நோய்கள் நீங்க...

திருக்கச்சூர் தியாகராஜர் "அமுதத் தியாகர்' என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.
நோய்கள் நீங்க...

தொண்டை நாட்டில் தேவாரத் திருப்பதிகங்களால் போற்றப் பெற்ற 32 திருத்தலங்களில் திருக்கச்சூர் ஆலக்கோயில் 21}ஆவது தலமாக விளங்குகிறது. திருக்கச்சூர் தியாகராஜர் "அமுதத் தியாகர்' என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார். பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையும்பொழுது, அமுதம் திரண்டு வருவதற்காக திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து சிவனை வழிபட்டதாகப் புராண வரலாறு கூறுகிறது.

திருநாவுக்கரசர் தமது திரு அடைவு திருத்தாண்டகத்தில் குறிப்பிடும்பொழுது, "கரக்கோயில், ஞாயிற்கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்' என பல வகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.

சுந்தரர் தமது திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "கச்சூர் ஆலக்கோயில் அம்மானே' என்றே போற்றுகின்றார். கல்வெட்டுகளிலும் "திரு ஆலக்கோயில் உடையார் நாயனார்" என்று குறிப்பிடப்படுகிறது. திருக்கச்சூர் திருத்தலம் வந்து வழிபட்டபோது, தான் பசியால் மண்டபத்தில் அமர்ந்திருக்க இறைவன் வீடுதோறும் சென்று உணவு பெற்றுவந்து தனது பசியைப் போக்கியதாக, சுந்தரர் தமது திருப்பதிகப் பாடல்களில் போற்றுகிறார். இந்நிகழ்ச்சி "ஏயர்கோன் கலிக்காம நாயனார்' புராணத்திலும் குறிக்கப்படுகிறது.

இத்தலத்தில் இறைவி அஞ்சனாட்சி அம்மன் என அழைக்கப்படுகிறார். தல மரமாக ஆலமரம் விளங்குகிறது. கிழக்கு நோக்கிய கோயில், எதிரே விநாயகர் கோயிலும், கச்சூர் ஏரியும் அமைந்துள்ளன. கோபுரம் இல்லாத நுழைவு வாயில். நுழைந்தவுடன் கொடிமரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியன அமைந்துள்ளன.

தெற்கு பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ மண்டபம் வழியே இறைவன் சன்னதிக்குள் நுழைகிறோம். எதிரில் தெற்கு நோக்கி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியில் முன்புறம் சாளரம் (ஜன்னல்) அமைந்துள்ளது. இதன் வழியே இறைவனைத் தரிசித்தல் சிறப்பு. இறைவன் எழுந்தருளியுள்ள கருவறை விமானம் கஜபிருஷ்ட (தூங்கானை மாடம்) வடிவில் அமைந்துள்ளது.

இரண்டாவது திருச்சுற்றில் தென்மேற்கில் ஞானவிநாயகர் சன்னதி அழகிய சிற்பங்களுடன் காணப்படுகிறது. முன்மண்டபத்து கூரைப் பகுதியில் (விதானம்) சைவ சுந்தரர் பெருமானின் வரலாறு

அழகிய தொடர் சிற்பமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து முருகன் சன்னதி, விருந்திட்ட ஈசன் சன்னதி, பைரவர் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன.

கொடி மரத்தின் அருகிலிருந்து மக்கள் பக்தியுடன் மண் சேகரித்து எடுத்துச் செல்கின்றனர். மருத்துவக் குணம் உடைய மூலிகைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். நோய்வாய்ப்பட்டவர்களும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

"முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், சம்புவராயர்கள், விருப்பண்ண உடையார்,

நரசிங்கராயர் போன்ற மன்னர்கள் காலத்தைய கல்வெட்டுகள் எண்பதுக்கும் மேற்பட்டவை காணப்படுகின்றன.

கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பானது. தியாகராஜரைத் தொட்டில் பல்லக்கில் வீதி உலா எடுத்து வருவது சிறப்பு அம்சம் ஆகும்.

சென்னை-செங்கல்பட்டு சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து மேற்கே ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில் திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டுதலின்படி, கோயிலின் தொன்மை மாறாமல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் ஏப். 21}ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தொல்லியல் துறை (பணி நிறைவு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com