சகல செல்வங்களும் அருளும் திருக்கொள்ளிக்காடு

7 லோகங்களிலும் உள்ள அனைவரையும் முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்கிறார் சனி பகவான்.
சகல செல்வங்களும் அருளும் திருக்கொள்ளிக்காடு

பஞ்ச பூதங்களில் ஒன்றான தீ, தமிழில் கொள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு என்ற இடத்தில் உள்ள அருள்மிகு பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் எனப்படும்  பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் சனிபகவான் பொன், பொருள், கல்வி, போகத்துடன் நீண்ட ஆயுளையும் தரும் சிறப்புடையவன்.

7 லோகங்களிலும் உள்ள அனைவரையும் முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்கிறார் சனி பகவான்.

நள மகராசனின் சனி விட்டது திருநள்ளாற்றில். ஆனால் சகல செல்வங்களையும் கொடுத்தது திருக்கொள்ளிக்காட்டில்தான்.

இங்கு அருள்பாலிக்கும் கொள்ளிக்காடரை திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ஓங்குபுகழ் கொள்ளிக்காடர் என்றும், இவரை இத்தலத்தில் தரிசித்தால் அனைத்துப் புகழும் கிடைக்கும் என்கிறார்.

சோழ மன்னன் ஒருவருக்கு மிகக் கடுமையான சனி தோஷம் ஏற்பட்டு அமைதி கிடைக்காமல் திருக்கொள்ளிக்காட்டுக்கு வந்து சனி பகவானைத் தரிசித்து அக்னீஸ்வரரையும் மிருதுபாத நாயகியையும் தரிசித்தபோது சனி தோஷம் நீங்கி மனம் மகிழ்ந்தாராம்.

கோயிலின் ஸ்தல விருட்சம் வன்னிமரம். பிராகாரத்தில் முருகப் பெருமான் வில்லேந்தியவராகக் காட்சி தருகிறார். மகாலட்சுமி, சனி பகவான் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். பொங்கு சனி பகவானுக்கு நேரெதிரே பைரவர் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் உள்ளது. நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் "ப' வடிவில் அமைந்துள்ளன. அக்னீஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் பஞ்சினும் மெல்லடியாள் அருள் பாலிக்கிறார்.

திருக்கொள்ளிக்காட்டில் சனி பகவான் சிவபூஜை செய்து ஈஸ்வரபட்டம் பெற்ற ஸ்தலமாகும்.இங்குள்ள பொங்கு சனீஸ்வரர் கையில் கலப்பை ஏந்தியவராகக் காட்சி தருகிறார். 

மனிதர்கள் செய்யும் பாவங்களை ஏழரை ஆண்டு சனிதோஷம் வரும் போது தண்டனை அனுபவிக்கச் செய்து புண்ணியவானாக்குகிறார் பொங்கு சனீஸ்வரர். 

எள் சாதம், உளுந்து வடை, நாவல் பழம், திராட்சை, தேங்காய், எள் தீபம், கருப்பு பட்டு, கருநீலப்பட்டு, கரு நீல புஷ்பங்கள், நீல கற்கள், இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் சனிபகவானுக்குப் பிரியமானவை. இவற்றைக் கொண்டு சனி பகவானை வழிபட்டால் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க புத்திர, தனம், தானியம், ராஜிய, வெள்ளி, ஆயுள் சம்பத்துகளை பொங்கு சனீஸ்வரர் அளிப்பார்.

கொன்றை மலரைக் கொண்டு அக்னீஸ்வரரையும் பஞ்சினும் மெல்லடியாளையும் 7 வாரங்கள் அர்ச்சித்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்றுபடுகிறது. அவ்வாறு ஒற்றுமையுடன் வழிபடும் குடும்பங்களுக்கு செல்வம், பதவி, கெüரவம், அந்தஸ்து, மன அமைதி, நீண்ட ஆயுள், பலவிதமான சுகங்கள், குபேர சம்பத்து, உத்தியோகம், பதவி உயர்வு மற்றும் சுபகாரியங்களை பொங்கு சனீஸ்வரர் அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புத்தி சுவாதீனமில்லாதவர்கள் சனி தீர்த்தத்தில் நீராடி ஆடைகளை விடுத்து புத்தாடை உடுத்தி ஊமத்தம் பூ மாலை அணிந்து அர்ச்சனை செய்து கோயிலை 7 முறை 5 வாரம் வலம் வந்து சனி பகவானைத் தரிசித்தால் நல்ல மன நிலை பெறுகின்றனர்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கோயிலாக இருந்த இக்கோயிலை முதலாம் ராஜராஜ சோழன் புதுப்பித்தான். ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் 3, கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை எடுப்பித்த முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் 2, முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள் 5, பிற சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் 5 உள்ளன. சோழர்களின் காலத்தில் இக்கோயில் மிக முக்கியத்துவம் பெற்று விளங்கியது. இக்கோயிலுக்கு நிலம், பொற்காசுகள் அளித்தோர் குறித்த விவரங்கள் கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் திருநெல்லிக்காவல் திருத்தங்கூர் வழியாக திருக்கொள்ளிக்காடு செல்லலாம்.

தொடர்புக்கு: 95853 82152.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com