சனி பாதிப்புகள் நீங்க..!

தன்னைச் சுற்றி வலம் வரும் வகையில் தனி சந்நிதியைக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் இலத்தூர் அறம் வளர்த்தநாயகி சமேத மதுநாதசுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவான்.
சனி பாதிப்புகள் நீங்க..!

தன்னைச் சுற்றி வலம் வரும் வகையில் தனி சந்நிதியைக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் இலத்தூர் அறம் வளர்த்தநாயகி சமேத மதுநாதசுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவான். பரிகாரத் தலமான இந்தக் கோயிலில் வழிபட்டால் சனி பாதிப்புகள் நீங்குகின்றன.

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள இலத்தூரில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் தல வரலாறு:

சிவனுக்கும், பார்வதிக்கும் திருக்கயிலாயத்தில் திருமணம் நடைபெற்றபோது,  தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், கிருடர்கள், கிம்புருவர், காந்தர்வர், மானிடர் என அனைவரும்  வடதிசைக்கு வந்தனர். இதன் காரணமாக தென்திசை உயர்ந்ததால் பூமியின் நிலை குலைந்தது.  இதையறிந்த சிவனோ கும்பமுனி எனப்படும் அகத்தியரை தென்திசைக்குச் சென்று பூமியை சமப்படுத்தக் கூறினார்.

உடனே அகத்தியரும் தென் திசையை நோக்கி வந்தபோது அனுமன் ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றில் நீராடி அங்கு இருந்த புளிய மரத்தின் கீழ் மணலால் லிங்கம் செய்து அகத்தியர் பூஜை செய்தார்.  அப்போது மரத்திலிருந்த தேன் கூட்டிலிருந்து, தேன் வடிந்து மணலால் செய்யப்பட்ட லிங்கத்தின் மீது சொட்ட ஆரம்பித்தது. பின்பு தேனால் லிங்கம் இறுகி கல் லிங்கம் போல் மாறியது. அதைப் பார்த்த அகத்தியர் அந்த லிங்கத்தை மதுநாதா (தேனுக்கு மது என்ற பெயரும் உண்டு) என அழைத்தார்.  அகத்தியர் வழிபட்ட மதுநாதர் எழுந்தருளியுள்ள இந்தக் கோயிலே மதுநாதசுவாமி கோயில் எனவாயிற்று.  புளியமர இலையின் தூரிலிருந்து தேன் வடிந்ததால் இவ்வூர் இலைத்தூர் என்றாகி காலப்போக்கில் இலத்தூர் ஆனது எனவும் கூறப்படுகிறது.

ராமன், லட்சுமணன் ஆகியோர் வானர சேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே அனுமன் தனது கதையினால் ராமநாமம் சொல்லி ஒரு பாறையில் அடித்தார். அந்த பாறை வழியாக ஆகாய கங்கை பெருகி வந்தது. அதுவே அனுமன் நதியானது என்றும் கூறுவர்.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வலம்புரி விநாயகர், சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி,  அன்னபூரணி, ஆறுமுக நயினார், வள்ளி}தெய்வானை ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.   16 படிகளுக்கு மேலே லிங்கத்தின் நடுவே யானை வாகனத்தில் அமர்ந்து ஐயப்பன் தரிசனம் தருகிறார். 

பெரும்பாலான கோயில்களில் தட்சிணாமூர்த்தி சந்நிதி பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் சுவாமி சந்நிதியின் விமானத்தின் கீழே இவரது சந்நிதி அமைந்துள்ளது. வைரவரும் தன்னை வலம் வரும் வகையில் சந்நிதி கொண்டுள்ளார்.

இந்தக் கோயிலில் அபயஹஸ்த நிலையில் சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.  பக்தர்கள் வலம்வரும் வகையில் சிவனுக்கும் அம்பாளுக்கும் மத்தியில் ஆறுமுக நயினார் சந்நிதிக்கு எதிரே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முக்கிய நாள்களில் சனீஸ்வரன் உற்சவ மூர்த்தியாக திருவீதி உலா வருவது சிறப்பு. கண்டச் சனி, அஷ்டமச் சனி, பாதச் சனி, ஏழரைச் சனி பாதிப்புள்ளவர்கள் இவரை வழிபட்டால் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஏழரைச் சனி விலக, இக்கோயிலின் எதிரேயுள்ள அகத்தியர் குளத்தில் நீராடி விட்டு தரிசித்தால் பெரும் பலன்களைப் பெறலாம்.  சிவனையே சனி பகவான் சில காலங்கள் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார். சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும் என்பர். சிவன் ஏழரைச் சனி காலத்தில் ஏழரை நாளிகை இக்குளத்திலுள்ள குவளை மலருக்கடியில் மறைந்திருந்தார் என்று கூறுகிறார்கள்.இங்குள்ள சனீஸ்வரனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், புத்திரபாக்கியம் கிடைக்கும் என ஐதீகம்.  சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபட குளத்தை யொட்டி  தனியே இடம் அமைக்கப்பட்டுள்ளது.

6 கால பூஜைகள் நடைபெறும் கோயிலில் காலை 5 மணி முதல் 11.15 வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8.15 வரையும் நடை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரையும் நடை திறந்திருக்கும். 

தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து இலத்தூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு 94870 58606.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com