வளம் தரும் வராகர் கோயில்

திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாக்ஷகனைக்  கொன்று, பூமியை தனது கோரைப்பற்களால் சுமந்து வந்து, ஆதிசேஷன் மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச் செய்தார்.
வளம் தரும் வராகர் கோயில்

திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாக்ஷகனைக்  கொன்று, பூமியை தனது கோரைப்பற்களால் சுமந்து வந்து, ஆதிசேஷன் மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச் செய்தார்.

தனது இரு கண்களால் அரச மரத்தையும், துளசியையும் உண்டாக்கினார். அவரது வியர்வை நீரின் பெருக்கத்தால், "நித்ய புஷ்கரிணி'  என்ற புனிதத் தீர்த்தம் உண்டாயிற்று. இத்தலத்தில் பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்து நிலை நிறுத்திய வராக உருவுடைய  நாராயணரை  பிரம்மன் முதலானோர் பூஜிக்க கருவறைக் கடவுளாக  ஸ்ரீபூவராகன் என அழைத்து வணங்கினர். 

தஞ்சை மாமணிக்கோயில்  வரலாற்றின்படி, கிரேதா யுகத்தில் மது என்ற அரசனின் மரபில் தஞ்சகன், தண்டகன்,கஜமுகன் ஆகிய அசுரர் மூவர் தாங்கள் பெற்ற அழியா வரத்தால் இந்திரலோகத்துக்கும்  பக்தர்களுக்கும் கொடுமைகளைப் புரிந்தனர்.  

ஒருநாள் அல்லலுக்கு ஆளான பராசர முனிவர்  அழைக்க, பரந்தாமன் தனது வாகனமான கருடனை அனுப்ப அரக்கர்களையெல்லாம் கருடன் அழித்துவிட  மூவர் மட்டும் எஞ்சி நின்றனர்.  இதைக் கண்ட எம்பெருமான் நேரில் வந்து முன் இரண்டு சகோதரர்களை வதம் செய்தார். தண்டகாசுரன் மிக்க சினத்துடன் திருமாலுடன் பொருத பாதாளத்துக்குள் புகுந்து மறைந்து கொண்டார்.

திருமால்  வராக உருவம் கொண்டு பூமியைக் காக்க அவனைப் பின் தொடர்ந்து சென்று தன் முகக்கோட்டால் அவனது தலையைக் கிழித்து எறிந்தார். இறுதியாக அவன் வேண்டியபடி அவர் பெயரால் அந்த வனம்  "தண்டகாரண்யம்'  ஆயிற்று.  அதன் நடுவே திருமால் முட்டி எழுந்ததால் அந்த இடம்  "திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்)'  எனவும் நிலத்தினின்று எழுந்ததால் " ஸ்ரீபூவராகப்பெருமாள்' சுயம்பு வடிவாய் காட்சி தந்தார்.

பெருமாள், கடலில் இருந்து பூமியை மேலே கொண்டுவந்து  தேவர்களுடைய துயர் நீக்கி, வைகுண்டம் திரும்ப கிளம்பினார்.  அப்போது பூதேவி பெருமாளை வேண்டி பக்தர்கள் நலன் வேண்டி தன்னுடனேயே வாசம் செய்ய வேண்டும் என கேட்க   இங்கிருந்தே அருளத் தொடங்கினார்.

ஸ்ரீமுஷ்ணத்தில் திருமால்  தனது பரிவாரங்களையும்  தன்னைச் சுற்றித் தங்கச் செய்தார். , சங்கு தீர்த்தத்தில் சங்கும், சக்கர தீர்த்தத்தில் சக்கரமும், பிரம்ம தீர்த்தத்தில் பிரம்மாவும், பார்க்கவ தீர்த்தத்தில் கருடனும், கோபுரத்தில் வாயுவும், பலிபீடத்தில் ஆதிசேஷனும், வாயிற்படியில் விஷ்வக்சேனருமாக அவர்கட்கு உரிய இடத்தை நிர்ணயம் செய்து அவர்கள் ஆற்றவேண்டிய  கடமைகளையும் விதித்தார்.

