வரம் அருளும் வரதராஜர்

பரம்,  வியூகம்,  விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் ஸ்ரீமன் நாராயணன்  அருள்பாலித்தாலும், கலியுகத்தில் அர்ச்சாமூர்த்திகளாக வழிபாடு செய்யப்படுகின்ற திருத்தலங்களே அதிகம்.
வரம் அருளும் வரதராஜர்


பரம்,  வியூகம்,  விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் ஸ்ரீமன் நாராயணன்  அருள்பாலித்தாலும், கலியுகத்தில் அர்ச்சாமூர்த்திகளாக வழிபாடு செய்யப்படுகின்ற திருத்தலங்களே அதிகம். அத்தகைய பழைமையான கோயில்களில் ஒன்றுதான் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅபயவரதராஜப் பெருமாள் கோயில். 

காஞ்சியிலிருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ளது காவேரிப்பாக்கம்.  முன்பு மன்னர்கள் ஆண்ட காலத்தில் கணக்கர்கள்,  வரிவசூல் செய்பவர்கள், வணிகர்களுக்கு "ஷகாவிதி' என்று பட்டம் அளித்து,  மானியங்களை வழங்கி, அவர்கள் வசிக்க இருப்பிடம் அளிக்கப்பட்டது.  அவர்கள் மிகுதியாக வாழ்ந்த பகுதியாக இருந்ததால் "காவிதிப்பாக்கம்' என்று அழைக்கப்பட்டு வந்து பின்பு மருவி "காவேரிப்பாக்கம்' என்றாயிற்று என்கிறது பண்டைய வரலாறு. 

பாரம்பரிய தல வரிசையில் காவேரிப்பாக்கத்துக்கு முக்கிய இடமுண்டு. இவ்வூரின் கண்முக்தீஸ்வரர், பஞ்சலிங்கேஸ்வரர்,  கொங்கனீஸ்வரர் என்று மூன்று சிவன் கோயில்கள், ராமர் கோயில்,  வரதராஜப் பெருமாள் கோயில் என இரண்டு பெருமாள் கோயில்கள்,  கிராமத் தேவதை கோயில்கள் வழிபாட்டில் இருந்துவருகின்றன.  அனைத்துக் கோயில்களுமே காலத்தால் பழைமையானது.

காஞ்சி மகா சுவாமிகளுக்கு மிகவும் பிடித்தமான தலம். இங்கு விஜயம் செய்து சில நாள்கள் வாசம் செய்துள்ளார். மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் காஞ்சியிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் முன் காவேரிப்பாக்கத்தில் வந்து தங்கியுள்ளார். இப்படி மகான்கள் பாதம் பட்ட புண்ணிய பூமியாகத் திகழ்கிறது. 

கோட்டை பெருமாள் கோயில்:  காவேரிப்பாக்கம் மெயின் சாலை நுழைவிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் சோளிங்கர் செல்லும் சாலையில், கோட்டை ஸ்ரீஅபய வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. ஒருகாலத்தில் கோட்டைக்குள் இருந்ததால், இந்தப் பெயர் உண்டாயிற்று என்பர். 

கோயிலுக்கு எதிரே உள்ள தெருவுக்கு "கோட்டை பெருமாள் கோயில் தெரு' என்று பெயர். 

கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், கோயில் கட்டட அமைப்பும், காணப்படும் சிற்பங்களும் இதன் பழைமையை பறைசாற்றுவதுடன், நமக்கு பல அரிய செய்திகளைத் தருகின்றன.  பல்லவர் காலத்திய கோயிலாகும்.

கி.பி. 16}17}ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது.  பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் (கி.பி.894) காலத்து கல்வெட்டில் இத்தலம் "அவனிநாராயண சதுர்வேதிமங்கலம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் கால கல்வெட்டுகளும் காணப்படுகிறது.  இப்படி மன்னர்களின் பேராதரவுடன் திகழ்ந்திருக்கிறது இந்தக் கோயில்.

கருட மண்டபம்,  முன்மண்டபம், அர்த்த மண்டபம்,  கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ள இந்தக் கோயில் மூலவர் அபய வரதராஜப் பெருமாள் சுமார் 5 அடி உயரத்தில் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் வலது கை அபய ஹஸ்தத்துடன்,  இடது கை கதிஹஸ்தத்துடன் (பாதங்களை சரணடை என்று சொல்வதுபோல்) அபரிமித செüந்தர்யத்துடன், புன்னகை ததும்பும் வதனமாக அருகில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் காட்சி தரும் அழகை இன்றைக்கெல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேஇருக்கலாம். 

தனி சந்நிதியில் பெருந்தேவி தாயார், மிகவும் அழகுடன் அமர்ந்த கோலத்தில் அருளுகின்றாள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தனி சந்நிதியில் மிகவும் நளினமாய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் ஸ்ரீஆண்டாள். 

ராமர்,  சீதா, லட்சுமணர், பக்த ஆஞ்சனேயர் சந்நிதிகள்,  நாகாபரணத்துடன் அஞ்சலி ஹஸ்தத்தில் கருட பகவான் சந்நிதிகள் ஆகியவை, தரிசிக்க வேண்டிய இதர அம்சங்கள்.விநாயகர் சந்நிதியும் அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.  பெருமாள் சந்நிதியில் உற்சவர்கள் அலங்கரிக்கின்றனர்.

எப்போதும் விழாக்கோலத்துடன் இருந்த இந்தக் கோயிலில் வழிபாடு குன்றிய நிலையில், சில காலங்கள் மூடப்பட்டிருந்தது.  கடந்த மார்ச் 23}இல் மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. 

அக். 14-இல் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடும், அக். 15, 16-ஆம்  தேதிகளில் மகா சுதர்சன ஹோமமும் நடைபெறுகின்றன. தொடர்புக்கு:  93610 01774.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com