சிக்கலைத் தீர்க்கும் சிங்காரவேலர்

சிக்கல் சிங்கார வேலவர் கோயிலை முருகனின் ஆறுபடை வீட்டுக்கு  அடுத்தபடியாக, ஏழாவது படை வீடாய் பக்தர்கள் நம்புகின்றனர். 
சிக்கலைத் தீர்க்கும் சிங்காரவேலர்
Published on
Updated on
2 min read

சிக்கல் சிங்கார வேலவர் கோயிலை முருகனின் ஆறுபடை வீட்டுக்கு  அடுத்தபடியாக, ஏழாவது படை வீடாய் பக்தர்கள் நம்புகின்றனர். 

சிக்கல் கிராமத்தில் உள்ள நவநீதேசுவரர் கோயிலில் தனி சந்நிதி கொண்டு சிக்கல் சிங்காரவேலவர் அருள்பாலிக்கிறார். திருவாரூர் புராணத்துடன் தொடர்புடைய முசுகுந்த சக்ரவர்த்தியால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

விண்ணுலகத்தில் இருக்கக் கூடிய காமதேனு பசு, ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.  இதையறிந்த சிவன் கடும் கோபம் கொண்டு (காமதேனு) பசுவை, புலியாக மாறும்படி சாபமிட்டார். மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரியது. மனமிறங்கிய சிவன் பூலோகத்தில் உள்ள மல்லிகை வனத்தில் நீராடி,  இறைவனை  பூஜித்தால் சாபம் விலகும் என அருளினார்.
சிவனின் அறிவுரைப்படி காமதேனு, இத்தலத்தில் குளம் அமைத்து நீராடி சாப விமோசனம் பெற்றது. அப்போது, காமதேனு மடியில் இருந்து பெருகிய பால் குளம் முழுவதும் பொங்கி பாற்குளம் ஆனது. இத்தலத்துக்குச் சென்ற வசிஷ்ட முனி, பால் குளத்திலிருந்து வெண்ணெய் மூலம் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் இத்தல இறைவன் வெண்ணெய் நாதர்' ஆனார். வழிபாடு முடிந்து லிங்கத்தை வசிஷ்ட முனி எடுக்க முற்பட்டபோது, அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் "சிக்கல்'  என்று அழைக்கப்பட்டது.

ஒருமுறை தேவர்கள், அசுரகுலத்தைச் சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். பெருமாள், வாமன அவதாரம் எடுத்தபோது இத்தலத்தில் சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாகக் கூறப்படுகிறது. இத்தல பெருமாள் "கோலவாமனப்பெருமாள்'  என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

சிவனும் விஷ்ணுவும் உள்ள அரிய கோயில்: கோயிலின் நுழைவாயிலை அலங்கரிக்கும் ஏழு நிலை ராஜகோபுரம் 80 அடி உயரம் கொண்டது. கோபுரத்தில் சூரனின் அழிவைச் சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் உள்ளன. இரண்டு ஏக்கரிலான கோயிலில் சோழர் கால,  விஜயநகர கால கல்வெட்டுகள் உள்ளன. கார்த்திகை மண்டபத்தில் சுப்பிரமணியர் தொடர்பான புராணக்கதைகளான கந்த புராணம், கந்தன் திருவிளையாடலை சித்தரிக்கும் பல ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிற்பங்கள் கொண்ட இரண்டு தேர், தங்க வாகனம், தங்க முலாம் பூசப்பட்ட குதிரை, மயில், ஆடு, வெள்ளி ரிஷப வாகனங்கள் உள்ளன. சிற்றம்பலத்தில் தெற்கு நோக்கி நடராஜப் பெருமாள் காட்சியளிப்பது போன்று, சிக்கலில் சிங்காரவேலவர் ஒலியை நோக்கியபடி காட்சியளிக்கிறார். சிங்காரவேலவர் உற்சவமூர்த்தி வடிவில் தனது துணைவிகளான வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

தலைமைத் தெய்வமாக நவநீதேசுவர சுவாமி(சிவன்), கோலவாமனப்பெருமாள் (விஷ்ணு) இருவரும் வழிபடும் அரிய கோயில்களில் இதுவும் ஒன்று. அம்மனின் 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. நின்ற கோலத்தில் உள்ள அம்மனின் பெயர் வேல்நெடுங்கண்ணி. ஸ்தல விருட்சம் மல்லிகை. கோயிலுக்குள் பால், கயா, லட்சுமி தொட்டிகள் என மூன்று புனிதக் குளங்கள் உள்ளன.

விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்ரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.

சிங்காரவேலவர், சக்தி தேவியிடம் வேல் வாங்கியதால் "வேல் நெடுங்கண்ணி'  என்று அழைக்கப்படுகிறார். கந்தசஷ்டி விழாவின்போது சிங்காரவேலவர் சிக்கலில் வேல் வாங்கி  மறுநாள் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்ததாக நம்பப்படுகிறது. அப்போது சிங்காரவேலவரிடம் ஓர் அதிசயம் நிகழ்வதுண்டு. சூரபத்மனை வதைக்க சிங்காரவேலவர், வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத் துளிகள் உண்டாகும். மயில் இறகால் குளிரூட்டப் பட்டாலும், பட்டு, ரோஜா இதழ்களால் உலர்த்தப்பட்டாலும்கூட மீண்டும் மீண்டும் உருவாகும். 

சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பதும், "சத்ரு சம்ஹார திரி சதை' அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.

நாகையில் இருந்து 5 கி.மீ.,  திருவாரூரிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது. கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com