அதிசயக் கோயில்!

அதிசயக் கோயில்!

முழுவதும் கருங்கல்லால் உருவான சிவாலயமாக, அதிசயக் கோயிலாக, மதகடிப்பட்டு குண்டான்குழி மகாதேவர் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலை கி.பி. 985-இல் முதலாம் ராஜராஜ சோழன் எழுப்பினான்.

முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன் என சோழர்களின் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு திருப்பணிகள், கொடைகளைக் குறிக்கும் வகையில் 83 கல்வெட்டுகள் இங்குள்ளன.

மூலவர் சிவ, விஷ்ணு, பிரம்ம பாகம் என்று இல்லாமல் சிவபாகத்தோடு மட்டுமே காட்சி தரும் சிவலிங்க திருமேனி கொண்டது. கருவறை விமானத்தில் தாமரை பீடத்திலே சுகாசனமாக சுப்பிரமணியர் அரிதான காட்சி தரும் தலமாகும். கோயிலின் பெயரிலேயே ஊர் அமைந்த திருத்தலமும்கூட! சிற்பக் கலைக்கும் கட்டடக் கலைக்கும் தலைசிறந்த கோயில், தொல்லியல் கோயில் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டது.

இந்தக் கோயிலின் விமானம் எசாலம் சிவாலயம், விரலூர் பூமீஸ்வரர், காஞ்சிபுரம் கௌசிகேஸ்வரர், அரிஞ்சிகை ஈசுவரம் ஆகியவற்றைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. "குண்டான்குழி" என்பதற்கு ஆழமான அழகிய நீர்நிலை என்பது பொருளாகும்.

"மதகடிப்பட்டு' என்பது "மதகடிப்பற்று' என்ற சொல்லில் இருந்து மருவிய பெயராகும். இதன் பொருள் "மதகுக்கு அண்மையில் அமைந்த நிலம்' என்பதாகும். இந்த வளாகத்தில் சிவனுக்கும்,

அம்மனுக்கும் தனித்தனி சந்நிதிகள் கருங்கல் திருப்பணியில் அமைந்திருக்கின்றன. சிவாலயம் மேற்கு வாயிலைக் கொண்டுள்ளது. அர்த்தமண்டபம் தூண்கள் எட்டு பட்டை வடிவம் கொண்டதாக விளங்குகின்றது.

விமானம் உருண்டை வடிவில் முழுவதும் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. விமானத்தில் நான்கு திசைகளிலும் சிலா வடிவங்கள் காட்சி தருகின்றன. கிழக்கே தாமரைப் பீடத்தில் சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார் சுப்ரமணியர். இது அபூர்வகோலமாகும். மேற்கு திசையிலே சுகாசனத்தில் திருமால், தெற்கே யோக தட்சிணாமூர்த்தி, வடக்கில் பிரம்மன் எழிலான சிலா வடிவங்களாக காட்சி தருகின்றனர்.

கொடுங்கையில் கூடுகள் உள்ளன. யாளி தலை அலங்கரிக்க, கொடுங்கையின் கீழே, இசைக்கருவிகளை இசைக்கும் பூதகண வரிசை அமைந்துள்ளது. கிரீவத்தில் திசைக்கு இரண்டு என நான்கு திசைகளிலும் கருங்கல் நந்திகள் காட்சி தருகின்றன.

அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறைக்குள் மூலவர் சிவன் காட்சி தருகின்றார். சிவன், விஷ்ணு, பிரம்மன் என மூன்று பாகங்களாக இல்லாமல் லிங்கத் திருமேனியாக மட்டுமே காட்சி தருவது அரிதான கோலமாக அமைந்திருக்கிறது. இறைவனுக்கு திருக்குண்டான்குழி மகாதேவர், பரமசுவாமி உடையார், ஆளுடையார் என பல்வேறு பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சிவனை நோக்கி நந்தி தேவர் காட்சி தருகின்றார்.

தெற்கு நோக்கிய அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் முழுமையாக கருங்கல்லால் அமைந்திருக்கிறது. அன்னை நின்ற கோலத்தில் எழிலாக அருள்கிறார். இதன் எதிரே சப்த மாதர் சந்நிதி அமைந்திருக்கின்றது.

இவ்வூர் "ஜயங்கொண்ட சோழமண்டலத்து தனியூர் ஸ்ரீதிரிபுவன மகாதேவி சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீகுண்டான்குழி' என கூறப்பட்டுள்ளது.

விநாயகர், துர்க்கை, ஒரேயொரு துவாரபாலகர், கருவறைக் கோட்டச் சிற்பங்கள் முதலானவை, புதுச்சேரி பிரெஞ்சுப் பண்பாட்டுக் கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதிசய கருங்கல் கோயிலாகவும், கலைப் பொக்கிஷமாகவும் விளங்கும் இந்தக் கோயில் புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் வட்டம் மண்ணாடிப்பட்டு கொம்யூனில் மதகடிப்பட்டு சந்தைப்

பகுதியில் அமைந்திருக்கிறது.

விழுப்புரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 24 கி. மீ. தொலைவிலும் மதகடிப்பட்டு அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com