  "பக்திக்குத் தேவை வைராக்கியம் என்னும் உறுதிப்பாடு.  எனவே ஆயர்பாடியில் நிரம்ப கிடைக்கின்ற பால், தயிர்,  நெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள மாட்டோம்.  நல்ல உயர்ந்த வேலைப்பாடு உடைய ஆடைகளை அணிய மாட்டோம். கண்களிலே அழகுக்காக மை தீட்டிக் கொள்ள மாட்டோம். தலைமுடியே மறைக்கும் அளவுக்கு மலர்களைச் சூட மாட்டோம்.  நம் முன்னோர்கள் சாத்திரங்களில் கூறிய நடைமுறைகளைத் தவிர வேறொன்றையும் செய்ய மாட்டோம்.  
இறைதுதிப் பாடல்களைத் தவிர வேறு ஏதும் பாட மாட்டோம்.  எளிமை,  அன்பு,  பக்திகளைக் கொண்டு எங்களால் இயன்றவரை ஏழை எளியவர்களுக்கு வேண்டும் பொருள்களைக் கொடுத்து உதவி செய்வோம்.  கண்ணனையே எண்ணி பேச்சும், மூச்சுமாக இருப்போம்' என்று கூறி விரதத்தைத் தொடங்குகின்றனர். 

விடியற்காலையில் பனி மழை பொழிகிறது.  மன உறுதியுடன் எழுந்து,  தோழிமார்களை எழுப்பி கண்ணனின் புகழை பாடுகின்றார்கள். "இந்த உலகம் அளந்தவனின் திருவடிகளைப் போற்றி! தென் இலங்கையில் இராவணனின் தீமையை அழித்தவனே போற்றி! கன்றாய் வந்த அரக்கனை, மரத்தின் மேல் பழமாய் இருந்த அரக்கன் மேல் எறிந்து இருவரையும் கொன்றவனே! தனது தாயுள்ளம் கொண்ட பெருங்குணத்தால் காட்டாற்று வெள்ளமெனப் பெய்த மழையில் இருந்து ஆயர் குல மனிதர்கள்,  மாடுகள், பறவைகள் என எல்லா உயிர்களையும் கோவர்த்தன கிரியைத் தனது ஒற்றை விரலால் தாங்கிக் காத்த தயாள குணம் உடையவனே போற்றி! வெல்லும் தகைமையுடைய ஆயுதங்களைக் கொண்டவனே போற்றி' எனப் பாடி புகழ்கின்றார்கள். 

தனது பக்தியால், வைராக்கியத்தால், தாயுள்ளம் எனும் பொறுமையால் உலகின் தலைவனான கோவிந்தனை வென்று அவனுடன் கலக்கின்றாள். கோதை கேட்டது கிடைத்தது என்பதால் கூடாரவல்லி (மார்கழி 27)  திருநாளில் நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு கண்களுக்கு மை தீட்டி, ஆபரணங்களை அணிந்துகொண்டு, வாச நறுமலர்களைச் சூடிக்கொண்டு முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு (அக்காரவடிசில்)  சாப்பிட்டு அகத்திலும்,  புறத்திலும் மகிழ்கின்றார்கள். 

மானிடப் பெண்ணாகப் பிறந்து இறைவனுடன் கலக்க முடியும் என்பதைப் பக்தியால் காட்டியவள் அன்னை கோதை ஆண்டாள். கூடாரவல்லியை முன்னிட்டு, அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தேவகோட்டை ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பகல் பத்து, இராப் பத்து உத்ஸவங்கள் டிசம்பர் 23 முதல் தொடங்கியது. ஜன. 11 வரை நடை
பெறவுள்ளது.  மார்கழி 27 (ஜனவரி 11), கூடாரவல்லி திருநாளில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. கோயிலில் பிரசாத மாலைகளைப் பெற்றால்,  திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com