

15-16ஆம் நூற்றாண்டுகளில், பல்வேறு பிராந்திய மொழிகளில், காப்பியங்களாகவும் கதைப் பாடல்களாகவும் இராமகாதை இயற்றப் பெற்றது.
இவ்வகையில், ஏகநாதர் என்னும் அருளாளரால், மராத்தி மொழியில் இயற்றப் பெற்ற காப்பியம், பாவார்த்த ராமாயணம் என்பதாகும். சமூக}பொருளாதார} அரசியல் சிக்கல்கள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையில், சாதாரண நிலையிலிருந்த மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும், இராமன் கதை மட்டுமே வழங்க முடியும் என்று நம்பிய சான்றோர்களில் ஏகநாதரும் ஒருவர்.
இராமகாதையைப் பாடத் தொடங்குகையில், கணேசரையும் சாரதாம்பிகையையும் வணங்குகிறார். கணேசரின் ஆமோதிப்பைக் காண்போமா?
ஐஸô ஜாலா ஸுப்ரஸன்ன, தேணேம் விக்னச்சி கேலேம் நிர்விக்ன, உன்மேகேன்ஸீம் போலிலா ஆபண, பாவார்த்த ராமாயண சாலவீம் வேகீம் அவருக்கு (கணேசருக்கு) மிக்க மகிழ்ச்சி; சகல கஷ்டங்களும் மறைந்து போயின; களிப்போடு என்னிடம் கூறினார்; பாவார்த்த ராமாயணத்தைப் பாடுவதில் உன்னை ஈடுபடுத்திக் கொள். சரஸ்வதியும் அன்பைக் காட்டினாள்.
ஐஸி ஏகோனி ஸ்துதி, ஸுப்ரஸன்ன ஸரஸ்வதி, ஸவபாவேம் திசீ வதனீம் வஸ்தி, யா வசனோக்தீ தே வதவீ, தே ம்ஹணே கா ராமகதேதேம், வேகீம் சாலவீம் பாவார்த்தேம், ஸப்தாவேம் ஹோஈல் ஸரதேம், ப்ரிய ஸம்தாம்தேம் மீ கரீன
என் வணக்கம், சரஸ்வதியை மகிழ்ச்சிப்படுத்தியது; என் நாவில் ஸ்வாதீனமாக அமர்ந்தாள்; இராமகாதையைக் கூறு என்றாள்; தோய்ந்த எண்ணங்களும் ஆழ்ந்த பொருளும் உன் சொற்களை அசைக்கட்டும்; நிறைந்த நம்பிக்கையில் உன் (காப்பியம்) பூர்த்தியாகும்; ஞானியரின் உள்ளங்களுக்கு நெருக்கமாகும்.
முனிவரும் ஞானியரும் குலதேவதையும் பிறரும், இராமகாதையை உடனடியாகப் பாடும்படி உந்தினார்கள். பாவார்த்த இராமாயணம் என்னும் பெயரே, ஏகநாதரின் சிந்தனையை நமக்குத் தெளிவாக்கும். இது வெறும் கதையன்று.
"இதற்குள்ளிருக்கும் பாவத்தை, உட்பொருளை, உணர்வுகளை விளங்கிக் கொள்ள வேண்டும்; காட்டுக்குப் போவதும் மனைவியைத் தொலைப்பதும், யுத்தம் செய்வதும் வெறும் முகாந்திரங்களே; உள்ளிருக்கும் பொருள் வேறு' என்பதே ஏகநாதரின் செய்தி. கதைப்போக்கிலேயே சில மாற்றங்களைச் செய்து, உட்பொருளை உணர்த்துகிறார்.
புத்திரகாமேஷ்டி யாகம் நடைபெறுகிறது. காலத்தை விரயம் செய்யாமல், யாகபலனான பாயசத்தை தசரதப் பத்தினிகளிடையே பகிர்ந்து கொடுக்க வேண்டிய நேரம். இந்தப் பத்தினிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை குலகுருவான வசிட்டர் எடுத்துக் கூறுகிறார்.
கெளஸல்யா தே தர்மபத்னீனீ. ஸுமித்ரா வரிலீ ஸôத்வீ ம்ஹணோனி. கைகேயீ வரிலீ
ஸுந்தரபணீம், ரூபயெüவனீம் கர்விஷ்ட
கோசலை அறப்பத்தினி; சுமித்திரையோ மென்மையானவள்; கைகேயி தன்னுடைய அழகால், இளமையால் கர்வம் கொண்டவள்.
இந்த கர்வம், கைகேயியை கோபப்படவும் செய்கிறது. மூன்று பத்தினிமாருக்கும் பாயசத்தைப் பகிர்வானேன்? தனக்கு மட்டுமே என்பதுபோல் எண்ணுகிறாள். வசிட்டரிடம் கூடத் தன்னுடைய சினத்தைக் காட்டுகிறாள்.
