மனித முக உருவில் ஆனந்தத்தை அள்ளித் தருகிறார் ஆதி விநாயகர். காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலம் "தில தர்பனபுரி'. தற்போது இந்த ஊரின் பெயர் மருவி, "செதலபதி' என்று அழைக்கப்படுகிறது.
ராமன் வனவாசம் சென்ற கவலையில் இருந்த அவருடைய தந்தை தசரதன் இறந்தவுடன் திலதர்பனபுரிக்கு வந்து, தனது தந்தைக்கும், ஜடாயுவுக்கும் ராமன் தர்ப்பணம் கொடுத்து பித்ரு கடனைப் பூர்த்தி செய்த இடம். ராமன் எள்ளால் பிடித்த நான்கு பிண்டங்களும் நான்கு லிங்கங்களாக உருக்கொண்ட புனிதத் தலம்.
இந்தக் கோயிலில் மூலவர் முக்தீஸ்வரர், அம்பிகை சொர்ணவல்லி. இதுதவிர, காசி விசுவநாதர், நாகர், கஜலெட்சுமி, மந்தாரவனேஸ்வரர், நவக்கிரகங்கள், நால்வர், சூரியன், சந்திரன், ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள், பைரவர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பரிவார, இதர தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
பொதுவாக, சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் அமாவாசை திதி. அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால், இங்கு சூரியனும் சந்திரனும் சேர்ந்தே இருப்பதால், தினமும் அமாவாசை திதிதான். இங்கு தர்ப்பணம் செய்வதால், பித்ரு கடன் தீரும் என்பது ஐதீகம். இப்படிப்பட்ட தலத்தில் வெளியே மேற்கு முகமாக அமர்ந்த நிலையில், தனி கோயிலில் மனித முக (நரமுக) விநாயகர் அருள் பாலிக்கிறார்.
பார்ப்பதற்கு தட்சிணாமூர்த்தி போன்று அமர்ந்த நிலையில், ஆனந்த முத்திரையுடன் யானை முகம் இல்லாத மனித முகம் கொண்டவராக, "ஆதி விநாயகர்' அருள்பாலிக்கிறார்.
இவர் தன்னை வழிபட்டு, பின்னர் மூலவரான முக்தீஸ்வரை வழிபடுவோருக்கு பேரானந்தத்தை அளித்து வேண்டிய வரங்களைக் கொடுக்கிறார்.
தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், மனித முக விநாயகர் இங்கு காட்சியளிக்கிறார். திருவாரூர் }மயிலாடுதுறை மார்க்கத்தில், பூந்தோட்டம் எனும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தியன்று கணபதி ஹோமமும், விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு யாகமும் நடைபெறுகிறது.
க.கோதண்டராமன்