

குஜராத்தி வட்டாரங்களில் வழக்கம் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. மாலைகளிலும் முன்னிரவுகளிலும் முற்றங்களில் அமர்ந்து இராமகாதையை வாசித்தும் கேட்டும் இருக்கிறார்கள். கதை நிகழ்வுகளையும் கருத்துகளையும் தத்தம் முறையில், புலவர்களும் பண்டிதர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.
இவ்வகையில், யுத்த காண்டப் பகுதியை "இராம யக்ஞம்' என்னும் பெயரில், குறுங்காப்பியமாகவே பிரேமானந்தர் படைத்துள்ளார். இந்தக் காப்பியத்தில் கும்பகர்ணனுக்கும் இராவணனுக்கும் உரையாடல் ஒன்று. "ஏன் சீதையைச் சிறை வைத்தாய்' என்று தம்பி வினவ, தன்னுடைய விடையின் இடையில் இராவணன் சொல்வதைக் கேளுங்கள்: "அந்தக் கற்பரசியைக் காணும்போதெல்லாம், நம் அம்மாவைக் காண்பது போல் இருக்குதடா.'
இராமன் போர்க்களத்தில் மடிந்துவிட்டதைப் போன்ற மாயக் காட்சியை இந்திரசித்தன் உருவாக்குகிறான். சீதையைப் புஷ்பக விமானத்தில் போர்க்களத்தின் மீது, இந்த மாயக் காட்சியாக பறக்கச் செய்கிறான். பரிதவித்துப் போகும் சீதைக்கு உண்மையை எவ்வாறு புரியச் செய்வது? இது மாயமே என்று எப்படி உணர்த்துவது? மாயக் காட்சியில் கிடந்த மாய முகத்தின் மீது, புன்னகை ஒன்றைத் தவழச் செய்தானாம் இராமன். புன்சிரிப்பைக் கண்டவுடன் சீதை புரிந்துகொண்டாள்.
இராம கணைகள் இராவணனை எவ்வாறு விரட்டுகின்றன என்றும் பிரேமானந்தர் காட்டுகிறார். துரத்திக் கொண்டே போகும் அவற்றிடமிருந்து தப்பிக்க, இராவணன் எங்கெங்கோ ஓடுகிறான். கடைசியில், தன் மனைவி மண்டோதரி இருந்த இடம் செல்கிறான்.
"காப்பாற்று' என்று கதறிக் கொண்டே விழுகிறான். மண்டோதரியின் வாயில் வரை வந்த கணைகள், அப்படியே நின்று அவளைக் கண்டு வணங்குகின்றன. மாற்றான் மனைவியாயினும், அவளின் பெண்மைச் சிறப்புக்காகவும் நேர்மைத் திறனுக்காகவும், இராமகணைகள் அவளை வணங்குகின்றன!
குஜராத்தி இராமாயணங்களில் மிகவும் பிரபலமானது, கிரிதரர் இயற்றிய இராமாயணம். 1950-களிலும் கூட, கிரிதர இராமாயணத்தை, "மனா பட்டர்' என்றழைக்கப்பட்ட பாகவதர்கள், வீதிகளில் இசைத்துக் கொண்டே போவார்கள் என்று நினைவு கூர்ந்தார் ஞானபீட விருதாளரும் குஜராத்திய இலக்கிய வித்தகருமான உமாசங்கர் ஜோஷி.
மனா என்பது சிறிய உலோகப் பாண்டம்; விரல்களில் அணியும் மோதிரங்களால் இப்பாண்டத்தில் ஒலியெழுப்பி இராமகாதையை இசைப்பார்களாம். இராமன் கதை யாரைத்தான் ஈர்க்கவில்லை? அப்படியே வடக்காக நகர்ந்து, காஷ்மீரத்தை அடைகிறோம். இராமாயணச் சொல்வழக்குகள், இங்கே மொழிவழக்குகளாகவே மாறிவிட்டன. வானவில் என்பதைக் குறிக்கக் காஷ்மீரம் வழங்குகிற பெயர் இராமபத்ருனி துனி, அதாவது, இராமனின் வில்! சமகால காஷ்மீர இலக்கியத்தில், துன்பமிகு சூழல்களைக் குறிக்க இராமனுடைய பெயரும் சீதையின் பெயரும் பயன்கொள்ளப்படுகின்றன.
