சீரான வாழ்வை அருளும் சிந்தாமணிநாதர்! 

இறைவன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அம்மையப்பராக மூலஸ்தானத்தில் காட்சியளிக்கும் அரிய திருத்தலம்.
சீரான வாழ்வை அருளும் சிந்தாமணிநாதர்! 

இறைவன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அம்மையப்பராக மூலஸ்தானத்தில் காட்சியளிக்கும் அரிய திருத்தலம் "திருச்செங்கோடு' என்பதை அனைவரும் அறிவர்.  இதேபோல், மூலவர் அர்த்தநாரீஸ்வரராக அருள் வழங்கும் மற்றொரு தலம் வாசுதேவநல்லூர் ஆகும். 

சிவனை மட்டும் வணங்குவது என்ற தீவிர பக்தி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் பிருங்கி முனிவர்.  ஒரு சமயம் கயிலையில் சிவனும், பார்வதி அம்மையும் வீற்றிருக்கும்போது,  அங்கு வந்த முனிவர் வண்டு உருவம் கொண்டு சிவனை மட்டும் வலம் வந்து பணிந்து நின்றார்.  கோபம்  கொண்ட அம்பிகை,  "சக்தி இல்லையேல் சிவம் இல்லை'  என்பதை முனிவர் மூலம் உலகறிய செய்ய திரு உள்ளம் கொண்டு பூலோகத்தில் உள்ள பொதிகை மலைச்சாரலில் இருந்த சிந்தை மரங்கள் (புளிய மரங்கள்) நிறைந்த வனத்தில் அமர்ந்து சிவனை நோக்கி, கடும் தவம் புரிந்தாள்.  சிவனின் இடப்பாகம் பெற்று பாகம் பிரியாள் ஆயினாள். 

சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் (ஆண் பாதி, பெண் பாதி)  காட்சி அளிக்க,  அதனை கண்ணுற்ற பிருங்கி முனிவர் தனது தவறை உணர்ந்து அம்மையையும், அப்பனையும் வணங்கி போற்றி துதித்தார். அந்த திருக்கோலம் இந்தக் கோயிலில் உறையும் ஸ்ரீ சிந்தாமணி நாதர்,  ஸ்ரீ இடப்பாவல்லி ஆகும் என்று தல வரலாறு கூறுகிறது. 

வாசவன் (இந்திரன்)  இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றதால்,  இதற்கு "வாசவன்தேவநல்லூர்' என்று பெயர் வந்ததாக இத்தலபுராணம் பாடிய சொக்கம்பட்டி செந்தமிழ்ப் பெருங்கவி பொன்னம்பலம் பிள்ளை குறிப்பிடுகிறார்.  "வாசவன்தேவநல்லூர்' மருவி "வாசுதேவநல்லூர்'  என்று அழைக்கப்படுகிறது.  மேலும்,  வசவனூர், வாசி, என்ற பெயர்களும் உண்டு. 
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அருளிய கீர்த்தனையும் இத்தலத்துக்கு இருப்பதாக சொல்லப்படுவது உண்டு.

மூலமூர்த்தியின் சிறப்பு:  மூலவர் அர்த்தநாரீஸ்வரர் காலத்தில் சிவன் பாதியில் சூலம், பாலம் ஏந்தியுள்ளார்.  காலில் தோடும்,  வலது காலில் தண்டையும் அணிந்துள்ளார். அம்பிகையும் பாதத்தில் பாசம், பூச்செண்டு ஏந்தி காலில் கொலுசுடன் அருட் காட்சியளிக்கிறார். ஆண், பெண் வஸ்திரங்கள் தனித்தனியே முறையே அணிவித்ததில் அழகு கூட்டுகிறது. இங்கு அம்பிகையின் திருநாமம் இடப்பாவல்லி என்பதாகும். மூலவர் போன்றே உத்ஸவர் மூர்த்தி வடிவமும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டு விதமான சுவைகளுடன் புளியம்பழம் நல்கும் தல புளியமரம் இங்கு உண்டு. இந்திரனைத் தவிர, சேர நாட்டு அரசனான குலசேகரன் என்பவன் இங்குள்ள கும்ப புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட தொழுநோய் நீங்கப் பெற்றான்.

திருவிழா சிறப்பு:  ஆனி மாதத்தில் பிரம்மோத்ஸவத்தில் நடைபெறும்  தல வரலாற்று ஐதீக விழா, திருவாதிரை, சிவராத்திரி உத்ஸவம் போன்றவை சிறப்பானதாகும்.  தை அமாவாசை நாளில் நடைபெறும் மூன்று விளக்கு பூஜை நிகழ்வும் முக்கியமானதாகும்.  இதில் கருவறையிலிருந்து தீபம் கொண்டுவரப்பட்டு ஒரு விளக்கில் அர்த்தநாரீஸ்வரரை ஆவா னப்படுத்தப்படுகிறது. அமாவாசை நாளில் இப்பூஜையை கண்டு தரிசிப்பது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இறைவனை வழிபட குடும்ப ஒற்றுமை பெருகும். அமைதி நிலவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குழந்தைபாக்கியம் கிடைக்கும். தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 10 கி.மீ.  தொலைவிலும், கருப்பையாற்றின் கரையில் கோயில் அமைந்துள்ளது.  

களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com