காமனுக்கு அருளிய காமுகாம்பாள்

சில தலங்களின் பெயர்கள் அவற்றின் புராண வரலாற்றுடன் தொடர்புப் படுத்தி அழைக்கப்படுவது சிறப்பு.
காமனுக்கு அருளிய காமுகாம்பாள்


சில தலங்களின் பெயர்கள் அவற்றின் புராண வரலாற்றுடன் தொடர்புப் படுத்தி அழைக்கப்படுவது சிறப்பு. அவ்வகையில் அமைந்தது மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் திருமணஞ்சேரி அருகே உள்ள கிடாத்தலை மேடு கிராமம்.

முன் காலத்தில், மகிஷாசுரன் (எருமைத்தலை கொண்டவன்) என்னும் அசுரன் தன் தவ வலிமையினால் பெண்களைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்ற வரத்தைப்பெற்றான்.  வரம் பெற்ற மமதையாலும், பெண்கள் வலிமையற்றவர்கள் என்று எண்ணத்திலும் வலம் வந்த அவன் பூலோக மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

மக்களைக் காக்க துர்கை வடிவம் கொண்டு, அவனை வதம் செய்தாள் அம்பிகை. கடுங்கோபத்துடன் அன்னையால் துண்டிக்கப்பட்ட மகிஷாசுரன் தலை, அதீத வேகத்துடன் விழுந்த இடமே  கிடாத்தலை மேடு. இந்த ஊரை "மகிஷசிரோன்னபுரம்' என்று அழைக்கிறது புராணம்.

துர்காபுரீஸ்வரர்: மகிஷாசுரனை கொன்ற பாவத்திற்கு நிவர்த்தி வேண்டி இத்தலத்தில் சிவ பூஜை செய்து தவமியற்றினாள் துர்கையம்மன். அவளுக்கு பாப விமோசனம் அருளியதால் இத்தல ஈசன் ஸ்ரீ துர்காபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தரிசித்த மாத்திரத்திலேயே எல்லா பாவங்களையும் போக்கி ஞானத்தை கொடுப்பவராவார் துர்காபுரீஸ்வரர். 

காமுகாம்பாள்: மன்மதனுக்கு மற்றுமொரு பெயர் காமன். சிவ அபசாரத்தால் எரிந்து சாம்பலானான் மன்மதன். ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் வரமளித்தார் ஈசன். சிவ அபசாரத்தைப் போக்க இத்தலத்தில் மன்மதன் வந்து  பூஜைகள் செய்து வழிபட, மகிழ்ந்த அம்பிகையும் அவனுக்கு கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் மீண்டும் அருளி, ரதிதேவிக்கு மாங்கல்ய பிச்சை அளித்தாள். காமனுக்கு அருளியதாலும், வழிபடுபவர்களின் துன்பத்தை போக்குவதாலும் அம்பிகை "காமுகாம்பாள்' என்று பெயர் பெற்றதாக வரலாறு.

ஸ்ரீ துர்கை அம்மன்: கிடா ரூபத்தில் காணப்படும் மகிஷனின் தலை மேல் நின்ற கோலத்தில் வடக்குத் திசை நோக்கி அருள் புரிகிறாள் இத்தல துர்கை.  கரங்கள் இரண்டில் வரத அபய முத்திரை தாங்கியும், ஐந்து கரங்களில் சக்கரம், பாணம், வில், கத்தி கேடயம் தரித்தும், ஓர் இடக்கரத்தை தொடையில் பதித்தும் ஆக எட்டு கரங்களுடன் சிம்ம வாகனத்துடன் காட்சி தரும் அதி அற்புதக் கோலம். 1996 }ஆம் ஆண்டு இச்சந்நிதியில் ஸ்ரீ  சக்கர பூர்ண மகாமேரு  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.  துர்கை  சந்நிதி   எதிரே  20  அடி, 5 அடி, ஓரடி என மூன்று சூலங்கள் வழிபாட்டில் உள்ளன. இதை சாமுண்டீஸ்வரியின் வடிவம் என்கிறார்கள். இதற்கு அபிஷேக, ஆராதனைகள் உண்டு. 

விசேஷ காலங்களில் துர்கையின் திருமுகத்திலிருந்து வியர்வைத் துளிகள் அரும்புகின்றன. ஒரு சமயம் சிற்பியின் கனவில் துர்கையம்மன் தோன்றி, மூக்குத்தி அணிவதற்கு ஏதுவாக மூக்கில் ஒரு சிறு துவாரம் அமைக்கும்படி கட்டளையிட்டு மறுநாள் எந்தவித சேதமும் உளியினால் ஏற்படாமல், அதை நிறைவேற்றிக் கொண்டாளாம். அதிலிருந்து துர்கைக்கு மூக்குத்தி அணிவிக்கும் வழக்கம் ஆரம்பமாயிற்றாம்.

வழிபாட்டுப் பலன்: கன்னி தோஷம், காளதோஷம், நாக தோஷம், பைரவ சாபம், பாலாதிஷ்டம், பாபவினை, காலதோஷம், சர்ப்பதோஷம், திருமண தோஷம் மற்றும் பலவித துன்பங்களுக்கு நிவர்த்தி தரும் உத்தம துர்கை தலமாகத் திகழ்கிறது. வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ராகு கால பூஜைகளில் இங்கு வந்து வழிபட்டால் அபரிமித பலன்களை பெறலாம் என்கின்றனர். துர்கை சந்நிதி எதிரே உள்ள சூலத்தில் தேன் தடவிய எலுமிச்சை பழத்தை குத்தி வழிபட்டால் ஏவல், பில்லி, சூனியம் அகலும். சூலத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் அகன்று விடும். 

திருப்பணி: இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் பல்வேறு திருப்பணிகள் இவ்வாலையத்தில் நடைபெற்று நிறைவுறும் நிலையில் உள்ளன. திருப்பணி மற்றும் கும்பாபிஷேக உபயத்துக்கு சென்னையை சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியம் பொறுப்பேற்றுள்ளார். உபகோயில்கள் உள்பட பிரதான கோயில்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நவம்பர் 24 காலை 8.30 மணி அளவில் நடைபெறுகிறது.  பூர்வாங்க பூஜை, ஹோமங்கள் நவம்பர் 19 }இல் தொடங்குகின்றன.  மயிலாடுதுறையிலிருந்து காளி கிராமம் வழியாக மணல்மேடு செல்கிற பேருந்தில் இத்தலத்துக்கு செல்லலாம்.

மேலும் விவரங்களுக்கு: 98400 53289. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com