ஏழூருக்கு எழுந்தருளும் கருணா சுவாமி

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோயில்களில்,  இந்தக் கோயிலும் ஒன்றாகும்.
ஏழூருக்கு எழுந்தருளும் கருணா சுவாமி

1,400 ஆண்டுகள் பழைமையான கரந்தை கருணா சுவாமி கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் சப்தஸ்தானங்களுக்கும் கருணா சுவாமி என்னும் கரந்தையீசுவரர் வசிஷ்ட மகரிஷி உடன்வர கண்ணாடி பல்லக்கில் ஏழூருக்கும் சென்று அருள்புரிந்து வரப்போகிறார்.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோயில்களில்,  இந்தக் கோயிலும் ஒன்றாகும்.  பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.  திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிடப் பெற்ற தலமாகும். இவ்வூர் ‘கரந்தட்டாங்குடி' என்று வழங்குகிறது. தஞ்சையின் ஒரு பகுதியாகிய ‘கரந்தை' என்பதே இவ்வாறு வழங்குகிறது. 

முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன. கரிகாலச் சோழனுக்கு கருணை பாலித்த இக்கோயிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் "வசிஷ்டேஸ்வரர்' என்றும் கருணாசுவாமி, "கருந்திட்டை மகாதேவன்' என்றும் அழைக்கப்படுகிறார்.

கருங்குஷ்ட நோயால் துன்பப்பட்ட சோழ மன்னனை சிவன் வேங்கை வடிவில் வந்து  விரட்டினார்.  பின்னர், ஓடிச் சென்று அருகில் இருந்த குளத்தில் மறைந்து விட்டார் மன்னன்.  அக்குளத்தில் மூழ்கி  வேங்கையை தேடிப் பார்க்க எங்கும் காணவில்லை. எழுந்ததும் அவனுக்கு இருந்த குஷ்ட நோய்  ஈசனின் கருணையினால் நீங்கப் பெற்றதால் கருணாசுவாமி என்று இறைவன் அழைக்கப்பட்டார்.

பங்குனி மாதம் 3, 4, 5}ஆம் தேதிகளில் சூரிய உதயத்தின்போது,  சூரிய கதிர்கள்  சிவனின் சிரசு முதல் பாதபீடம்  வரை  பூஜை செய்யும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரும் அருந்ததியும் தம்பதியராக சிவனை பூஜித்த சிறப்பு பெற்ற கோயிலாகும். அதனால் கருந்திட்டைக்குடி மகாதேவர் வஷிஸ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தலவிருட்சம் வன்னிமரம்.   தீர்த்தம் சூரிய புஷ்கரணி.   கோயில் கருங்கல்லான கற்றளி.  வெளவால் நெற்றி அமைப்பில் மண்டபங்கள்  உள்ளன. 

கரிகாற் சோழன் திருப்பணியில் சிற்பச் செறிவுடன் விளங்குகிறது. கோஷ்டத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் அழகும் நளினமும் மிக்கவை. சந்நிதிக்கு எதிரில் வசிஷ்ட தீர்த்தம் உள்ளது.  நான்கு மூலைகளிலும் வெளிப்பிரகாரத்தில் நான்கு விநாயகர் சந்நிதிகள் உள்ளன. 

கருவறைச் சுவரில் உள்ள கல்வெட்டுகளில் "கருந்திட்டைக்குடி' என்று ஊரையும், "கருந்திட்டக்குடி மகாதேவர்' என்றும் இறைவனையும் குறிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று அடிப்படையில் தஞ்சை பெரிய கோயிலான ராஜராஜேச்சுரத்துக்கு முன்னரே வழிபாட்டிலிருந்த கோயிலாகும்.  தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மராட்டிய அரசி மாதுஸ்ரீ தீபம்பாபாயி,  மாதுஸ்ரீ ராமகுமாராம்பா பாயி ஆகியோரால் கண்ணாடி பல்லக்கு, வெட்டிவேர் பல்லக்கு  ஆகிய இரண்டு பல்லக்குகள் செய்து அளிக்கப்பட்டன. 

வைகாசி புனர்பூச நட்சத்திரம் தொடங்கி,  விசாக நட்சத்திரம் வரை 10 நாள்கள் வைகாசி மகா உற்சவம் நடைபெறும்.  உற்சவம் முடிந்து 11}ஆவது நாளில் பிச்சாடனார் கரந்தையில் நான்கு வீதிகளில் வலம் வருவார்.  பின்னர் 12}ஆம் நாள் கண்ணாடி பல்லக்கில் சுவாமியும், அம்பாளும், ஏழூருக்கு பல்லக்கில் புறப்படுவது வழக்கம். 

தஞ்சாவூரைச் சுற்றிலும் அமைந்துள்ள கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோயில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர்,  தென்குடிதிட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்,  கூடலூர்  சொக்கநாதர் கோயில்,  கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில்,  புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில்,  தஞ்சை கீழவாசல் பூமாலை வைத்தியநாத கோயில் ஆகிய  ஏழு கோயில்களும் "சப்தஸ்தான கோயில்கள்'  என அழைக்கப்படுகின்றன.

பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறாமல் இருந்த நிலையில், மீண்டும் ஏழூர் பல்லக்கு விழாவை நடத்த வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மே 24}இல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
34 ஆண்டுகளுக்குப்பிறகு...: வைகாசி ரோகிணி நட்சத்திரத்தன்று வசிஷ்டருக்கும்,  அருந்ததி அம்மையாருக்கும் திருமண வைபவம் நடைபெறும்.  12-ஆம் நாள் கேட்டை நட்சத்திரத்தன்று (ஜூன் 4) கரந்தையிலிருந்து புறப்பட்டு சப்தஸ்தான தலங்களுக்குச் சென்று,    மண்டகப்படிகள் ஏற்று மக்களுக்கு அருள்புரிந்து கோயிலுக்குத் திரும்புவார்.

புதிய  கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தரும் அம்பாள் பெரியநாயகியும் தனி அம்மனும் செல்ல வெட்டிவேர் பல்லக்கில்  சப்தரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டரும் ரிஷி பத்தினி அருந்ததியும் தொடர்ந்து செல்வார்கள்.  இதுபோல் இருவேறு பல்லக்குகளில் செல்லும் நிகழ்வுகள் அரிது.

தகவலுக்கு 9367147831.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com