சந்தான பாக்கியமருளும் திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர்

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புடையதும் ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்றதுமான "திருச்செங்காட்டங்குடி'யில் அருள்மிகு உத்திராபதீஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது.
சந்தான பாக்கியமருளும் திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர்

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புடையதும் ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்றதுமான "திருச்செங்காட்டங்குடி'யில் அருள்மிகு உத்திராபதீஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது.

பல்லவர் காலத்துச் சிற்பப் பாணியில் தூண்கள், போதிகைகள், சிங்கத் தூண்கள், இரு கைகளையுடைய மூர்த்திகள், விமானங்கள் என அனைத்தும் அமைந்துள்ளன. 

சுவாமி உத்திராபதீஸ்வரர், அம்பாள் "வாய்த்த திருக்குழவி' எனும் பெயர் படைத்த சூளிகாம்பிகை. சிறுத்தொண்டர் குடும்பத்துடன் கயிலாயம் செல்லும் காட்சி, இறைவன் காட்சி அளித்தல் ஆகியவை இங்கு சிற்பங்களாக உள்ளன.  

திருச்செங்காட்டங்குடியில் வாழ்ந்த பரஞ்ஜோதியார், மனைவி திருவெண்காட்டு நங்கை இருவரும் சிவபக்தர்கள். இவர்களின் குழந்தை சீராளன். பல்லவ மன்னர் கி.பி. 642}இல் வாதாபிப் போருக்கு தளபதியாக பரஞ்ஜோதியாரை அனுப்பினார். அதில் வென்ற பரஞ்ஜோதியார் திரும்பி வரும்போது, கப்பப் பொருள்களையும், விநாயகர் சிலைகளையும் கொண்டு வந்து வழிபட்டு வந்தார்.

இதைக் கண்ட மன்னர் பரஞ்ஜோதியாரை சிவத் தொண்டில் ஈடுபடப் பணித்தார். அடியார்கள் முன் தான் சிறியவன் என எண்ணியதால் "சிறுத்தொண்டர்' என அழைக்கப்பெற்றார்.
சிவபெருமான், பைரவச் சங்கமர் வேடங்கொண்டு சிறுத்தொண்டரின் வீட்டில் அவரைக் காணச் சென்றார். அப்போது அவர் வீட்டில் இல்லை. சிறுத்தொண்டர் வந்தால், தான் கணபதீச்சரத்தில் திருஆத்தியின் கீழ் தங்கியிருப்போம் என்று சொல்லிச் சென்று விடுகிறார். அடியார்கள் யாரும் வராமல் சோர்ந்து போய் வீடு திரும்பிய சிறுத்தொண்டரிடம் மனைவி தகவல் சொல்கிறார். உடனே சிறுத்தொண்டரும் ஆத்திமரத்தடியில் பைரவச் சங்கமர் வேடத்திலிருந்த சிவபெருமானை வீட்டுக்கு அழைக்கிறார். 

அப்போது சிவபெருமான் 5 வயது நிரம்பிய அங்கம் பழுதில்லாத உயர்குடியில் ஒரே மகனாகப் பிறந்த பிள்ளைக்கறியை படைத்தால் சாப்பிடுவதாகக் கூறுகிறார். தாய் பிடித்துக் கொண்டு, தந்தையே உடலைக்கூறுபோட வேண்டும் என்றும் சிவபெருமான் சொல்கிறார். சிவபெருமான் கூறியபடி பிள்ளைக் கறி சமைத்துப் பரிமாறுகிறார் சிறுத்தொண்டர். சிவபெருமான் கூறியபடி மற்றொரு சிவனடியாரை அழைத்து வரச்சென்றால் அடியார் யாருமில்லை.

இதையடுத்து சிறுத்தொண்டரை உண்ண அழைத்தார் சிவபெருமான். உமது மகனை அழைத்து வந்தால்தான் உணவுண்ண முடியும் எனக் கூற, சிறுத்தொண்டரும் மனைவியும் "சீராளா' எனஅழைக்கின்றனர். மகன் ஓடி வருகிறான். அவனையும் அழைத்து வீட்டுக்குள் வர சிவபெருமான் மறைந்துவிட்டார். வெளியேவந்த சிறுத்தொண்டருக்கு சிவபெருமான் குடும்பத்துடன் காட்சி தந்தார். சிவபெருமானுக்கு அமுது படைத்து சிவப்பேறடைந்த நாளே அமுது படையல் திருநாளாகிய  சித்திரைப் பரணியாகும்.

இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகள் மூலம் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன்,  முதலாம் ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் ராஜராஜன் உள்ளிட்டோரின் சிறப்புகளை அறிய முடிகிறது.

ஆண்டுதோறும் சித்திரை பரணி நாளில் உத்திராபதீஸ்வரருக்கு படைக்கப்படும் திருஅமுது பிள்ளைக்கறி அமுதாகும். இது 24 மூலிகைகளால் செய்யப்படும் அருமருந்து. பிள்ளை வரம் வேண்டுவோர் உத்திராபதீஸ்வரரை தம்பதியராக வணங்கி, சிறுத்தொண்டர் மடத்தில் உத்திராபதீஸ்வரர் அமுது உண்ண எழுந்தருளும் வைபவத்தைக் கண்டு, திருச்செங்காட்டங்குடி ஆதீன திருமடத்தில் குருமகா சந்நிதானம் திருக்கரங்களால் வழங்கப்படும் பிள்ளைக்கறி பிரசாதத்தை முறையாக 21 நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உத்திராபதீஸ்வரர் திருவருளால் குழந்தை வரம் பெறுவர்.

ஒரு காலத்தில் பிரம்மனுக்காகப் பொய் சொன்ன தாழம்பூ, அப்பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கு ஆத்தியாய் முளைத்து இறைவனுக்கும், அடியார்களுக்கும் நிழல் தந்து தன் பாவத்தைப் போக்கிக் கொள்கிறது. 

இந்த மரத்தடியில் சிறிது நேரமாவது பத்மாசனத்தில் இருந்து சிவ தியானத்துடன் திருஐந்தெழுத்தை ஓதினால் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதுடன் மறுமையில் வீடுபேறடைவது உறுதி. மனக்குறையுடைய பலர் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழுள்ள இக்கோயிலில் "சித்திரைப் பரணி விழா' மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து திருச்செங்காட்டங்குடிக்குப் பேருந்து வசதி உள்ளது.

தொடர்புக்கு: 94431 13025.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com