கல்வியில் ஏற்றம் அருளும் ஆவணி திருவோணம்
By இரா.இரகுநாதன் | Published On : 25th August 2023 02:54 PM | Last Updated : 25th August 2023 02:54 PM | அ+அ அ- |

ஒருமுறை தன் முகத்தை கேலி செய்ததால் திருமால் மீது கோபம் கொண்ட திருமகள், "தன்னைப் பரிகாசம் செய்த இறைவனின் தலை.. ஒரு நல்லது நடக்க ஒருநேரம் அறுந்து விழும்' என சாபமிட்டுள்ளார்.
அதேநேரத்தில் சரஸ்வதி நதிக்கரையில் குதிரைத் தலையுடன் கூடிய ஹயக்கிரீவன் என்ற அசுரன் பராசக்தியை நோக்கி தவம் புரிந்து வந்தான். தேவியும் காட்சி தர, "தன்னைப் போல் குதிரை முகம் படைத்த ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும்' என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான். பின்னர், அவன் தேவர்களையும் துன்புறுத்தினான்.
மது, கைடபர் இருவரும் பிரம்மாவிடமிருந்த வேதங்களைப் பறித்து, பாதாள உலகத்துக்கு எடுத்துச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மாவும் விஷ்ணுவை வேண்டினார்.
மது, கைடபர் இருவரும் குதிரை முகம் உடையவர்கள் என்பதாலும், லட்சுமி இட்ட சாபம் நிறைவு பெற வேண்டியும் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து போர் புரிந்தார். இந்த ரூபமே "ஹயக்கிரீவர்' என்று அழைக்கப்படுகிறது.
இருவரையும் திருமால் வதைத்து மேலும் பல அசுரர்களோடு, போரிட்டு கொன்று, சோர்வுடன் பத்மாசனத்தில் அமர்ந்து, நாண் பூட்டிய தனது வில்லில் கழுத்தை சாய்த்து உறக்கத்தில் ஆழ்ந்தார். திருமாலின் துயில் காரணமாக உலகே செயலிழந்தது.
தேவர்கள் கதி கலங்க, திருமாலை துயில் எழச் செய்ய பிரம்மாவும், சிவனும் நினைத்தனர். பிரம்மாவின்உத்தரவின்பேரில், கரையான்கள் வில்லின் நாண் நுனியைக் கடிக்கவே பேரொலியோடு நாண் அறுந்து, எதிர்பாராமல் வில் திருமாலின் தலையை வெட்டி துண்டித்துவிட்டது.
திடுக்கிட்டுப் போனவர்கள் உடலில் ஒரு பொருத்தமான தலையைத் தேர்ந்தெடுத்து பொருத்த தேவச் சிற்பி துவஷ்டாவை வேண்டினர். அவரும் ஓர் அழகிய ஆண் குதிரையின் தலையை வெட்டி கொண்டு வந்து திருமாலின் கழுத்தில் பொருத்தினார். இவ்வாறு அவதரித்த நாள்தான் ஆவணி திருவோணம்.
ஹயக்கிரீவர் தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய்மையானவராகவும், அறிவு மிகுந்தவர் எனவும் பழைமையான நூல்கள் கூறுகின்றன. ஞானம், வித்தை, கல்வி, கேள்வி ஆகிய அனைத்துக்கும் அவரே உயர்ந்தவர் எனப்படுகிறது.
ஹயக்கிரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. தனது பின் வலது கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடது கரத்தில் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும், முன் வலது கரத்தில் ஏட்டையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தைப் போதிக்கும் ஞான சொரூபியாக ஹயக்கிரீவர் திகழ்கிறார்.
கி.பி. 1480-ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த மத்வ குரு மகான் ஸ்ரீவாதிராஜரும் ஹயக்கிரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் படைக்கும் பிரசாதத்தை ஹயக்கிரீவரே வந்து உண்பாராம்.
மது, கைடபர்களை அழித்த பிறகு ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தணியாததால் திருமகளை வேண்ட அவள், அவரது மடியில் அமர்ந்து சாந்தமடையச் செய்தாள். இவ்வாறு தோன்றியவரை "லட்சுமி ஹயக்கிரீவர்' என்று போற்றுகின்றனர். கல்விக்கு தெய்வமாக ஹயக்ரீவரும், செல்வத்துக்குத் தெய்வமாக லட்சுமி ஹயக்கிரீவரும் வணங்கப்படுகின்றனர்.
ஹயக்கிரீவர், தட்சணாமூர்த்தி இருவருமே ஞானத்துக்கு தெய்வகங்களாகின்றனர். ஹயக்கிரீவரின் வாய் சற்றுத் திறந்தது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இது அவர் "ஓம்' என்பதை எப்போதும் உச்சரிப்பதையே காட்டுகிறது. ச ந்திரனின் அழகிய ஒளிபோல ஹயக்கிரீவர் விளங்குவதால், அவர் சந்திரப் பிரபையில் அமைந்துள்ளது போல ஓவியங்களிலும் சிற்பங்களிலும் சித்தரிக்கப்படுகிறார்.
புதுச்சேரி - முத்தியால்பேட்டை, வாலாஜாபேட்டை திருவந்திபுரம், ஸ்ரீரங்கம், செங்கல்பட்டு - செட்டிப் புண்ணியம், தாடிக்கொம்பு ஆகிய இடங்களில் ஹயக்கிரீவர்அருள்பாலிக்கின்றனர்.
ஆவணி திருவோண நட்சத்திர நாளான ஆகஸ்ட் 29}இல் செட்டிப் புண்ணியத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
தகவல்களுக்கு - 8489782842, 8838485767.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...