அருள் வழங்கும் அருளாளீசுவரர்
By -கி. ஸ்ரீதரன் | Published On : 15th September 2023 04:28 PM | Last Updated : 15th September 2023 04:58 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகம் வரலாற்றிலும் - வழிபாட்டிலும் சிறப்புப் பெற்றதாக அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் திருச்சி நெடுஞ்சாலையில், ஏலவார்குழலி உடனாய அருளாளீசுவரர் கோயில் உள்ளது. இங்கு வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கப் பெற்று, அருள் பெறுகின்றனர்.
சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் சிறப்பு பெற்று விளங்கியது. முதலாம் பராந்தகச் சோழன் கால கல்வெட்டில் "ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் மதுராந்தக சதுர்வேதிமங்கலம்" எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர் "தனியூர்' என்ற சிறப்புப் பெற்று விளங்கியதையும் அறிய முடிகிறது.
இவ்வூரில் ஏரிகாத்த ராமர் கோயில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. ஏரியில் வெள்ளம் நிரம்பி வழிந்து ஏரியின் கரை உடைந்து விடாமல் மக்களை ராமபிரான் காப்பாற்றிய வரலாறு அனைவரும் அறிந்த செய்தியாக விளங்குகிறது.
ராமபிரானை "அயோத்தி பெருமான்", "திருஅயோத்தி கருணாகரப் பெருமாள்' எனக் கல்வெட்டுகள் அழைப்பதைக் காண முடிகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தில் கிழக்குப் பகுதி "கடப்பேரி' என அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் "திருவெண்காட்டீசுவரர்' என்று பெயர் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயிலும் வரலாற்றுச் சிறப்புடையதாக விளங்குகிறது.
மதுராந்தகம் நகரில் ஏரி காத்த ராமர் கோயிலுக்கு தென்பகுதியில் "செங்குந்தர்பேட்டை' என்று அழைக்கப்படும் பகுதியில் ஏலவார்குழலி உடனாய அருளாளீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இறைவன் கருவறையில் சிவ லிங்க வடிவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். திருச்சுற்று மாளிகையில் விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் சந்திதிகள் அமைந்துள்ளன. முன் மண்டபத்தில் ஏலவார்குழலி அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற கோலத்தில், மேற்கரங்களில் அங்குசம் } பாசம் தாங்கியும், முன் இரு கரங்களில் அபய - வரத முத்திரை தாங்கியும் அருள் வழங்கும் காட்சியைக் கண்டு மனம் உருக வழிபடலாம்.
முன் மண்டபத்தில் நடராஜர் சந்நிதியும், எதிரில் நால்வர் சந்நிதியும் அமைந்துள்ளன. வடகிழக்கு மூலையில் பைரவர் அருள்புரிகின்றார். கோயிலின் வாயிலில் வரசித்தி விநாயகர், அடுத்து லட்சுமி விநாயகர், நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவை அமைத்து சிறப்பான வழிபாடுகள் மாதம்தோறும் நடைபெற்று வருகின்றன. நடராஜப் பெருமானுக்கு ஆறு அபிஷேகங்கள், கந்த சஷ்டி திருநாள் வழிபாடு, ஆடிப்பூரத்தில் அம்பாள் திருவீதி உலா போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோயிலுக்கு வன்னிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் தொழில் அபிவிருத்தி அடையவும், பிரச்னைகள் தீரவும், குழந்தை செல்வம் அடையவும் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்தக் கோயிலில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விக்கிரமசோழன் (1118 - 1136) காலத்தில் கோயில் திருச்சுற்றுமாளிகையுடன் கட்டப்பட்டு, வழிபாடுகளுக்கு தானம் அளிக்கப்பட்டதை அறியமுடிகிறது. இறைவன் "அகளங்கீசுவரம் உடைய மகாதேவர்' என பெயரிட்டு அழைக்கப்படுகிறார். விக்கிரமசோழனுக்கு "அகளங்கன்" என்ற சிறப்புபெயர் உண்டு. பின்னர், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் வழிபாட்டுக்காகத் தானம் அளித்த செய்தியுடன் "அருளாகரஈசுவரமுடையார்' எனவும் அழைக்கப்படும் செய்தியை அறிய முடிகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டல பூஜைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
(தொல்லியல் துறை } பணி நிறைவு).
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...