நினைத்தது நிறைவாக்கும் நீலவேணி விநாயகர்

வித்யாகரன் என்ற அசுரனின் கடும் தவத்துக்கு பிரம்மா மனம் இறங்கினார்.  
நினைத்தது நிறைவாக்கும் நீலவேணி விநாயகர்
Updated on
2 min read

வித்யாகரன் என்ற அசுரனின் கடும் தவத்துக்கு பிரம்மா மனம் இறங்கினார்.   அவன் சாகாவரம் கேட்க, பிரம்மா மறுத்தார். பின்னர்  சிந்தித்த வித்யாகரன், "தனக்கு மனிதர்களாலோ,  மிருகங்களாலோ, அகோரமானவர்களாலோ அழிவு  வரக் கூடாது.  எனக்கு எதிரியாக வருபவன்  தேவ, அசுர சபைகளின் முன்பு எவர் உதவியும் இல்லாமல் தன்னுடன் போர் புரிய வேண்டும்.  அதே நேரம் அவன் ஒரு பெண்ணோடு பிணைந்தே  இருக்க வேண்டும்' என்றான். பிரம்மாவும் வரம் தந்தார்.

வரம் பெற்றவனோ,  தேவர்கள், முனிவர்களுக்கு அல்லல் தரவே,   இவர்கள் ஒன்று கூடி மும்மூர்த்திகளிடம்  முறையிட்டனர். விநாயகருக்காக மிகப் பெரிய யாகம் ஒன்றை தாமிரவருணி நதிக்கரையில் தொடங்குமாறு மூம்மூர்த்திகள் கூறினர்.   பதங்க முனிவர் தலைமையில்  அனைத்து முனிவர்களும் வளர்த்த யாகத்தில் விநாயகர் கோடி சூரிய ஒளியுடன்  தோன்றினார்.    பின்னர்,   நீலவேணி என்னும் சக்தி உருவானாள்.  இருவருக்கும் மணம் முடித்து வைத்தனர்.

வித்யாகரனை போருக்கு அழைக்க அவனும் சினத்தோடு களத்துக்கு வந்தான்.   விநாயகர் துதிக்கையை தேவியின் மடியில் வைத்தபடி இருந்தார்.  வித்யாகரன் தொந்தரவு செய்திட, வெகுண்ட விநாயகர்,  மகிழ்ந்திருந்த நிலையிலேயே நோக்க,  ஒளிக்கதிர் வீச்சின் வெப்பத்தால்  பொசுங்கிப் போனான்.  தேவர்கள் விநாயகரைப் பூ மழை பொழிந்து துதித்தனர். இந்தக் கோலத்துடன் விநாயகரும் கோயில்  கொண்டார். 

மணிக்கிரீவன் எனும்  குபேரனின் மகன்  நீதிமான் சிவ பக்தன். விநாயகரிடம் சகோதரப் பாவனையில் பக்தி கொள்பவன். மணிக்கிரீவன்  நந்தவனத்துக்குச் சென்றபோது  கந்தர்வன் சித்ரசேனன் மகள் சித்ரலேகாவைக் கண்டான். 

இரு வீட்டார்   ஒப்புதலுடன்  திருமணம் நடைபெற்றது.  மற்றொரு கந்தவர்னின் மகள் லீலாவதியும்  மணிக்கிரீவன்  அழகில் மயங்கி தன்னையும் மனைவியாக ஏற்க வேண்டினாள்.  மறுத்த மணிக்கிரீவனின் அழகு   அழிய வேண்டும் என லீலாவதி சாபமிட்டாள். மணிக்கிரீவனின்  எதிர்சாபத்தில்  அவளும் அழகிழந்தாள்.  மணிக்கிரீவனோ  உச்சிஷ்ட விநாயகரிடம்  வேண்ட,  ""தட்சிண பாரத   தாமிரவருணி கரையில்  நீராடி  கால பைரவரை பூஜித்தால் உன் சாபம் தீர்ந்து பழைய வடிவம் பெறுவாய்'' என்றார்.  லீலாவதிக்கும் சாபம் விமோசனமாக, ""சித்ரலேகா, லீலாவதியுடன்  குபேரபட்டினத்தில் வாழுங்கள்'' என ஆசிர்வதித்து, தும்பிக்கையால் மூவரையும் தூக்கி, தாமிரவருணிக்கரையில் சேர்த்தார்.   

இதன்படி, குபேரப்பட்டினத்தில்  மூவரும் நெடுநாள் வாழ்ந்தனர். மணிக்கிரீவனின் சாப விமோசனம் நடந்த இடமே மூர்த்தி உறையும்   மணி மூர்த்திஸ்வரம் ஆகும். இவ்விடத்தில் பைரவ தீர்த்தம், மணிக்கிரீவ தீர்த்தம், விக்னேஸ்வர தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் உள்ளன.  கோயில் நிலை வாயில் கதவில் முக்கிய 16  விநாயகர்  சிற்பமாகக் காட்சி தரும் ஐந்து அடுக்கு ராஜ கோபுரமும் உள்ளது. கருவறையில்  உச்சிஷ்ட கணபதி பிரதானமாக இருக்கும் ஒரே கோயில் இதுவேயாகும். 16 முக்கியமான விநாயகர் வடிவங்களில்  உச்சிஷ்ட கணபதி  நீலவேணி  சமேதராக  எழுந்தருளியிருக்கிறார்.

"உச்சிஷ்ட' என்றால்   "இருப்பதிலேயே உயர்வானது'  என்று ஒரு பொருள்  உண்டு. மாயையான உலகில் மாயைகளை நீக்கிவிட்டால் எஞ்சியிருப்பது இந்தப் பிரம்மம்தான். இக்கோயிலை மீள உருவாக்கியவர் மூர்த்தி செட்டியார் என்ற மணப்படை வீடு ராஜா.  இந்தக் கோயிலை எடுத்துக் கட்டி குழந்தைப் பேறு பெற்றார் . சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய  முற்காலப் பாண்டியர் காலக் கோயிலாகும் .

திருநெல்வேலி தாமிரவருணி நதியின் ரிஷி தீர்த்தக் கட்டத்தின் மேற்கு கரையில், ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன்  கிழக்கு திசையை  நோக்கி கோயில் அமைந்துள்ளது.  பலி பீடம், கொடிமரம்,  மூஷிகம், கருவறைக்கு அருகில் தனி சந்நிதியில் நெல்லையப்பரும் காட்சி அருளுகின்றனர். பிரகாரத்தில் 32 விநாயகரின் திருவுருவச்  சந்நிதிகள்,   தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், காந்திமதி அம்மை, சித்தர்களின் ஜீவ சமாதி, கன்னி மூலகணபதி,  சுப்பிரமணியர்,  சொர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதிகள் உள்ளன. வியாழன், வெள்ளிக்கிழமைகளில்  விநாயகரைத் தரிசனம் செய்ய நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.  

திருமணத் தடைகள் நீங்க, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழ, சகல சௌரியங்களும் கிடைக்கப் பெறலாம். திருநெல்வேலி ரயில்வே, மாநகர சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு  9489556441; 9443549441

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com