தமிழகத்திலேயே அயோத்தி

தமிழகத்திலேயே அயோத்தி

பல மலைகளை அரணாகக் கொண்ட ஷைலா ( சிலா) பர்வதங்களுக்கு இடையில் பரத்வாஜ முனிவர் ஆசிரமம் அமைத்து, தனது சீடர்களுடன் தங்கியிருந்தார். ராவணனை வென்று அயோத்திக்கு சீதை, லட்சுமணன், அனுமன், சுக்ரீவன், விபீஷணன், பிற பரிவாரங்களுடன் ராமர் திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் இரவு நேரத்தில் மலையைக் கடக்காமல் ஆசிரமத்தில் தங்கினர்.

மறுநாள் அயோத்தியில் ராமருக்கு பட்டாபிஷேக முடிசூட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களால் அயோத்தியை அடைய முடியவில்லை. எனவே பரத்வாஜ முனிவர், "நல்ல நேரத்தில் இங்கேயே முடிசூட்டி பட்டாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்' என வேண்டினார். இதை ஏற்று விழாவும் நடைபெற்று, அவர்கள் மூன்று நாள்கள் தங்கி இருந்தனர். இதனால், பரத்வாஜ முனிவர் ஆசிரமமும் நந்தவனமும் இருந்த இடம் "அயோத்தியாப்பட்டினம்' என அழைக்கப்படலாயிற்று. சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில் கோதண்டராமசுவாமி கோயில் அமைந்துள்ளது.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான தகடூர் அதியமான் இக்கோயிலின் கருவறையை முதலில் கட்டினார். பின்னர், விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் மீளவும் எடுத்துக் கட்டப்பட்ட கருவறையில், ராமரும் சீதையும் பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். ராமர், சீதைக்கு பரதன் வெண்குடை பிடிக்க லட்சுமணன் வில்லுடன் நிற்க, சத்ருனன் கவரி வீச சேவை செய்தபடியும், அங்கதன் உடைவாளேந்தி நிற்க, சுக்ரீவன், ஆஞ்சனேயர் விபீஷ்ணன் ஆகியோர் வணங்கியபடியும் உள்ளனர்.

முன்புறம் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், கொங்கு நாட்டு சிறப்பம்சம் கொண்ட கருடனுடன் கூடிய தீபஸ்தம்பம், சிறு மண்டபத்துடன் கோயிலின் வெளியே அமைந்துள்ளது. கருவறையின் முன்புறம் சிறிய அர்த்தமண்டபமும் அதன் முன்புறம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்க மகாமண்டபமும் அமைந்துள்ளன. முன்மண்டபம் பட்டாபிஷேகம் நடந்த அரசர் ராமர் தேர் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்திலிருந்து கீழிறங்க வடக்கு வாசல், தெற்கு வாசல் என இரண்டு படிக்கட்டு வாயில்கள் உள்ளன.

திருமலை நாயக்கர் கால இம்மண்டபத்தை சிற்ப வேலைப்பாடு மிக்க இருபத்தெட்டு தூண்கள் தாங்குகின்றன. இம்மண்டபத்தில் அர்த்த மண்டபத்தை அடுத்து இருக்கும் தூண்களில் ராமர், சீதை, லட்சுமணன் போன்றோர் நின்ற நிலையில் அருளும் முப்பரிமாண சிற்பத்தில் எழுந்தருளியுள்ளனர். இம்மண்டபத்தின் முன் தூண்களில் சிம்மம் , யானை யாளித்தூண்கள் வெகு நேர்த்தியுடன் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. 19}ஆம் நூற்றாண்டு ஓவியங்கள் மேல் விதானத்தை அலங்கரிக்கின்றன. மொத்தத்தில் கலைகள் சிற்பம் ஓவியங்கள் பொதிந்த சிற்பக்கலைக்கூடமாகத் திகழ்கிறது.

மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு எதிராக ஆழ்வார்கள் சன்னதியும், தெற்கு வாசலுக்கு எதிராக சக்கரத்தாழ்வார் சன்னதியும் அமைந்துள்ளன . ராமனுடன் வந்த அனுமன் தனியாக நந்தவன ஆஞ்சனேயராக தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். வடதிருச்சுற்றில் ஆண்டாளுக்கு தனி சன்னதியுள்ளது. புன்னை மரமே கோயிலின் தல விருட்சமாகும். ஸ்ரீராமநவமியையொட்டி, சுமார் 60 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு புதிய திருத்தேரில் ராமர் உலா நடைபெற உள்ளது.

ஸ்ரீராமநவமி ஏப்ரல் 17இல் வருவதையொட்டி 10 நாள் பிரம்மோற்சவம் 15}இல் தொடங்கி 24}இல் நிறைவடைகிறது. சித்திரைப் பெüர்ணமியன்று, புதிய மரத் திருத்தேரில் தேரோட்ட உற்சவம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 9750999476.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com