அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் வரலாற்று சிறப்புமிக்க தாமல் என்ற ஊர் அமைந்துள்ளது. புறநானூற்றில் இடம்பெறும் "தாமப்பல் கண்ணனார்' என்ற புலவர் இவ்வூரைச் சேர்ந்தவர்.

தொண்டை மண்டலத்தில் 24 கோட்டங்கள் (நாட்டுப் பிரிவுகள்) இருந்ததாக, தொண்டை மண்டலச் சதகத்தில் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுகளில் 27 கோட்டங்கள் காணப்படுகின்றன. இவ்வூர் "தாமர் கோட்டம்" என பல்லவர், சோழர் கால கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறது. ஒரு கோட்டத்தின் தலைமையிடமாகவும் இவ்வூர் விளங்கியது சிறப்பானது.

"தாமலில் வராகீசுவரர்' என அழைக்கப்படும் சிவாலயமும், தாமோதரப் பெருமாள் எனப் போற்றப்படும் வைணவக் கோயிலும் இவ்வூருக்குப் பெருமை சேர்க்கின்றன.

கண்ணனை வளர்த்த யசோதை அவனுடைய குறும்புகளைத் தவிர்க்க, கண்ணனை வயிற்றில் கயிற்றால் கட்டி உரலோடு இணைத்து விட்டாள். பரம்பொருளான கண்ணன் வயிற்றில் இதனால் கயிறு பதிந்த வடு ஏற்பட்டது. அதனால் கண்ணனுக்கு "தாமோதரனை' என்ற பெயர் ஏற்பட்டது. தாமம் என்றால் கயிறு } தாம்பு, உதரம் என்றால் வயிறு என்பது பொருள். இத்தகைய சிறப்புவாய்ந்த "தாமோதரப் பெருமாள்' என்ற திருநாமத்துடன் இந்தக் கோயில் அழைக்கப்படுவது தனித்துவம் வாய்ந்ததாகும்.

இத்தகைய நிகழ்வினை யசோதை தன்னை கட்டும்படி பண்ணிய கண்ணனை போற்றி, கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே என மதுரகவி ஆழ்வார் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

பகவான் கண்ணனின் லீலைகளால் மகிழ்ந்த மகரிஷிகளின் பிரார்த்தனைகளின்படி, தாமோதரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும் சமயத்தில் பெருமாளின் உதரத்தில் (வயிற்றில்) தழும்புடன் காட்சி தருவதை காணலாம்.

இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வந்தனர். உச்சகப் பெருமானின் நெற்றியில் திருமணம் ஸ்ரீசூர்ணத்துக்குப் பதிலாக கஸ்தூரி திலகத்துடன் காட்சி அளிக்கிறது. புன்னகையுடன் காட்சி தரும் தாமோதரன் பாதங்களில் கொலுசு அணிவிக்கப்படுகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பெருமாளுக்கு கொலுசுகள் அணிவிப்பதாக வேண்டிக் கொண்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் கொலுசு வாங்கி அணிவிக்கின்றனர்.

பெருமாள் தனது நான்கு கரங்களில் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், கீழிரு கரங்களில் வலது கரம் கேட்டதை அளிக்கும் வரத முத்திரை தாங்கியும், இடது கரத்தைத்

தொடையில் ஊன்றிய நிலையிலும் (ஊரு ஹஸ்தம்) காட்சி அளிக்கும் அற்புதக் கோலத்தைக் கண்டு மகிழலாம்.

தாயாருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன. தாயார் "ஸ்ரீ திருமாலழகி' என்ற தூயத் தமிழ் பெயருடன் காட்சியளித்து தன்னை நாடி வருவோரின் துயரங்களை, தாய் உள்ளத்துடன் போக்குவதை பக்தர்களால் உணர முடியும்.

தல விருட்சமாக வில்வம், புன்னை மரங்கள் விளங்குகின்றன. கோயில் திருச்சுற்றில் பலவகை மரங்கள் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இயற்கைச் சூழலில் தாமோதரப் பெருமாளை மனமகிழ்ச்சியுடன் வணங்கலாம். "தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை' என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் போற்றுவதைக் காணலாம்.

இந்தக் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டுதலின்படி, திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஏப். 21}ஆம் தேதி காலை 10 மணிக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.

தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com