எப்படியோ பாயசம் மூவருக்கும் பகிரப்படுகிறது. கோசலையும் சுமித்திரையும் மரியாதையோடு பாயசத்தை ஏந்திச் செல்ல, கைகேயி மட்டும் அசிரத்தையாகப் பாயசக் கிண்ணத்தை வைக்கிறாள்.
எங்கிருந்தோ பறந்துவருகிற பருந்து ஒன்று, அந்தக் கிண்ணத்தைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறது.
ஒரு பக்கம் ஆக்ரோஷம், ஒரு பக்கம் அவஸ்தை என்று கைகேயி தவிக்கும்போது, கோசலை சமாதானப்படுத்துகிறாள்.
ஆம்ஹாம் தும்ஹாம் ஏக ஸங்காத, ஆம்ஹாம் தும்ஹாம் ஏக போகார்த்த, ஆம்ஹாம் தும்ஹாம் ஏக காந்த, ஸக்ய ஸக்யார்த்த ஆம்ஹாம் தும்ஹாம்
"நாம் எல்லோரும் ஒன்று; நாம் ஒன்றாகச் சேர்ந்து நன்மையை அனுபவிக்கவேண்டியவர்கள்; நாம் தோழமை பூண்டவர்கள்', என்றுரைக்கும் கோசலை, ஒருவருடைய துன்பத்தைக் கண்டு மனம் மகிழ்பவர்களே மிகுந்த தீங்கானவர்கள் என்றும் கூறுகிறாள்.
ஸத்ஸங்காச்சேன் நிஜமஹிமான், கௌஸல்யா தேத ஆபணாஸமான்
கௌஸல்யே ஸங்கேன் ஸுமித்ரா ஜானா, தே ஆபண பாகார்த,
ஸுஷ்டு மைத்ரீ கௌஸல்யேஸீம், ம்ஹணோனி ஸுமித்ரா ம்ஹணேணேம் தியேஸீ, தேணேம் ஸுமித்ரா பாவேம்ஸீ, தே கைகேயீஸீ பாகார்த }
தங்கள் மூவரையும் ஒன்றுபோல் கருதிய கோசலை முன்னெடுக்க, அவளும் சுமித்திரையும் தத்தம் பிரசாதப் பங்குகளிலிருந்து கைகேயிக்குப் பாதி பாதி கொடுத்தார்கள்.
இத்தனைக்குப் பிறகும் கைகேயிக்குப் பொறாமை தீரவில்லை. மூத்தமகன் கானகம் அனுப்பப்பட வேண்டும், இளைய மகனே நாடாள வேண்டும் என்று கருவுற்றிருக்கும் நிலையிலேயே தசரதராஜனிடம் கூறுகிறாள்.
கைகேயிக்கு பரதன், சத்ருக்னன் என்னும் இரு புதல்வர்கள் (ஒருவன் இராமனின் பாகம், இன்னொருவன் லக்ஷ்மணன் பாகம்); காட்டில் சீதையைத் தனியாக விட்டுச் செல்லும் இலக்குவன், பர்ணசாலையைச் சுற்றிக் கோடு கிழித்தல்; இராவணன் வந்து கோட்டைத் தாண்டும்படி அவளை அழைத்தல்; அவள் கோட்டின் அருகே செல்ல, தேவர்கள் அவளைத் தடுத்தல்; கவலைப்படவேண்டாம் என்று கூறிவிட்டு, திருமகள் என்னும் சுயரூபத்தை வெளியிடும் சீதை, தன்னுடைய நிழலை (சாயா சீதை) கோட்டிற்கு அப்பால் அனுப்புதல்; தானே ஆன்ம நெருப்புக்குள் ஒளிந்துகொள்ளுதல்; வாலி இறந்தபோது, இராமன் மீது கோபப்படும் தாரை சாபமிடல் இவ்வாறு ஏராளமான கதைப்போக்கு மாற்றங்களை ஏகநாதர் செய்திருந்தாலும், இராமகாதையின் அடிப்படை அப்படியே நிற்கிறது.
