சிறப்பு மிகுந்த சித்திரை மாதம்

சிறப்பு மிகுந்த சித்திரை மாதம்

தமிழ்ப் புத்தாண்டு "குரோதி' சித்திரை மாதத்துடன் தொடங்குகிறது. இந்த மாதத்தை "இளவேனிற்காலம்', "வசந்த காலம்' என்று அழைக்கிறோம். கடும் வெயிலைத் தணிக்க இளநீர், பதநீர், பனை நுங்கு, தென்னங்கீற்று பந்தல் போன்ற இயற்கையான பொருள்கள் பெரிதும் மக்களுக்கு உதவுகின்றன. பல கோயில்களில் சிறப்பான திருவிழாக்களும், தேர்த் திருவிழாக்களும் நடைபெற்று, ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட மாதமாக சித்திரை விளங்குகிறது.

நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் பெரிய புராணத்தை சேக்கிழார் சித்திரைத் திருவாதிரை நாளில் தொடங்கி, அடுத்த சித்திரை திருவாதிரையில் முடித்து அருளினார். ஞானசம்பந்தர் திருப்பதிகம் அருளிச் செய்யத் தொடங்கியதும் சித்திரை திருவாதிரை நாளாகும். "எண்ணுகேன் என் சொல்லி" என்று அப்பர் பதிகம் பாடி இறைவன் திருவடியை அடைந்ததும் சித்திரை சதய நாளாகும்.

ராமானுஜர் அவதரித்ததும் சித்திரைத் திருவாதிரை நாளாகும். மதுரகவி ஆழ்வார், நடாதூர் அம்மாள், உய்யக்கொண்டார் போன்ற வைணவ ஆச்சாரியர்கள், உமாபதி சிவாசாரியார், இசைஞானியார், திருக்குறிப்புத் தொண்டநாயனார், திருநாவுக்கரசர், சிறுத்தொண்ட நாயனார், மங்கையர்க்கரசியார், விறன்மிண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் திருநட்சத்திரங்களும் சித்திரை மாதத்தில்தான் வருகின்றன.

சோழ மன்னர்களில் கடற்கரைப் பட்டினமான பூம்புகாரில் "இந்திர விழா' எனும் சித்திரை விழா சிறப்புற நடைபெற்றதை மணிமேகலை எடுத்துக்கூறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட திருவேங்கைவாசல் கோயிலில் சித்திரைத் திருவிழா நாளில் இறைவன் முன்பு "சாந்திக் கூத்து" நடத்த பெண்ணொருத்தி நிலம் அளித்ததாக விக்கிரமச் சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கும்பகோணம் அருகேயுள்ள மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலில் சித்திரை மாதத்தில் "தமிழ் கூத்து" நடத்த விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றன் என்பவன் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நில தானம் அளித்துள்ளார்.

திருவாரூர் கோயிலில் சித்திரை மாதம் சதய விழா ஒன்று வீதிவிடங்கப் பெருமான் தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளியபொழுது "தியாக வினோத தலைக்கோலி' என்ற தலைசிறந்த ஆடல் மகள் ஒருத்தி நடனம் ஆடியதாக

விக்கிரம சோழன் கல்வெட்டு அளிக்கும் செய்தியினால் நம்மால் அறிய முடிகிறது.

திருவாரூர் கோயிலில் நடைபெற்ற வசந்த விழாவின் சிறப்பைப் பற்றி பெரிய புராணம் கூறுகிறது. மயிலாப்பூர் கோயிலில் நடைபெற்ற வசந்த விழா பற்றி ஞானசம்பந்தர் பதிகத்தில் எடுத்துரைக்கின்றார். வசந்த விழாவின்போது இறைவன் வசந்த மண்டபத்தில் மாலை வேளையில் எழுந்தருளுவார். எழுந்தருளும் மண்டபத்தைச் சுற்றி தண்ணீர் நிரப்பப்பட்டு குளிர்ச்சியாக இருக்கும். திருவரங்கம் கோயிலில் வசந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. வசந்தத் திருநாள் நடத்த தானம் அளிக்கப் பெற்றதாக பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழத்தை இறைவனுக்கு அமுதாக படைத்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தில் சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை மாம்பழம் தர நிபந்தம் செய்து கொடுத்ததாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. திருவரங்கத்துப் பெருமானுக்கு சித்திரை திருவிழாவில் பத்தாம் நாள் விழாவில் இளநீர் அமுது படைக்கும் வழக்கம் உள்ளது.

திருவிழாக்களுக்கு வருவோருக்கும், வழிநடையாகச் செல்வோருக்கும் வெயில் அதிகமுள்ள சித்திரை, வைகாசி மாதங்களில் தண்ணீர் பந்தல் வைத்து தாகத்தை தீர்க்க, நீர், மோர், பானகம் அளிக்கும் பழக்கம் உள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த உக்கல், உத்திரமேரூர், திருச்சி அருகே திருச்செந்துறை, திருப்பராய்த்துறை போன்ற கோயில்களில் மண்டபங்களில் தண்ணீர்ப் பந்தல் இருந்ததை கல்வெட்டுகளில் அறியமுடிகிறது.

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண விழாவும், கள்ளழகர் ஆற்றில் இறங்கி சேவை சாதிக்கும் வைபவமும் சிறப்பானது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். திருச்செங்காட்டங்குடி கோயிலில் நடைபெறும் சிறுத்தொண்டநாயனார் அமுது படையல் விழா மிகவும் சிறப்பான விழாவாகும். தஞ்சை அருகே திருவையாற்றில் நடைபெறும் "சப்தஸ்தான விழா' குறிப்பிடத்தகுந்த விழாவாகத் திகழ்கிறது.

தொல்லியல் துறை (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com