பலன்கள் தரும் பஞ்சவடி

போரின்போது, பாதாளலோக மன்னன் மஹிராவணனின் உதவியை ராவணன் நாடினான்.
பலன்கள் தரும் பஞ்சவடி
Published on
Updated on
2 min read

வாயு தேவன் - அஞ்சனாதேவிக்கு மகனாக அவதரித்த ஆஞ்சநேயர், ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர். சூரிய தேவனே ஆசானான இவரை ஸ்ரீஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீஅனுமன்ஜி, மாருதி, பஜ்ரங் பலி, மஹாவீர், பவன்குமார், சுந்தரன், அனுமன் என்றெல்லாம் அழைப்பர்.

வால்மீகி ராமாயணத்தில், "சுந்தரகாண்டம்' என்ற தனி அத்தியாயத்தில், சீதாவை ஆஞ்சநேயர் கடல் கடந்து தேடும்போது நிகழ்த்திய லீலை சொல்லப்பட்டுள்ளது.

"வாயு தேவன் பெற்ற அனுமன் கடலை தாவி, ஆகாயத்தில் பறந்து, பூமாதேவியின் மகளான சீதாவை இலங்கையில் கண்டு, தீயை வைத்த அனுமன் நமக்கு நன்மைகளை அளித்து ரட்சிப்பான்' என கம்பர் குறிக்கிறார். இவ்வாறு பஞ்சபூதங்களை உள்ளடக்கிய அனுமன், ஐந்து என்ற எண்ணுடன் தொடர்புடையவர்.

போரின்போது, பாதாளலோக மன்னன் மஹிராவணனின் உதவியை ராவணன் நாடினான். ராம , லட்சுமணரைப் பாதுகாக்க அனுமன் தனது வாலையே கோட்டையாக மாற்றினார். ஆனாலும், மஹிராவணனோ விபீஷணன் உருவம் தாங்கிவந்து இருவரையும் பாதாளலோகம் கடத்தினான். பாதாளலோகம் சென்ற அனுமன் தனது சக்திமிகு முகத்துடன், நரசிம்மர் ஹயக்ரீவர், லட்சுமிவராகர், வீரகருடன் ஆகியோரின் சக்தி முகங்களையும் கொண்ட

பஞ்சமுக வடிவம் எடுத்து, ஐந்து விளக்குகளை ஒருசேர அணைத்து மஹிராவணனைக் கொன்றார். பின்னர், ராம, லட்சுமணரை அனுமன் பத்திரமாக மீட்டு வந்தார்.

ராமர் வனவாசத்தின்போது ஆசிரமம் அமைத்து இருந்த பஞ்சவடி, கோதாவரி நதிக்கரையில் உள்ளது, அங்கு வட ஆலமரம், ஐந்து ஆலமரங்கள் கூடியொரு தோப்பாக இருந்ததால் இது "பஞ்சவடி' எனப்பட்டது.

அதுபோல் திண்டிவனம் அருகில் சவுக்கு மரங்களும் முள்செடிகளும் சேர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் கோயில் அமைக்க சிலர் விரும்பினர். தேவமங்கள பிரசன்னம் பார்த்தபோது, அங்கு ராமர் தனது பரிவாரங்களுடன் நடந்து கொண்டிருந்தார் என்று தெரியவந்தது.

பல்லவ மன்னர்கள் போர்ப் படையிலிருந்த யானைகளின் கொட்டியாக இருந்த இந்த இடம் குறித்து அறிந்ததால், அனுபவதாரரும் கோயில் அமைக்க இடத்தைக் கொடுத்தார். இவ்விடத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சந்நிதி 2003 ஜூன் 11}இல் கட்டத் தொடங்கப்பட்டது. 2007 ஜனவரி 31}இல் ராமர், ஆஞ்சநேயர், கணபதி சந்நிதிகள் கட்டப்பட்டு, மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. பின்னர், ஏழுமலையான் சந்நிதியும் கட்டப்பட்டது.

கிழக்கு நோக்கி பட்டாபிஷேக ராமர் சந்நிதி இருப்பதால், எதிரில் மேற்கு நோக்கி ஒரே கல்லால் 36 அடி உயரமும், ஐந்து முகமும், 10 திருக்கரங்களுடன் பத்மத்தில் எழுந்தருளி அருளும் பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார். ஆஞ்சநேயரின் வலது கரத்தில் கற்பக விருட்சம், ஞானம் அருளும் சுவடி, எதிரிகளை அழிக்கும் வாள், இந்திரியங்களை அடக்கும் அங்குசம், உலகை வளப்படுத்த ஏர்க்கலப்பை ஆகியனவும், இடது கரத்தில் சஞ்சீவி மூலிகையும், அம்ருத கலசமும், கேடயமும், நாகமும், கத்வாங்கமும் இருக்கின்றன. இடுப்பில் நெடுவாளும், வலது காலில் மணியும் உள்ளன.

"ஆஞ்சநேயரை வழிபட பாவக் கறைகளைப் போக்கி, மனதைத் தூய்மைப்படுத்துகிறார். வடக்கு நோக்கிய நரசிம்மரை வழிபட எதிரிகள் அழிந்து, பயம் போக்கி, வெற்றியைத் தருவார். கிழக்கு பார்த்த வீரகருடனை வழிபட்டால், தீயசக்திகளும், தீயவினைகளும் விலகும்; விஷ கடிகளால் சேரும் விஷமும் முறியும். தெற்கு பார்க்கும் லட்சுமி வராகரை வழிபட்டால் கிரக மாறுபாட்டின் பிரச்னைகளிலிருந்து விடுவித்து, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிப்பார். மேலுள்ள ஹயக்ரீவ வதனம் ஞானத்தையும், கல்வியில் வெற்றியையும், சந்தான பாக்கியத்தையும் அளிக்கும்' என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா டிசம்பர் 26 மாலை முதல் 29}ஆம் தேதி மாலை வரை நடைபெறுகிறது. 30}ஆம் தேதி காலை 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், வாசனை திரவியங்களுடன் ஆஞ்சநேயருக்குத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்று மாலை சீதா} ராமர் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

இந்தக் கோயில் திண்டிவனம் } புதுச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

}இரா.இரகுநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com