தீர்வு கிடைக்கும் பரிகாரத் தலம்!

பூமீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இறைவன் அருளால் வழிபடுபவர்களுக்கு நில வில்லங்கங்களுக்கும், பிரச்னைகளுக்கும் சுமுகத் தீர்வு கிடைக்கிறது.
தீர்வு கிடைக்கும் பரிகாரத் தலம்!

பூமீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இறைவன் அருளால் வழிபடுபவர்களுக்கு நில வில்லங்கங்களுக்கும், பிரச்னைகளுக்கும் சுமுகத் தீர்வு கிடைக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட படப்பையை அடுத்துள்ள செரப்பணஞ்சேரி அருகே 4 கி.மீ.  தொலைவில் உள்ளது உமையாள் பரணச்சேரி கிராமம்.  ஒருகாலத்தில் யாகங்கள் நடைபெற்ற புண்ணிய பகுதி. இங்குதான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அருள்மிகு உமையவள் உடனாகிய அருள்நிறை பூமீஸ்வரர் கோயில்  வழிபாட்டில் இருந்திருக்கிறது. இந்தக் கோயிலைப் பற்றி தேவ பிரசன்னத்தின் மூலம் அற்புதமான தகவல்கள் அறியப்பட்டன. அதன்படி, ஜெகன்மாதா பார்வதி தேவிக்கே உரிய நாமங்களில் ஒன்று "உமா'. அதன் அடிப்படையில் அன்னை உமாதேவி,  உமை,  உமையவள், உமையாள் என்றெல்லாம் அறியப்படுகின்றாள். 108 உபநிடதங்களில் ஒன்று "கேநோபநிஷத்'. 

சாம வேதத்துடன் தொடர்புடையது. இந்த உபநிடதத்தில் "உமா' என்ற திருநாமம் மிகவும் சிலாகித்துச் சொல்லப்படுகிறது. அதன் பிரகாரம் அம்பிகையின் வடிவம் இந்திரன், வாயு, அக்னி ஆகிய மூன்று தேவர்களாலும் வழிபடப்படுவதாக விவரிக்கிறது. அந்த உமையாள் என்ற பெயரை இத்தலத் தேவி கொண்டிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

வாமனராக அவதாரம் செய்து மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் கேட்ட திருமால் இத்தல ஈசனை வழிபட்டதாகவும், அதன் பொருட்டு சுவாமி பூமீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான்,  இறைவனை "உமையாள் கணவா எனை ஆள்வாய்' என்று பாடிப் பரவுகிறார்.  சிவமும், சக்தியும் சேர்ந்த நிர்மல சொரூபமாகவே ஈசனை வணங்கிய திருஞானசம்பந்தர் தனது கோளறு பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் உமையுடன் இறைவன் திகழும் திருக்கோலத்தைப் போற்றி துதிக்கின்றார்.

கல்வெட்டுச் சிறப்பு: சிதைந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் சம்புவராய மன்னன் ஸ்ரீ இராசநாராயணன் காலத்தைச் சேர்ந்ததாகும் (1337).  சந்தி விளக்கு எரிக்க தானம் அளித்த செய்தியும் உள்ளது. மற்றொன்றில், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டு கோட்டத்து, வெளிமாநல்லூர் நாட்டுப் பிரிவில் இக்கோயில்  "கணபதீசுவரம் உடைய நாயனார்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

தற்போது பழைய கோயிலில் கிடைக்கப் பெற்ற தூணில் புடைப்புச் சிற்பம் போன்று காட்சி தரும் பெரிய தாரா லிங்கத்தையே வைத்து வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பூமீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இத்தல இறைவன் அருளால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு பூமி, நில சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுகமான தீர்வு கிடைக்கப் பெறுகிறது.  அந்த வகையில் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

பழைமை குன்றாமல் கோயிலில் புனருத்தாரணம் செய்து சீரமைக்கும் பணிக்காக கிராம மக்கள் திருப்பணிக் குழுவை அமைத்து,  திருப்பணியை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணிக்கு குரோம்பேட்டை திருக்கோயில்கள் வழிபாட்டுக் குழு அன்பர்கள் தகுந்த ஆலோசனை நல்குவதுடன், உறுதுணையாக இருந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தம் பொற்கரங்களால் ஒரு நர்மதை பானம் அளித்து திருப்பணி விரைவில் நிறைவேற ஆசியும் வழங்கியுள்ளார். இந்திரன், வாயு, அக்னி தேவன் கை கூப்பிய நிலையில், இரண்டு திருக்கரங்களில் ஒன்று அபய ஹஸ்தமமாகவும், மற்றொன்றில் அல்லி மலரைக் கையில் ஏந்தியும், சுமார் 3 அடி உயரத்தில் உமையாள் அம்பிகை சிலை நூதனமாக செய்யப்பட்டு தற்போது தானிய வாசத்தில் உள்ளது. அர்த்த மண்டபமும், 3 நிலை கருவறை விமானம் கொண்ட கருவறையும் கட்டும் பணி நடந்து வருகிறது. நிறைவேற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

கோயிலுக்கு எதிரே உமையாள் தீர்த்தம் என்ற புஷ்கரணி உள்ளது. இவ்வூருக்கு புகழ் சேர்க்கும் விதமாக ஸ்ரீநிவாஸபெருமாள், செல்லியம்மன், மாவிலங்கை அம்மன், கங்கையம்மன் ஆலயங்கள் வழிபாட்டில் உள்ளன.
சிவத் தொண்டின் சிறப்புகளைச் சொல்லுங்கால் "எட்டுச் செங்கலின் ஆயினும்  ஈர்ப்புனல் வேணி, வட்டச் சென்னியான் கோயில் திருப்பணி வகுத்தல், ஒட்டிப் பெற்ற இவ்வுடற் பயன்' என்கிறது காஞ்சிப் புராணம். 

இதன் பொருள்: பாழடைந்த சிவாலயங்களைப் புதுப்பிக்க எட்டு செங்கற்களாவது கொடுத்து உதவினால் இந்த உடல் எடுத்த பயன் அதாவது முக்தி கிடைக்கும் என்பதே. இதைக் கருத்தில் கொண்டு புத்துயிர் பெறும் இந்த பரமன் கோயில் திருப்பணியின் பங்கேற்போமாக!

தொடர்புக்கு - 9841791307,  9941278208.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com