முட்டமெனும் ஸ்ரீமுஷ்ணம்  பிரம்மா முதலிய  யோகிகளுக்கு வேதம் பயிலும்  பூமியாகவும், தேவர்களுக்கு யாக பூமியாகவும், மனிதர்களுக்கு வேண்டியது அருளி இறுதியில் மோட்சபூமியாகவும் திகழும் என பெருமாளே நிர்ணயித்ததாகச் சொல்லப்படுகிறது.

மூலவர் ஸ்ரீ வராகப் பெருமாள் சாளக்கிராம திருமேனியாக  இடுப்பில் கையுடன் கம்பீரமாகக் காட்சி தரும்  சின்ன மூர்த்தியாகும்.  இரு கரங்களிலும் சங்கையும் சக்கரத்தையும் ஏந்தி, இடுப்பிலே  வைத்து  உடல் முழுவதும் மேற்கு நோக்கி இருக்க, தெற்கு நோக்கி நிமிர்ந்த தலையோடு  நிற்கிறார். அவர் காலடியிலே ஸ்ரீதேவியும் பூதேவியும் சிறிய வடிவிலேயே எழுந்தருளியிருக்கின்றனர். 

உத்ஸவர் பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் "யக்ஞவராகர்'  என்ற பெயருடன்  ஸ்ரீதேவி பூதேவியுடன் அருளுகிறார் . நெய்வேலியை அடுத்த வளையமாதேவியில் வாசம் செய்த கார்த்தியாயன மகரிஷியின்  மகள் அம்புஜவல்லியை பூவராகன் பெண் கேட்டார் . மகரிஷி பூவராகவரிடம்  அவரது சுயஉருவில் வந்து மணந்து கொள்ளச் சொன்னார்.  ஆதலால்,  முனிவர் நடத்திய யக்ஞத்திலிருந்து தன் சுய உருவோடு  பூதேவி ஸ்ரீதேவி சகிதனாக எழுந்தவரே யக்ஞ வராகனாகும்.  ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டுகளில் இவர் "ஆதிவராக நாயனார்' என்றே குறிக்கப்படுகிறது.

இங்குள்ள "குழந்தை அம்மன் சந்நிதி' எனப்படும்  தாய்மார் எழுவரின் சந்நிதியில், குழந்தைப் பேறு  இல்லாதவர்களும், திருமணத்தடை உள்ளோரும் வணங்கி பலன் பெறுகின்றனர். அம்புஜவல்லிதாயார்  தனி சந்நிதியில் இரு கரங்களிலும் மலர் ஏந்தி பத்மாசனத்தில் அமர்ந்து அருளுகிறாள். தாயாருக்கென தனி ஊஞ்சல் மண்டபமும், அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் உள்ளன.

ஆண்டாள்,   ராமானுஜர் நம்மாழ்வார்   சக்கரவர்த்தித் திருமகன், வேணுகோபாலன் சந்நிதிகள்  உள்ளன.   இரு மதில்கள்,  7 நிலை ராஜகோபுரத்துடன் கோயில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது.  சிற்பக்கூடம் புருஷசூக்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன உள்ளன.

கோபுரத்துக்குத் தென் கிழக்கில் ‘நித்ய புஷ்கரணி'   திருக்குளமும், அதன் கரையில் லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மர், அஸ்வத்த  அரசமரமும்,   அனுமன் சந்நிதியும் உள்ளன.

16 தீர்த்தங்கள் அடங்கிய நித்திய  புஷ்கரணியில் மே 5-இல் சித்திரை பெளர்ணமியன்று மதியம்  ஸ்ரீதேவி பூதேவியோடு  சிறப்பான  தீர்த்தவாரியோடு நிறைவு பெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com