ஸ்ரீஹரி நாம சங்கீர்த்தனம்
By பூ. ஸ்ரீநிவாஸ ராமாநுஜம் | Published On : 22nd September 2023 05:53 PM | Last Updated : 22nd September 2023 05:53 PM | அ+அ அ- |

ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தில் "நாம சங்கீர்த்தனம்' என்பது முக்கியமான, தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் குக்கிராமங்கள்தோறும் பெருமாள் கோயில்களில் உற்சவமும், நாம சங்கீர்த்தனமும் நடைபெற்றுவருவது கண்கூடு. ஸ்ரீ ராம
பிரான் என்றாலே நாம சங்கீர்த்தனம் (பஜன்)தான். நம்முடன் வாழ்ந்து மறைந்த எண்ணற்ற தாஸ ஸ்ரேஷ்டர்கள் ஸ்ரீ ராமபிரான் குறித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் எண்ணிலடங்கா கீர்த்தனங்களை அனுபவித்துப் பாடி, ஆடி ஆனந்தித்திருக்கிறார்கள்.
பத்ராசலம் ஸ்ரீ ராமதாஸர்
"ராமா தய சூடவே பத்ராசல தாமா நனு ப்ரோவவே', "ஓ ராமா
நீ நாமம் ஏமி ருசிரா' எனவும், தூமு
ஸ்ரீ நரசிம்ம தாஸர் "நமோஸ்துதே ரகு நாயகா' எனவும், அல்லூரி ஸ்ரீ வேங்கடாத்ரி ஸ்வாமி "ஷரணு ஷரணு ஷரணு ஸ்ரீராம ராம ராமச்சந்திர' எனவும், ஸ்ரீ தியாகய்யர்
"என்னுடு ச்சுதுனு யெனகுல
திலகா', "நிதி சால சுகமா ராமுடு ஸந்நிதி சால சுகமா' என்றும், ஸ்ரீ பைடிகண்டம்
ஸ்ரீ ஆதிநாராயண தாஸர் "ஆனந்த ராமுனி நேனு மனசு ஆனந்தமுக நீவு ச்சூடு' என்றும், ஸ்ரீ வேங்கடவரத தாஸர் "ராரா கோதண்டராமா நனு ப்ரோவவேரா ஸ்ரீ பரந்தாமா' எனவும், தேனுவகொண்ட ஸ்ரீ வேங்கடரங்க தாஸர் "சரணாகதுடனுரா சரஜிபந்தன ராமச்சந்த்ர ராரா' எனவும், ஸ்ரீ ராகவ ராமாநுஜதாஸர் "தசரத ராமா தாஸýலனு காஸிபெட்டகு ரா ராமா' எனவும், ஆற்காடு ஸ்ரீ பால ராமாநுஜதாஸர் "பக்துனி கருணிஞ்சு ரகு ராமா ஓ பரந்தாமா' எனவும், கொத்தயிண்டி ஸ்ரீ துளசிதாஸர் "ராமா ஸ்ரீ ரகுகுல ஜலநிதி சந்த்ரா நீவு ராரா' எனவும், ஸ்ரீ வேங்கடவிட்டல தாஸர் "சரணு ஜொச்சிதி நன்னு கருணிஞ்சு ராமா' எனவும், ஸ்ரீ பராங்குச தாஸர் "நின்னே நம்மிதி ராமையா நேனு ரக்ஷிம்பகுன்ன வேமையா' எனவும், ஸ்ரீ அன்னமையா "ஜெய ஜெய ராமா சமர விஜய ராமா' எனவும் பாடி ராமநாம மகிமையைப் பரப்பியிருக்கிறார்கள்.
தவிர, ஸ்ரீ ராமபிரானின் புதல்வர்களான லவனும் குசனும் பாரெங்கும் "ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே' என ராம கதையைப் பரப்பியதாகவும் கூறப்படுகிறது.
கலிஸந்தரண உபநிஷதத்தில் (கலியாகிய சம்ஸôரக் கடலை கடக்கச் செய்யும் உபநிஷத்) ஸ்ரீ நாரத முனி படைப்புக் கடவுள் பிரம்மாவைப் பார்த்து, "கலிகாலத்தில் அனைத்துப் புண்ணியங்களையும் தரவல்லதாயும், அனைத்து வேதங்களின் ரகஸ்ய சாரமாயும், கலியினால் பீடிக்கப்பட்ட சம்ஸôரக் கடலை நீந்திக் கடப்பதில் பேருதவியாகவும் உள்ள மந்திர உபதேசம் எது?' என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த நான்முகக் கடவுள், "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்ற ஷோடச நாமத்தை உபதேசம் செய்தார். "இதற்கு ஈடு இணை எந்த வேதத்திலும் காணப்படவில்லை' என்றார்.
"இதை ஜபம் செய்வதால் ஜீவர்கள் பதினாறு கலைகள் விளங்கப் பெற்று, ஜீவனைச் சூழ்ந்துள்ள மாயையாகிய திரையையும் விலக்கிக் கொள்ள முடியும்' என்றார். "இந்த மந்திரமே கோடி சூர்ய பிரகாசமாக பிரபஞ்சத்தில் ஒளி வீசுகிறது' என்றார்.
"இதைப் பாராயணம் செய்ய என்ன விதிமுறை?' என்று நாரதர் கேட்க, "இது சுத்தத்துடனோ, சுத்தமில்லாமலோ எந்த நிலையிலும் சொல்லத்தக்கது. எந்த விதிமுறையும் இல்லாதது. இதை ஜபம் செய்வதால் பகவானின் தரிசனமும், நெருக்கமும், பகவானின் வடிவும், அவரது திருவடிகளும் நமக்குக் கிடைக்கும்' என்று பிரம்மா பதிலளித்தார். மேலும், அவர் "இதை மூன்றரை கோடி முறை ஜபம் செய்வதால் பிரம்மஹத்தி தோஷமும் தீர்கிறது என்றால் என்னே இதன் மகிமை. பித்ருக்கள், தேவர்கள், மனிதர்களுக்கு நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த அபசாரங்கள் அனைத்தும் விலகும். அனைத்து தர்மங்களையும் கைவிட்ட பாபமும் இந்த நாம ஜபத்தால் நீங்குகிறது' என்றார்.
இந்த கலியுகத்தில் நம்மை பக்தி வழியில் செலுத்தவும், சம்ஸôர சாகரத்தைக் கடந்திடச் செய்யவும், வீடு பேற்றை தருவதும் இந்த "ஷோடச நாம ஜபம்' என்பது முற்றிலும் சத்தியமான வாக்கு என்கிறது உபநிஷத வாக்கியம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...