ஏழு காண்டங்களில் 297 அத்தியாயங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் செய்யுள்களில் அமைந்திருக்கும் பாவார்த்த இராமாயணத்தில்,
இராமகாதையின் உட்பொருள் முதலிலேயே தெளிவாக உரைக்கப்பட்டுவிடுகிறது. அஜன் என்பவன் பரம்பொருளின் அடையாளம்; அஜன் என்னும் சொல்லுக்குத் தோற்றம் என்றே பொருள் கொள்ளலாம்; இராமகாதையில், அஜன் என்னும் அரசன், தசரதனின் தந்தை ஆவார். அஜனிடமிருந்து பத்துப் புலன்கள் வெளிப்படுகின்றன;
இவையே தசரதன் (பத்து ரதன்)என்னும் பெயர் பெறுகின்றன. ஆத்மா (இராமன்), பத்துப் புலன்களுக்கு மகவாகப் பிறக்கிறது. தசரதப் பத்தினியரில், கோசலை நல்லறிவைக் (சத்வித்யா) குறிக்கிறாள்; சுமித்திரை, தூய அறிவைக் (சுத்த புத்தி) காட்டுகிறாள். கைகேயியோ, அவித்யா (அஞ்ஞானம்). கூனி, குவித்யையைக் (குயுக்தி அல்லது தீய அறிவு) குறிக்கிறாள்.
நல்லறிவு இல்லையானால், அவித்யையானது, குவித்யையால் திசை திருப்பப்படும். லக்ஷ்மணன், ஆத்ம வித்யையின் (ஆத்மப் பிரபோதம்) அடையாளம்; பரதன், உணர்வுகளின் அடையாளம்; சத்ருக்னன் சுய ஆதாரம் (நிஜ நிர்தாரம்). ஆத்மாவை, உணர்வுகளின் அனுபவத்தாலும், ஆத்ம வித்யையாலும், சுய ஆதாரம் கொண்டு அறிதலே அறம். வசிட்டர், விசாரத்தின் அடையாளம்; விசுவாமித்திரர், விவேகத்தின் அடையாளம். விவேகமும் விசாரமும் ஆன்மாவுக்கு குருவாகின்றன.
ஆத்மாவே, ஆண்டவனாக உயர்கிறது. இராமன் என்னும் ஆண்டவனின் அறிவுஸ்வரூபமே, சீதைப் பிராட்டி. இரண்டும் ஒன்றையொன்று அறியும்; இரண்டையும் பிரிக்க இயலாது.
இராமகாதையைப் பொருத்தவரை, இந்திய நாட்டினர் அனைவருக்கும் பொதுவான எண்ணம் ஒன்று உண்டு.
ஏதோவொரு வகையில், தங்களுடைய ஊரோ, குலமோ, வம்சமோ, இராமனோடு தொடர்பு கொண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் பேரானந்தமே இது!
இதனால்தான், ஊருக்கு ஊர் ஜடாயு தீர்த்தங்களும், பொய் மான் குன்றுகளும் இருக்கும். ஏகநாதருக்கும் இந்த ஆசை விடவில்லை.
மராத்திய மண்ணின் தனிப்பெரும் தாயான துலஜாபூர் பவானிதேவியை இராமனுக்கு வரம் தரும் தேவி ஆக்கினார்.
சீதையைப் பிரிந்து இராமன் படும்பாட்டைக் கண்ட தேவி, இராமனின் உறுதியைச் சோதிக்க விரும்பினாள். தானே சீதை வடிவம் கொண்டு இராமன் எதிரில் சென்றாள். இருப்பினும், உண்மையை உணர்ந்த இராமன், தேவியைப் பாதம்தொட்டு வணங்கி, "அம்மா' என்றழைத்தான்.
இராமனை ஆசீர்வதித்து, சீதையை விரைவில் மீட்கும்படி வரமருளினாள்.
இதனால், பவானிதேவிக்கு "இராமவரதாயினி' என்றே திருநாமம் தோன்றிவிட்டது.
மராட்டிய மண்ணிலிருந்து சற்றே வடக்கு வடமேற்காக நகர்ந்து கூர்ஜர மண்ணை அடைந்தால், அங்கேயும் பற்பல இராமகாதைகள்.
16}ஆம் நூற்றாண்டின் நகர், கஹன், விஷ்ணுதாசர் ஆகியோரின் இராமாயணங்கள் தொடங்கி, கார்பா நாட்டியப் பாடல்களிலும் நாட்டுப்புற வழக்காற்றுப் பாடல்களிலும் காணப்படுகிற இராம நிகழ்வுகளில் தொடர்ந்து, கர்மன் மந்த்ரியின் சீதாஹரண், பீமரின் ராம்லீலா, ஸ்ரீதரரின் இராவண மண்டோதரி சம்வாதம், வைகுண்டரின் ராமவிவாகம்,துளசியின் சீதாஜினோ சோஹ்லோ, சிவதாசரின் பரசுராம ஆக்யானம், ஹரிராமின் சீதா சுயம்வரம், பண்டித சந்த்ராக்னியின் ராமரசம், பாலகவியின் சீதாராம ரசம், சமயசுந்தரரின் ராமசீதா பிரபந்தம், பிரேமானந்தரின் இராம யக்ஞம் என்று நீளும் குஜராத்தி மொழி இராமகாதைகள் பலப்பல.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.