மாசில்லா மணியானவன்!

முல்லைக்கொடிப் புதரில் இருந்து சிவன் தோன்றியதால், "திருமுல்லைவாயல்' அல்லது  "திருமுல்லைவாசல்'  என்று அழைக்கப்படுகிறது.
மாசில்லா மணியானவன்!

முல்லைக்கொடிப் புதரில் இருந்து சிவன் தோன்றியதால், "திருமுல்லைவாயல்' அல்லது  "திருமுல்லைவாசல்'  என்று அழைக்கப்படுகிறது.

மாசிலாமணீஸ்வரர் கோயில் திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ள சுந்தரர் பாடல் பெற்ற  சிவன் தலமாகும். 

"கோயிலின் இறைவனைப் பற்றி கேட்டாலே முக்தி அடையலாம்' என்பது சான்றோர் வாக்கு.   276 தேவாரப் பாடல் பெற்ற சிவன் தலங்களில் ஒன்றாகும். ஏழாம் நூற்றாண்டின் தமிழ் சைவ தோத்திரப்பா தேவாரத்திலும் பாடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரும் போற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். மாதவ சிவஞான யோகி,  ராமலிங்க அடிகளார்,  "இரட்டைப் புலவர்கள்"  ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். 

இத்தலம் கிருத யுகத்தில் ரத்தினபுரமாகவும், திரேதா யுகத்தில் வில்வவனமாகவும், துவாபர யுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.  புராண வரலாற்றுப் பெயர் "சண்பகாரண்யம்' என்பதாகும். 

தொண்டை நாட்டு  வடதிசையில்  குறும்பர்களான ஓணன், வாணன்  ஆகியோர் அடுத்தவர்கள் பொருள்களை அபகரித்து,  கோட்டைகளில் பதுங்கி கொடுமைகளைச் செய்துவந்தனர். அருகிலுள்ள தொண்டை நாட்டுப் புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்தனர். 

தகவலறிந்த  தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். இதையறிந்த குரும்பர்கள் தங்களது தெய்வமான வைரவனின் வரத்தால் தொண்டைமானின் படைகளைத் துரத்தினர். அன்று இரவு தொண்டைமான் போரை நிறுத்தி பாசறைக்குத் திரும்பினான்.

அப்போது யானையின் காலில் சூழ்கொடி முல்லை சிக்கிக் கொள்ள, முல்லைக் கொடியை  மேலிருந்தவாறே மன்னன் வெட்டினான்.  குபீரென ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ந்த மன்னன் இறங்கிப் பார்த்தபோது,  சுயம்பு லிங்கமாய் சுடரொளி வீசிய இறைவனின் லிங்கத்தின் மேற்பகுதி  வெட்டுப்பட்டு, குருதி பீறிட்டுவந்தது. தவறு செய்து விட்டதாகக் கருதிய  மன்னன்,  அதே வாளால் தன் தலையை துண்டித்துக் கொள்ள முயல இறைவன் வெளிப்பட்டு தடுத்து ஆட்கொண்டதோடு  "மன்னனே வாளால் வெட்டுண்டாலும் யாம்  மாசிலாமணியாக (குறையில்லாமணியாக) இருப்போம். வருந்தற்க! நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக'  எனக் கூறி மறைந்தார். 

மறுநாள்  தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்றவுடன்,  அவர்களின் அரண்மனையில்  இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்தான். வெற்றியைத் தேடித் தந்த  இறைவனுக்கு, மாசிலாமணீசுவரரின்  திருமேனியைக் கண்ணாரக் கண்டு,  கோயில் அமைத்து நித்திய பூசைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடு செய்து வழிபட்டவன் தொண்டைமான் சக்கரவர்த்தி. 

இன்றும் சந்நிதி முன்புறம் வெற்றிச் சின்னமான  வெள்ளருக்கந் தூண்கள் கருவறையின் வாயிலில் உள்ளன. இந்தத் தூண்கள் 11 அடி உயரம், சுமார் 2.5 அடி சுற்றளவு கொண்டவை.  போரில் துணை நின்ற நந்தி காவல் பணியைக் கொண்டு  பின்புறம் இறைவனுக்குக் காட்டி கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறது.  கோயிலில் நவக் கிரகத்துக்கு சந்நிதி இல்லை. கருவறையின் விமானம்  கஜ பிருஷ்டம்(யானையின் பின்புறம்) எனப்படும் சிறப்பு கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் அகழி போல்  உள்ளது .  வசிஷ்டர் இங்கு  தவம்  செய்து இறைவனை வழிபட்டு , தெய்வீகப் பசுவான காமதேனுவைப் பெற்றார்.

இக்கோயில் வரலாற்றை பற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள்  பாடியுள்ளார்.  அவர் வாக்குத் தவறியதால் இரு கண்களும் இழந்து ஊன்றீசர் ஊன்றுகோல் கொடுக்க நடந்தபடி இத்தலத்து  குற்றமொன்றும் இல்லாத இறைவனை அகக்கண்ணால் கண்டு மகிழ வந்து பாசுபதாப்பரஞ்சுடரே எனப் தேவாரம் பாடிய தலம். 

கருவறைக் கடவுள் மாசிலாமணீஸ்வரர் லிங்க வடிவில்   சதுரபீட ஆவுடையாருடன்  உயரமான சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். "தீண்டாத்திருமேனி' என்பதால் யாரும் தொடுவதில்லை.   லிங்கம் மன்னனின் வாளால் வெட்டப்பட்டதன் காரணமாக வடுவுடன் உள்ளது.  இந்த வடுவை  மறைக்க, லிங்கம் சந்தனத்தால்  மூடப்பட்டிருக்கிறது.  

சித்திரை மாதத்தில் சதய நட்சத்திரத்தில்,  பழைய சந்தனம்  அகற்றப்பட்டு புதியதாகச் சார்த்தப்படுகிறது. அந்த நாளில் மட்டும் நிஜரூப தரிசனம் காண முடியும்.  சந்தனப் பூச்சுடன் இருப்பதால் லிங்கத்துக்கு  அபிஷேகம் இல்லை, அது பீடஆவுடையார்க்கு  மட்டுமே செய்யப்படுகிறது. 

திரி}சக்தி கோயில்கள் வரிசையில்  திருமுல்லைவாயில் ஸ்ரீ கொடியிடை நாயகி அம்பாள் கிரியா சக்தியாகும்.   சிவனின் வலது பக்கத்தில் உள்ளது. சுவாமி அம்பாள்  இரண்டு சந்நிதிகளும் கிழக்கு திசையை நோக்கி உள்ளன. இங்குள்ள அம்மன் "கொடியிடை நாயகி'  என்ற  " ஸ்ரீ லதாமத்தியம்பாள்' என வணங்கப்படுகிறாள். அம்பாளை வழிபட, புதுமணத் தம்பதிகளுக்கு  வளமான வாழ்வு அமையும்.  திருமணத் தடையும் அகலும்.

கோயில் வெளியே குளம் அமைந்துள்ளது. தீர்த்தம் கல்யாண தீர்த்தம், அக்னி தீர்த்தம், சுப்ரமணிய தீர்த்தம், பாலாறு ஆகியவையாகும். தல விருட்சம் முல்லையாகும். கோயில் திருப்பணி முடிக்கப்பட்டு ஜூலை 6-ஆம் தேதி காலை 9  முதல் 10-க்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com