தானம் பெற்ற தருமேசுவரர்!

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், தாம்பரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் மணிமங்கலம் என்ற வரலாற்றுப் பெருமைமிக்க ஊர் அமைந்துள்ளது.
தானம் பெற்ற தருமேசுவரர்!

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், தாம்பரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் மணிமங்கலம் என்ற வரலாற்றுப் பெருமைமிக்க ஊர் அமைந்துள்ளது.

பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனுக்கும் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசிக்கும் மணிமங்கலத்தில் போர் நடைபெற்றது. இந்தப் போரில் முதலாம் நரசிம்ம வர்மன் வெற்றி பெற்றார். காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் வரலாற்றில் மணிமங்கலம் சிறப்பிடம் பெற்று விளங்கியது.

இந்த ஊர் "ரத்தினகிரஹார' அல்லது "ரத்னகிராமா" எனவும் அழைக்கப்படுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில், இந்த ஊர் "லோகமாதேவி சதுர்வேதி மங்கலம்' , "ராஜசூளாமணி சதுர்வேதி மங்கலம்', " பாண்டியனை இருமுடி வென்று கொண்ட சதுர்வேதிமங்கலம்', " கிராம சிகாமணி சதுர்வேதி மங்கலம்' என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளில் காண முடிகிறது.

இவ்வூரில் "ராஜகோபாலப் பெருமாள்', "வைகுண்ட பெருமாள்', "தருமேசுவரர்', "கைலாசநாதர்' என்ற கோயில்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளன. இவற்றுள் "அருள்மிகு வேதாம்பிகை உடனாய அருள்மிகு தர்மேசுவரர் கோயில்" தொன்மைச் சிறப்பு உடையதாக விளங்குகிறது.

முற்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த பல்லவ மன்னர் தான தர்மங்கள் செய்வதில் சிறந்தவனாக திகழ்ந்தார். அவருக்கு நீண்ட நாள்களாக சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், எந்த இடத்தில், எவ்வாறு அமைக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இறைவன் சிவனடியாராக அவரிடம் சென்று, தர்மம் செய்யும்படி வேண்டினார். மன்னர் தானம் செய்ய முயன்றபோது, ஓர் இடத்தை காட்டி அங்கு சிவன் கோயில் கட்டி, தானமாகத் தருமாறு வேண்டினார். வந்தது இறைவன் என்பதை அறிந்து மன்னன் அங்கு கோயில் அமைத்து இறைவனுக்கு "தருமேசுவரர்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார். இத்தலத்து இறைவி "வேதாம்பிகை' என அழைக்கப்படுகிறார்.

தருமேசுவரர் கோயில் வரலாற்று சிறப்புடையதாகவும் விளங்குகிறது. இந்தக் கோயில் வரலாற்றை இங்கு காணப்படும் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. இறைவன் "தன்மீசுவரமுடைய நாயனார்' என குறிப்பிடப்படுகிறார். தொண்டை நாட்டுக்கே உரிய கட்டடக் கலையான "தூங்கானை மாட' வடிவில் விமானம் அமைந்துள்ளது.

கருவறை தேவகோட்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அலங்கரிக்கின்றன. சோழர், பாண்டியர், மதுராந்தக பொத்தப்பி சோழன், குறுநில மன்னன் நீலகங்கரையர் போன்றோர் இந்தக் கோயிலில் வழிபாட்டுக்கும், விளக்கு எரிக்கவும் தானம் அளித்த செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

இந்தக் கோயிலில் பணிபுரிந்த ஆடல் மகளிர் "மணிமங்கலம் மாணிக்கம்', "இனிய பெருமாள் மாணிக்கம்', "பொன்னம்பலக் கூத்த மாணிக்கம்' போன்றோர் இந்தக் கோயில் வழிபாட்டுக்கும் விளக்கு எரிக்கவும் தானம் அளித்துள்ளனர். கோயில் மிகவும் சிறப்பாக போற்றப்பட்டதை அறிய முடிகிறது.

சோழர் கால கட்டடக் கலைச் சிறப்புடன் விளங்கும் இந்தக் கோயில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையால் சிறப்பாகப் போற்றி பராமரிக்கப்படுகிறது. கோயில் வழிபாடுகள் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு பிப். 21}இல் நடைபெற்றது. வேதாம்பிகை சமேத தருமேசுவரரை வழிபட்டு வாழ்வில் அனைத்து நலன்களை அடைவோம்.

தொடர்புக்கு: 99404 20276

(தொல்லியல் துறை (பணி நிறைவு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com