சுக வாழ்வருளும் சொக்கீசன்

காஞ்சிபுரத்தில் உள்ள சில கோயில்கள்  தல புராண வரலாற்றில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.
சுக வாழ்வருளும் சொக்கீசன்
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரத்தில் உள்ள சில கோயில்கள்  தல புராண வரலாற்றில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.  காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெருமையுடன் திகழ்கின்ற கோயில்களில் ஒன்றுதான் ஸ்ரீ கெüசிகேஸ்வரர் கோயில். பெரிய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வடக்கு மாட வீதியில் காமாட்சி அம்மன் கோயிலை அடுத்து,  வட கிழக்கில் உள்ளது.

தல வரலாறு: கயிலையில் ஒருமுறை இறைவி விளையாட்டாக இறைவனின் திருகண்களை தன் கரங்களினால் பொத்தினாள்.  அதனால் சகல உலகங்களும் ஸ்தம்பித்தன.  எங்கும் இருள் சூழ்ந்தது. இதற்கான பிராயச்சித்தம் மேற்கொள்ளும் பொருட்டு,  பூமியில் பல இடங்களில் தவ வாழ்க்கை மேற்கொண்ட அம்பிகை இறுதியாக,  காஞ்சியில் தவத்தை தொடர்கிறாள். அந்தச் சமயம் அவளது திருமேனியிலிருந்து கழிந்த கருமேனி விலகி,  அதன் அம்சமாக கெüசிகி என்னும் துர்கை தோன்றினாள். 

இந்தக் கெüசிகிதான் உலகுக்கு துன்பம் விளைவித்த சும்ப, நிசும்ப அரக்கர்களை சம்ஹாரம் செய்தாள்.  தன்னுடைய மேனியில் படிந்த கருமை நிறத்தை நிவர்த்தி செய்ய ஸ்ரீ காமாட்சி தேவியின் ஈசானிய பாகத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு கருநிறம் நீங்கி பொன்னிறம் பெற்றதாக "காஞ்சிபுராணம்',  "காஞ்சி மகாத்மியம்' முதலிய நூல்களில் விவரித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த தல வரலாற்றை  கோயிலில் காணப்படும் சிற்பங்களின் மூலமாகவும் அறியலாம்.

கெளசிகி ஸ்தாபித்து வழிபட்டதால் கெüசிகேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. சொக்கீஸ்வரர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். தரிசனம் செய்பவர்களுக்கு மனநிறைவும், சாந்தமும் அளித்து சுக வாழ்வருளும் சுந்தரனாக திருமேனி கொண்டு காட்சியளிக்கிறார்.

சற்றே தாழ்ந்த பகுதியில் உள்ள கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட கற்கோயில் (கற்றளி) ஆகும்.  சிற்பங்களின் அழகும் அவை உணர்த்தும் கருத்துகளும் ஏராளம். சிந்தனையை சிறக்கச் செய்யும் சிற்பங்கள் முக்கியமாக பஞ்சபூத தலங்கள் வரலாறு, திருவிளையாடல் புராணத்திலிருந்து சில காட்சிகள், இறைவன் திரியம்பகேஸ்வரராக அருளும் காட்சி, சதுர்புஜ யோக நரசிம்மர் தரிசனம், அனுமார் ஈஸ்வரனை வழிபடும் காட்சி என பல போற்றத்தக்க சிற்பங்களை வரிசைப்படுத்தலாம். பட்டியல் நீளும். பாண்டிய மன்னன் திருப்பணிகள் செய்ததற்கான அடையாளங்களும் உள்ளன.

அரசு, வேம்பு, வில்வம், வன்னி மரம் போன்ற அனைத்து தெய்வீக விருட்சங்களைக் கோயிலில் காணலாம்.

இத்தல ஈஸ்வரனை வழிபட்டால் காசி, ராமேசுவரம் யாத்திரை மேற்கொண்ட பலன் கிட்டும் என நம்பப்படுகிறது. காஞ்சி மகா சுவாமிகள் அவ்வப்போது வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவர் மிகவும் போற்றிய தலம்.
"ஸ்ரீ கெüசிகேஸ்வரர் கைங்கரிய சபா' என்ற அமைப்பின் மூலம் பிரதோஷ பூஜைகள், சிவராத்திரி, அன்னாபிஷேகம் போன்ற அனைத்து வைபவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

திருப்பணி : தொல்லியல் பாதுகாப்புத் துறை பராமரிப்பில் உள்ள கோயிலில் பழுதடைந்த நிலையில் காஞ்சி மகா சுவாமிகள் அனுக்கிரகத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1990- ஆம் ஆண்டும், 2009}ஆம் ஆண்டும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில்  கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியம், முழு உபயதாரராக இருந்து, புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஜனவரியில் பாலாலயம் செய்யப்பட்டு நடைபெற்றுவருகிறது.

கும்பாபிஷேகம்: ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பரிபூரண அனுக்கிரகத்தில், ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூன் 25}ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. 11 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் ஜூன் 23}இல் ஆரம்பமாகின்றன.

தொடர்புக்கு -  81248 19033, 98400 53289.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com