இந்திரனுக்கு அருளிய பிந்து மாதவர்

மாதவனைக் காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட மாதவன் தனது தேவியரோடு இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு.
இந்திரனுக்கு அருளிய பிந்து மாதவர்

மாதவனைக் காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட மாதவன் தனது தேவியரோடு இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு.

தேவேந்திரன், தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற இந்த உலகில் ஐந்து மாதவப் பெருமாள்களை ஐந்து திவ்யத் திருத்தலங்களில் ஸ்தாபித்தான். முதலில் அலாகாபாத் நகர் பிரயாகையில் வேணி மாதவனையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பித்தாபுரத்தில் குந்தி மாதவரையும், மூன்றாவதாக ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும்,  நான்காவதாக திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும், ஐந்தாவதாக ராமேசுவரத்தில் சேது மாதவரையும் ஸ்தாபித்து வழிபட்டு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தியடைந்தான்.

ஆதியில் பிரம்மா தனது சிருஷ்டிக்கு உதவும் பொருட்டு நியமித்த பிரஜாபதிகளுள் ஒருவரான த்வஷ்டாவுக்கு ஒரு சிறந்த மகன் பிறந்தான். சாந்த குணமும், தர்ம சிந்தனையும் நிறைந்த அவனுக்கு விஸ்வரூபன் என்று பெயர். அவன் மூன்று தலைகளை உடையவன். 

ஒருசமயம் விஸ்வரூபன், தந்தையின் ஆசிபெற்று கடுந்தவம் இயற்றினான். அந்தத் தவத்தின் தாக்கமானது இந்திரனையும், இந்திர பதவிகளையும் ஆட்டம் காணச் செய்தது.

விஸ்வரூபனின் தவத்தைக் கலைத்திட இந்திரன் பல முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால், அனைத்து முயற்சிகளும் வீணாகின. கோபம் கொண்ட இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் விஸ்வரூபனை வெட்டி வீழ்த்தினான். விஷயமறிந்த த்வஷ்டா கோபத்தால் ஓர் வேள்வியை நடத்தினார். அதிலிருந்து கிளம்பிய விராட்சூரன் என்னும் அசுரனை இந்திரனை அழிக்குமாறு ஏவினார். இந்திரனோ தந்திரமாய் அவனுடன் நட்பு பாராட்டி அவனையும் கொன்று விட்டான்.

இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து உலுக்கியது. இந்திரன் பிரம்மாவை சரணடைந்தான். அவரது ஆலோசனைப்படி, பூவுலகில் ஐந்து இடங்களில் மாதவப்பெருமாள் கோயில்களை தேவ தச்சனைக் கொண்டு நிர்மாணித்து, நியமத்துடன் பூஜித்து, திருமாலின் திருவருளால் பிரம்மஹத்தியிலிருந்து விமோசனம் பெற்றான். இந்திரன் உருவாக்கிய பகுதியே இன்று "தேவலாபுரம்'  என்று அழைக்கப்படுகிறது.  இந்த பஞ்ச மாதவப் பெருமாள் கோயில்களுக்கு தல யாத்திரை செல்பவர்களின் சகலவிதமானதோஷங்களும் நீங்க வேண்டும் என தேவாதி ராஜரிடம் வேண்டினான் இந்திரன். அதன்படியே அருளினார் ஸ்ரீஹரி.

பின்னொரு சமயம், துத்திப்பட்டுக்கு சுமார் 4 கி. மீ. தொலைவிலுள்ள நிமிஷாசல மலையில் பிற முனிவர்களோடு தவம்புரிந்து வந்தார் ரோம மகரிஷி. அப்போது பிரதுர்த்தன் என்னும் கந்தர்வன் முனிவர்களின் தவத்துக்குப் பல இடையூறுகளைக் கொடுத்து மகரிஷிகளையும் இம்சித்தான். கோபம் கொண்ட மகரிஷி, புலியாக மாறும்படி சபிக்கவே, அவன் புலியாக மாறினான்.  ஆனால் அவன் புலியுருவில் முன்பைவிட வனப் பகுதியில் வாழும் பிற உயிரினங்களுக்கும், முனிவர்களுக்கும் அதிக துன்பங்களைக் கொடுத்தான்.

ரோம மகரிஷி மகாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீஹரியோ தன்னை ஸ்தாபித்த இந்திரனை அனுப்பி வைத்தார். இந்திரன் நிமிஷாசல மலையை அடைந்து ரோம மகரிஷியை வணங்கி,  புலியுருவத்திலிருந்த பிரதுர்த்தனிடம் போரிட்டு, இறுதியில் அவனை வதம் செய்தான். உயிர்பிரியும் தருணத்தில் பிரதுர்த்தன் மன்னிப்பு வேண்ட, திருமால் அவனுக்கு காட்சி தந்து, ரோம மகரிஷிக்கும் பிந்து மாதவர் நற்கதியளித்தார். மேலும், மோட்சமளித்து அவனை தன்னோடு சேர்த்துக் கொண்டார். 

இந்தத் தலம் தனது பெயரால் விளங்க வேண்டும் என்னும் பிரதுர்த்தனின் வேண்டுகோளின்படி திருமாலின் அருளால் இந்தத் தலம் "பிரதுர்த்தப்பட்டு'  என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் "துத்திப்பட்டு' என்றானது. 
இந்தத் தலத்தின் மகிமையை பிரம்மாண்ட புராணம் சனத்குமார சம்ஹிதையில் உள்ள பாஸ்கரúக்ஷத்திர மகாத்மியம் விரிவாக விவரிக்கிறது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள  துத்திப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ பிந்து மாதவர் அருள்பாலித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி,  பிரம்மோற்சவம், புரட்டாசி  மாத சனிக்கிழமைகளில் இக்கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்  கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது.  

தொடர்புக்கு: 94434 90419. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com