இராவணன் என்பவன் ஆன்மிக வீணடிப்பைச் சுட்டுகிறான். "ராவுன்' என்னும் காஷ்மீரச் சொல், இராவணனைக் குறிக்கிறது; கூடவே, "தொலைந்துபோதலை'யும் குறிக்கிறது.
எந்தப் பெண்ணுக்குத் திருமணம் என்றாலும், அவள் தசரதச் சக்கரவர்த்தியின் மகளாம். திருமண அலங்காரங்களை மணப்பெண்ணுக்குச் செய்யும்போது, மூத்த பெண்மணிகள் பாடுவார்கள்: தசரத ராஸýனி ஸ்வந்தர் கூரி, ரமத்சந்துர் போய் ஓய் துரிபட ஹ்யேத் தசரத ராஜனின் அழகிய மகளே, உன் சகோதரன் இராமசந்திரன், உனக்கான பரிசுகளோடு வந்துள்ளான். இராமனே தனக்குச் சகோதரனாக இருக்கவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசையும்தானே!
சீக்கிய இராமாயணம், பாரசீக இராமாயணம் ஆகியவற்றின் செல்வாக்கு அதிகமுள்ள காஷ்மீரத்தில், 19}20-ஆம் நூற்றாண்டுகளில் மட்டுமே பற்பல இராமாயணங்கள் இயற்றப்பெற்றுள்ளன. 1843 வாக்கில் சங்கர இராமாயணம், 1846}ல் பிரகாச இராமாயணம், 1913}இல் நிறைவு செய்யப் பெற்ற விஷ்ணு கெüல் என்பாரின் விஷ்ணு பிரதாப இராமாயணம், 1920}களில் இயற்றப்பெற்ற நீலகண்ட சர்மாவின் சர்மா இராமாயணம், 1927}இல் எழுதப் பெற்ற தாராசந்தின் தாரா இராமாயணம், 1940}இல் எழுந்த அமர்நாத்தின் அமர இராமாயணம் ஆகியவை குறிப்பிடவேண்டியவை. இவற்றில் பிரகாச இராமாயணமானது, பாரசீக, தேவநாகரி, ரோமானிய லிபிகளில் (வரிவடிவங்கள்) அச்சு கண்டுள்ளது.
கல்வி கற்பதற்காக வசிட்டரின் குருகுலத்திற்கு இராமன் செல்வது காஷ்மீரி வாழ்வியலை வசீகரித்துவிட்டது.
முதன்முதலாகப் பள்ளிக்குச் சென்று, எழுதத் தொடங்கும் பிள்ளையை, குழந்தை இராமனாகவே கண்டார்கள். கையில் வெள்ளியாலான எழுத்துப் பலகையைத் தூக்கிக் கொண்டு, தசரத ராஜனின் தங்க எழுத்தாணியைப் பிடித்துக் கொண்டு, இராமன் பள்ளி சென்றானாம். எழுத்தாணி பிடித்து, முதன் முதலாக "வோம வோம்' (ஓம்) என்றெழுதினானாம். அதைப் போலவே, பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளையையும் எழுதச் சொல்லி, இராமனை தியானிக்கச் சொல்வதாகக் கல்வித் தொடக்கப் பாடல் ஒன்று புழங்குகிறது.
ராம் கோம் ட்சாதஹல் அதி ஹ்யேத் தூஜி, கோசல்யாயி ஸþஜி,
தசரத ராஸனே ஸ்வான ஸþந்தி கலமோ, ராமஜுவன்
ல்யுகனே வோம வோம்,
வோம வோம் ஸ்வயம்சோ த்யேவுஸ்தே பாரிúஸ, தியானா
úஸôரிúஸ ஸ்ரீ ராமுன்
ஓம்காரம் என்னும் ம் உதல் பாடத்தைக் கேட்கவும் எழுதவும் செய்கையில் ஸ்ரீ ராமனை நினைத்துக் கொள் என்பதே இதன் பொருள்.
இராமன் என்பவன் கதை நாயகன் மட்டுமில்லை, எங்கள் இல்லங்களின் செல்லப் பிள்ளை என்னும் எண்ணத்தின் பிரதிபலிப்புதானே இது!
