அரனுக்கு உகந்த அன்னாபிஷேகம்

அரனுக்கு உகந்த அன்னாபிஷேகம்

அபிஷேகப் பிரியர் சிவன்! அலங்காரப் பிரியர் விஷ்ணு! என்பார்கள். நீராடலில் மகிழ்பவன் சிவன்.

"அபிஷேகப் பிரியர் சிவன்! அலங்காரப் பிரியர் விஷ்ணு!' என்பார்கள். நீராடலில் மகிழ்பவன் சிவன்.  தினசரி அபிஷேகத்தைத் தவிர,  சிறப்புத் தினங்களில் திரவியங்களால் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதில்,  ஐப்பசி பெüர்ணமி நாளன்று நடைபெறும் அன்னாபிஷேகம் குறிப்பிடத்தக்கது.  

"உணவும் அவனே! உண்பவனும் அவனே!  அன்னம் நமது உயிர்,  இதை உட்கொள்வது நமது உடல்'  என்று வேதம் விளக்குகிறது.  பக்தன் அன்னத்தை அளித்த ஈசனுக்கு  நன்றிக் கடனை செலுத்தும் விதமாக அன்னாபிஷேகம் செய்து திருப்தி அடைகிறான்.  அன்னாபிஷேகம் செய்தால்,  "விளைநிலங்களில் நல்ல விளைச்சல் உண்டாகும்;  பட்டினி வராது;  மோட்ச சாம்ராஜ்ய பதவி நல்கும்'  என பலன்கள் கூறப்பட்டுள்ளன. 

தட்சனின் சாபத்துக்கு ஆளான சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் ஐப்பசி பௌர்ணமியன்று முழுப் பொழிவுடன் திகழ்கிறான் என்பது ஐதீகம்.  மேலும், சந்திரன் அரிசியின் மீது ஆதிக்கம் செலுத்துபவர் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 

அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும்,  அரியலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தில் ஸ்ரீபிரகதீஸ்வரருக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்பானது. மூலவர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 62 அடி சுற்றளவும், 13 அடி உயரமும் கொண்ட மிகப் பெரிய லிங்கமாகக் காட்சி தருகிறார்.  மூலவரின் அடியில் சந்திர காந்தக் கல் பதிக்கப்பட்டிருப்பதால் கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். வெளியிலுள்ள பெரிய நந்தியின் மீது படும் ஒளி, பிரதிபலித்து சுவாமி மீது படுவதால் இயற்கை ஒளியில் சுவாமியை நன்கு தரிசிக்கலாம்.  

"பிரஹந்நாயகி' என்ற திருநாமம் கொண்டு தனி சந்நிதியில் அம்பிகை அருள்கிறாள்.  மகா கணபதி சந்நிதியும் உள்ளது.  இருபது கரங்களுடன் மங்கள நாயகியாக மகிஷாசுரமர்த்தினி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறாள். 
விஜயதசமியன்று இந்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெறுகின்றன.  இங்குள்ள நவகிரகச் சிற்பம் வானசாஸ்திர அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோட்டை சிற்பங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. கங்கை கொண்டசோழபுரத்தை கம்பர்,  ஒட்டக்கூத்தர்,  ஜெயங்கொண்டார்,  சேக்கிழார் ஆகியோர் தங்கள் நூல்களில் உயர்வாகக் கூறியுள்ளனர். இந்தக் கோயில் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை நீரால் இறைவனை நீராட்டியதை நினைவுப்படுத்தும் வகையில், 108 குடங்களில் கங்கை நீரால் 1985}ஆம் ஆண்டு அபிஷேகம் செய்து,  அந்த ஆண்டு முதல் ஐப்பசி பெüர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வதற்கு காஞ்சி மகா சுவாமிகள் ஏற்பாடு செய்தார்.

இந்த ஆண்டு 39}ஆம் ஆண்டு அன்னாபிஷேக வைபவம் அசுவினி நட்சத்திரம் கூடிய பெüர்ணமி நாளான அக். 28}இல் நடைபெறுகிறது.  இதையொட்டி, அக். 26-இல் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அக்.27-ஆம் தேதி மாலை குபேர லட்சுமி திருவிளக்குப் பூஜை,  நவாவரண பூஜை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.  அக். 29}இல் உத்ராபிஷேகம், சண்டிகேஸ்வர பூஜைகள் நடைபெறுகின்றன.

அக். 28-ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் என்பதால், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் அறிவுரையின்படியும்,  இந்து சமய அறநிலையத் துறையின் வழிகாட்டுதலின் பேரிலும் அன்று காலை 9 மணிக்கு முன்பாக அன்னாபிஷேகம் ஆரம்பித்து  மாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடத்தப்படுகிறது.  பின்னர், மாலை 6 மணிக்கு அன்னஅலங்காரம் களையப்பட்டு நடைசாத்தப்படுகிறது.  பக்தர்களுக்குப் பிரசாதம் உடனடியாக வழங்கப்படுகிறது. சுமார் 8 ஆயிரம் கிலோ அரிசியில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்று அன்னாபிஷேக கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோமகன் கூறினார். 

தகவல்களுக்கு : 94439 49692 ; 98401 33800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com