குளத்தூரிலய்யனுக்கு குதூகல வைபவம்!

தர்மசாஸ்தா úக்ஷத்திரங்களுக்கெல்லாம் ஒரு தலைமைப் பீடமாகத் திகழ்கின்றது கரந்தையர்பாளையம் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில். 
குளத்தூரிலய்யனுக்கு குதூகல வைபவம்!

தர்மசாஸ்தா úக்ஷத்திரங்களுக்கெல்லாம் ஒரு தலைமைப் பீடமாகத் திகழ்கின்றது கரந்தையர்பாளையம் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில். 

திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கன்னடியன் கால்வாய்க்கரையோரம் அமைந்துள்ள கல்லிடைக்குறிச்சி என்ற இடமே கரந்தையர்பாளையம் ஆகும்.  "போஜநாடி'  என்ற நூலில் "மத்ய ஹதிஸ்யம்' என்று இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.  இந்த ஊரை "சிலசாலிபுரம்'  என்றும் அஸ்வமேத யாகம் நடந்த யாக பூமியாகவும்  தாமிரவருணி மகாத்மியம் வர்ணிக்கிறது.
இந்தக் கோயிலுக்கு சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ அபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகள் அருள் சுரந்து,  கல்யாணபுரி, அழகாபுரி,  குபேரப்பட்டணம் என்ற நாமங்களைச் சூட்டியுள்ளார்.

ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம், தென் பீடாகை, க்ஷத்திரிய சிகாமணிபுரம், சேரமான் வேளாக்குறிச்சி, நல்லூர், மகிழக்குறிச்சி போன்றவை கல்வெட்டு தகவல்கள் மூலம் அறியப்படும் பெயர்களாகும்.

ஸ்ரீ தர்மசாஸ்தாவே கல்யாணபுரிக்கு பாலகனாய் வந்து விஜயன் என்ற வேதியன் இல்லத்துக்கு எழுந்தருளி,  அவனுக்கு புத்திரப்பேறு அருளியதாக "தர்ம சாஸ்தா தண்டகம்'  என்ற வடமொழி ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. வேதியனுக்கு தர்மசாஸ்தா விஸ்வரூப தரிசனமும் அளித்ததாகவும் தல வரலாறு.  புராண வரலாறுகளின்படி, தர்ம சாஸ்தா ஏற்கெனவே சாண்டில்ய மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் நல்கியதாகவும் கூறப்படுகிறது.

பாலகனாக வந்த பிரபுவுக்குப் பசியாற கம்பங்கூழ் கொடுத்து உபசரித்தானாம் அந்த வேதியன். அதில் மகிழ்ந்த ஐயனும் விடைபெறும்போது தனது முத்திரைப்பிரம்பையும், அன்னக் கொடியையும் வேதியனுக்கு அளித்து, அவர்கள் வம்சத்துக்கு என்றும் தான் உடைமை என்று கூறினானாம். கம்பங்கூழ் அளித்து, ஐயனிடம் கொடியையும் பெற்ற காரணத்தால் இவ்விடத்துக்கு  "கம்பும்கொடி' என்ற பெயர் உண்டாகி, நாளடைவில் மருவி "கம்பங்குடி' ஆயிற்று என்பர்.  "கம்பங்குடி சாஸ்தா கோயில்'  என்ற பெயரும் தொற்றிக்கொண்டது. கம்பங்குடி பரம்பரைக்கு இந்த சாஸ்தாதான் குலதெய்வம்.

சிறிய சாஸ்தா கோயிலில் விநாயகப் பெருமான் சந்நிதி பிரதான தெய்வமாக கோயிலில் நுழைந்தவுடன் தென்படும். இடதுபுறத்தில் தர்ம சாஸ்தா குளத்தூரிலய்யன் என்ற பெயரிலேயே உருவமின்றி ஒரு அடியந்திரக் கல்லில் ஆவாஹனம் செய்யப்பட்டு, அதன் மேல் ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பட்டு, சந்நிதி கொண்டுள்ளது சிறப்பு. 

விசேஷ நாள்களில் அந்த பீடத்தின் மேல் பூர்ணா, புஷ்கலா சமேத சாஸ்தாவுக்கு வெள்ளியிலான முகக் கவசங்கள் சாற்றப்படும். இதைத் தவிர சாஸ்தா சந்நிதியில் பூதநாதன் பீடமும் உள்ளது. சாஸ்தாவுக்கு எதிரே யானை உருவத்துடன் கூடிய கற்திருமேனி பிரதிஷ்டை ஆகியுள்ளன. வலது புறத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனும் சந்நிதி கொண்டுள்ளனர்.

சாஸ்தா கோயிலுக்கு அருகே  ஸ்ரீ ஆதிவராகர் கோயில் என்ற கோயில் உள்ளது. திருமாலே மனம் உவந்து குடியேறிய தலம்.  தாமிரவருணியில் திரிவேணி தீர்த்தத்தில் தனது இருப்பிடத்தை உணர்த்தியவர்.  நாதஜ்யோதி ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் இந்தப் பெருமாளை பற்றிய தனது கீர்த்தனையில் "குபேர பிரதிஷ்டை' என குறிப்பிட்டுள்ளார். இதைத் தவிர மானேந்தியப்பர் சிவன் கோயிலும் வழிபாட்டில் உள்ளது.

"சாஸ்தா பிரீதி' என்னும் உத்தமமான  வழிபாடு கம்பங்குடி வம்சத்தினரால் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடத்தப்படுகிறது. இது சுமார் 900 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது.

உலகில் எங்கு சாஸ்தா பிரீத்தி பூஜை நடந்தாலும் அது கரந்தாபுரியான கல்லிடைக்குறிச்சியில் குடி கொண்டுள்ள ஸ்ரீ குளத்தூரிலைய்யனுக்குத்தான் போய் சேரும் என்பது ஐதீகம்.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி மகா சந்நிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள், சந்நிதானம் ஸ்ரீ விது சேகர பாரதி சுவாமிகள் ஆகியோரின் பரிபூரண அனுக்கிரகத்தில், கரந்தையர் பாளையம் பிராமண மஹாசமூகம், ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு  ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்றது.  தற்போது மண்டலாபிஷேகம் நடைபெற்றுவருகிறது.

தொடர்புக்கு:  9903109006, 9942442534.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com