14}ஆம் நூற்றாண்டில் எழுந்தது, அஸ்ஸôமிய இராமாயணமான மாதவ கந்தலீ இராமாயணம். அனந்த கந்தலீ (16 நூ), துர்காவர காயஸ்த (16 நூ), கலாபசந்த்ர த்விஜர் (16 நூ), ஹ்ருதயானந்த காயஸ்த (17 நூ), ரகுநாத மஹந்த (18 நூ) ஆகியோரின் இராமகாதைகளும் அஸ்ஸôமிய மொழியில் உள்ளன. மாதவ கந்தலீ இராமாயணத்தில் ஏழு காண்டங்கள் இருந்தன என்று நம்பப்படுகிறது. ஆனால், தொடக்கத்திலிருந்த ஆதி காண்டமும், நிறைவிலிருந்த உத்தர காண்டமும் கிட்டவில்லை. 16ஆம் நூற்றாண்டுக் காலத்தில் தோன்றிய வைணவ ஆசார்யரான சங்கரதேவரும், அவருடைய சீடரான மாதவதேவரும் இந்த இரு காண்டங்களையும் பின்னர் எழுதிச் சேர்த்தார்கள்.
இராமகாதையை எழுதும்படி மாதவ கந்தலீயை வேண்டியவர், அப்போதைய காமரூப வராஹி அரசரான மகாமாணிக்யர். அஸ்ஸôமிய மொழியிலும் இக்காப்பியம் இருக்கவேண்டுமென்று அரசர் விரும்பியதே, இக்காலத்திற்கும் முன்பாக, இராமன் கதை எவ்வளவு புகழ்பெற்றிருந்தது என்பதை நமக்கு உணர்த்தும்.
இராமன்மீதான மக்கள் நம்பிக்கையும் மதிப்பும் எவ்வளவு என்பதை கந்தலீ இராமாயணம் தெளிவுபடுத்துகிறது. யுத்தக் காட்சிகளை விரிவாக உரைப்பதற்குக் கந்தலீ விரும்பினாரில்லை.
ராமர யுஜர கதா கி கஹிபோ ஆர, பாஹுல்ய கஹிதே நாஹி
ஸம்úக்ஷப பயார
என்றே மொழிந்து விடுகிறார். போர்க் காட்சிகளில் விறுவிறுப்பு இருந்தாலும், அவற்றை விவரிப்பது களைப்பூட்டுகிறதாம்.
இராமமதிப்பு மட்டுமில்லை, பெண்களுக்கு எவ்வளவு சுயசிந்தனையும் உரிமையும் இருந்தன என்பதையும் சேர்த்துப் படம்பிடிக்கும் காட்சிகள் கந்தலீயில் உள்ளன. இராமன்
இல்லாமல், அமைச்சர் சுமந்திரன் திரும்புகிறார். பின்னர், ஆண்கள் பலர் இராமனை அழைத்துவரச் செல்கின்றனர். வெறுங்கையாகத் திரும்புகின்றனர். இந்த ஆண்களும் சரி,
சுமந்திரனும் சரி, பெண்களின் கோபாவேசத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகின்றனர். பெரிய அடிதடியே உருவாகும் அளவுக்குப் பெண்கள் ஆவேசமாகின்றனர்.
சங்கரதேவரின் சீடரான அனந்த கந்தலீ, இராமாயணத்தைத் தாம் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கூறுகிறார்:
பஜனீய குண யேடகே யத்தன கரோ பகதிக படே
பக்தியே மையமாகவேண்டும்; எனவே, இராமகாதையை பக்தி வகையில் இயற்ற முயல்கிறேன்.
இராமகாதையானது, மக்களுடைய அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளில் கலந்திருந்தது என்பதற்கான தமிழ்ச் சான்று சிலப்பதிகாரம்.
மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடிய
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே
ஆய்ச்சியர் குரவையின் இந்த வரிகளில், இராமகாதையின் ஆழத்தை மட்டுமல்லாமல், எந்த அளவுக்கு மக்களின் உணர்வுகளோடு இராமாயணம் ஒன்றிவிட்டது என்பதையும் இளங்கோவடிகள் உணர்த்திவிடுகிறார். பரிபாடல் தொடங்கி சங்கப்பாடல்கள் பலவும், வாமன அவதாரம் குறித்து நிரம்பப் பேசும். வாமனனாக வந்தபோது, மூன்றடிகளாலும் நடக்க முடியாமல் (இரண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடமில்லாமல் போனதே) போனதை ஈடு செய்வதற்காகத்தான், அப்போது தாவிய அந்தக் காலடியால், இராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் இராமன் நடந்தான் என்பதாகவே பாடுகிறார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.