மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்

மாணிக்கவாசகர் சிறப்பான பல சிவத்தலங்களை தரிசித்தவுடன் திருக்கழுக்குன்றம் வந்தார்.
மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்
Published on
Updated on
1 min read

தொண்டை நாட்டில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.

மலையில் வேதகிரீசுவரர் கோயிலும், ஊரின் நடுவே பக்தவச்சலேசுவரர் கோயில், ருத்ரகோடீசுவரர் கோயில் மற்றும் புகழ்பெற்ற சங்கு தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்தலம் ருத்ர கோடி தலம், நந்திபுரி, சிவபுரம், கதலிவனம், கழுகாசலம், சுருதிமலை, வேதநாராயணபுரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

சைவம் போற்றும் நால்வர்களான அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோராலும், அருணகிரிநாதர், சேக்கிழார், பட்டினத்தார், போரூர் சிதம்பரம் சுவாமிகள், அந்தககவி வீரராகவ முதலியார் போன்ற அருளாளர்களாலும் போற்றப்பட்ட தலம் இது.

திருக்கழுக்குன்றக் கோவை, கழுகாசல சதகம், வேதகிரீசுவர் பதிகம், அம்மன் தோத்திரப் பதிகங்கள் போன்ற இலக்கியங்கள் இத்தலப் பெருமையை எடுத்துக் கூறுகின்றன. தாழக் கோயில் எனப்படும் பக்தவத்சலர் கோயிலில் மாணிக்கவாசகருக்கு என்று தனி சந்நிதி இரண்டாவது திருச்சுற்றில் அமைந்துள்ளது.

மாணிக்கவாசகருக்கு ஆளுடைய அடிகள், தென்னவன் பிரமராயன், திருவாதவூரார் என்ற பெயர்களும் உண்டு. ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தின் அடியில் வீற்றிருந்த இறைவன் இவருக்கு ஞான உபதேசம் செய்தருளினார். வாதவூராரின் மணி போன்ற வாசகங்களை கேட்டருளிய இறைவன் இவருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை அளித்தார். மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பதிகங்கள் மார்கழி மாதத்தில் அனைத்து சிவாலயங்களிலும் பாடப் பெறுகின்றன.

மாணிக்கவாசகர் சிறப்பான பல சிவத்தலங்களை தரிசித்தவுடன் திருக்கழுக்குன்றம் வந்தார். இறைவனை குருவடிவாகக் கண்டு தரிசித்து மகிழ்ந்தார். "கணக்கு இல்லா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே' என்று தாம் அருளிய திருவாசகத்தில் } திருக்கழுக்குன்றப் பதிகத்தில் } இறைவனைப் போற்றுகின்றார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "காட்டினாய் கழுக்குன்றிலே' எனக் குறிப்பிடுகிறார்.

சேக்கிழாரும் பெரிய புராணத்தில் இந்நிகழ்ச்சியை "காதல் செய்கோவில் கழுக்குன்று' எனத் திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தை நிறை மகிழ்வுற்றார் எனக் குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகர் அருளிய கீர்த்தித்திருஅகவலிலும், திருக்கோவையாரிலும் (பாடல் 107) கழுக்குன்றத்தின் சிறப்பு உள்ளது.

கோயிலில் இறைவனது திருவடிகள் ஒரு பீடத்தின் மேல் காணப்படுகின்றன. அதன் அருகில் மாணிக்கவாசகர் கைகூப்பிய கோலத்தில் நின்றவண்ணம் காணப்படுகிறார். இதற்கு எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதியும் அமைந்துள்ளது. இந்தச் சந்நிதி சுவரில் காணப்படும் கல்வெட்டில் "திருபெருந்துறை ஆளுடையார்' கோயிலில் விளக்கு எரிக்க தானம் அளிக்கப்பட்டதாக முதலாம் குலோத்துங்க சோழனது கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஆனி மக நட்சத்திரத்தில் மாணிக்கவாசகருக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முன் 10 நாள்கள் சிறப்பு வழிபாடுகள், வீதி உலாவுடன் மாணிக்கவாசகர் அருளிய பாடல்கள் போற்றிப் பாடப்படுகின்றன.

செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

கி. ஸ்ரீதரன்,

(தொல்லியல் துறை } பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com