துயர் துடைக்கும் துறவூர் நரசிம்மர்!

மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தைப் போற்றும் கோயில்கள் நிறைந்துள்ளன.
துயர் துடைக்கும் துறவூர் நரசிம்மர்!

மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தைப் போற்றும் கோயில்கள் நிறைந்துள்ளன. அதில்,  கேரள மாநிலத்தில், கண்ணூர் லட்சுமி நரசிம்மரும், துறவூர் நரசிம்மரும் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து நரசிம்மர் தோன்றியதுபோல, முருங்கோட்டு அடிகள், மன்னனுக்காக பூமியைப் பிளந்து வெளிப்பட்டவராக விளங்குகின்றார்.

கேரளத்தை கேரளாந்தகன் என்ற அரசன் ஆட்சி செய்தபோது,  இவருடைய குரு அரண்மனைக்கு அருகில் துறவியாக இருந்து ஆலோசனைகளை அளித்து வந்தார். ஒருசமயம் துறவி சிவாலயம் சென்றபோது, அர்ச்சகர் கோயிலில் பிக்ûக்ஷ வாங்கிச்செல்லும்படி கூறவே அவரும் பெற்றார்.  அந்தப் பிரசாதம் தன் தந்தையின் ஈமச்சடங்கின் பிரசாதம் என்பதை அறிந்தார். அதனால், அடுத்த பிறவியில் நாயாக பிறக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டார்.
அரசனிடம்  நடந்ததைக் கூறி, "" நான் மூன்று மாதத்தில் தம் உடலை விட்டு பிரிந்து செம்பழுப்பு நிற நாயாக பிறப்பெடுப்பேன். என்னை மாமிசம், எச்சில் உணவுகளை சாப்பிடாமல் பார்த்துக் கொண்டால் எனக்கு மோட்சம் கிடைக்கும்''  என்றார். அதன்படியே நாயாகப் பிறந்த அவரை பராமரித்து வந்தார் அரசன்.  

ஒருநாள் ஆற்றில் நீர் அருந்த சென்ற நாய் அங்கிருந்த கழிவை உண்ணச் சென்றது. இதைக் கண்ட அரசன் உணர்ச்சி வசப்பட்டு, தன்னிடம் இருந்த வாளால் நாயை வெட்டி சாய்த்தார். அறியாமல், குருவைக் கொன்ற பாவத்துக்குப் பரிகாரம் தேடி சோட்டானிக்கரைக்குச் சென்று முருங்கோட்டு சுவாமிகளைச் சந்தித்தார். அதன்படி "ஆல்வாய்'  என்ற தலத்தில் கோயில் எழுப்பினார்.  அது "நாய்தோடு' என்று அழைக்கப்படுகிறது. இங்கு முருங்கோட்டு அடிகள் நிறுவிய சங்கரநாராயணர் கோயிலும் உள்ளது.

முருங்கோட்டு அடிகளுக்கு தட்சிணை தந்தபோது, அதனை, காசி பயணத்துக்குப் பின்னர் பெற்றுக்கொள்வதாகக் கூறி மறுத்தார். அதன்படியே முருங்கோட்டு அடிகள் காசிக்குச் சென்றார். அங்கு அவர் தியானம் செய்தபோது, நரசிம்மர்  காட்சி அளித்தார். "முனிவரே, நாளை பகலில் வானில் ஒரு ஜோதி தெரியும்.  நீ அதன் பின்னே செல். அது ஓரிடத்தில் மறையும்.அங்கு தோண்டினால், உனக்கு ஒரு நரசிம்மர் வடிவம் கிடைக்கும். அரசனிடம் தட்சிணை பெற்று,அதை துறவூரில் , சுதர்சனர் பக்கத்தில் வைத்து கோயில் எழுப்ப வேண்டும்''  என அசரீரி கேட்டது.

அதன்படியே பின்தொடர்ந்தார், அடிகள்.  அந்த ஜோதி இன்றைய துறவூர் அடுத்துள்ள பூதநிலம் எனும் வளமங்கலம் வந்ததும் பூமிக்குள் ஐக்கியமானது. அங்கு தோண்டியபோது நரசிம்மரும் கிடைத்தார். அவரை துறவூர் சுதர்சனர் சந்நிதி அருகில் நிறுவி, வழிபாடுகள் தொடங்கின. இதன் நினைவைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இந்த பூதநிலத்திற்கு துறவூர் மூர்த்திகள் இருவரும் வந்து செல்லும் உற்சவம் நடத்தப்படுகின்றது.
நெடுஞ்சாலையை ஒட்டி பிரம்மாண்ட திருக்குளம் அமைந்துள்ளது.அதையொட்டியபடி, கிழக்கு நோக்கிய கோயில் அமைந்துள்ளது.

நரசிம்மர் கோயிலாக இருந்தாலும், இரண்டு பெருமாள் சந்நிதிகளைக் கொண்டுள்ளது. இரண்டு பலிபீடங்கள், இரண்டு வாயில்கள், இரண்டு நமஸ்கார மண்டபங்கள், இரண்டு தங்கக் கவசம் போர்த்திய கொடிமரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள நரசிம்ம பெருமாளை  "வடக்கப்பன்'  என்றும், அடுத்துள்ள சுதர்சனப் பெருமாளை "தெக்கப்பன்'  என்றும் அழைக்கின்றனர்.

மேற்கு வெளிப்புறத்தில், மிகப் பெரிய அரசமரம் உள்ளது. இதனடியில் பகவதி சந்நிதி உள்ளது. இவளுக்கு நித்திய பூஜைகள் செய்யப்படுகின்றன. இவளே இத்தலத்தின் ஆதி தெய்வமாவாள். நரசிம்மர் இத்தலம் வந்ததும் அவருக்கு இடம் தர மறுப்பு தெரிவித்தாள். இதனால் ஆவேசம் கொண்ட நரசிம்மர் எட்டி உதைக்க, அவள் இம்மரத்தடியில் விழுந்ததாக கூறப்படுகிறது.அவளின் இடத்தில் நரசிம்மர் அமர்ந்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
ஐப்பசி அமாவாசைக்கு ஒன்பது நாள்கள் முன்பு கொடி ஏற்றப்பட்டு,அமாவாசையில் ஆராட்டு விழா நடைபெறும். சித்திரையில் பத்து நாள்கள் உற்சவம். பத்தாம் நாளன்று இரு மூர்த்திகளும் பூதநிலம் சென்று வரும் உற்சவம் நடைபெறும்.

இத்தலத்தில் நரசிம்மர் அமரும்போது பலத்த வெடிச்சத்தம் கேட்டதன் நினைவாக, இங்கு வெடி வழிபாடு முக்கியமானதாக விளங்குகின்றது. அதுபோல, இங்கு விநியோகிக்கப்படும் பால் பாயசம் மிகவும் சிறப்பானது.
திருக்குளம் 300 அடி நீளமும், 240 அடி அகலமும் கொண்டு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆலப்புழை } எர்ணாகுளம் நெடுஞ்சாலையில் ஆலப்புழையில் இருந்து 35 கி.மீ., தொலைவில் துறவூர் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com