என்றென்றும் ராமன் - 7: நேபாள, ஜப்பான் நாடுகளில்...

பதினான்கு ஆண்டுகள்,  பாரதத்தின் பற்பல பகுதிகளில் இராமன் நடந்தான். மண்ணில் மட்டும் அவன் காலடிகள் படவில்லை..
என்றென்றும் ராமன் - 7: நேபாள, ஜப்பான் நாடுகளில்...

பதினான்கு ஆண்டுகள்,  பாரதத்தின் பற்பல பகுதிகளில் இராமன் நடந்தான். மண்ணில் மட்டும் அவன் காலடிகள் படவில்லை;  மக்கள் மனங்களைத் தொட்டு, அவர்களின் உணர்வுகளில் தடம் பதித்துவிட்டன.  எனவேதான், கன்னியாகுமரியும் காஷ்மீரமும், கட்ச்சும் கலிங்கமும், இராமனோடு கைகோத்து, இராம பாதையில் பயணிக்கவே ஆசைப்படுகின்றன.

இன்றைய இந்தியாவில் மட்டும்தானா இராம தடங்கள்? நேபாளத்திலும் அவை உண்டு (அன்றைய மிதிலாபுரி,  இன்றைய நேபாளத்துக்குள்ளும் விரிந்திருந்ததன்றோ!). பெரும்பான்மையான நேபாள இராமாயணங்கள், இராமனை அவதார புருஷனாகவே போற்றுகின்றன. பெயர் தெரியாத ஆசிரியரால் எழுதப்பெற்ற உரைநடை இராமகாதையான இராம அச்வமேதம், பண்டித பதம் சர்மா எழுதிய (உரைநடை) இராமாயண லங்கா காண்டம், சுந்தரானந்த பாரதியின் இராமாயணம் (உரைநடை),

பண்டித சக்ரபாணி சாலிúஸ இயற்றிய சம்க்ஷிப்த இராமாயணம், பைரவ் சிங் தாபா இயற்றிய ஆத்ம இராமாயணம், குமானி பந்த் மற்றும் ரகுநாத பட்டர் ஆகியோரின் இராமாயணக் கவிதைகள் போன்றவை நேபாள இலக்கியத்துக்கு வளம் கூட்டியிருக்கின்றன. எனினும், நேபாள மொழியின் முதல் காப்பியமாக மலர்ந்தது, பானுபக்த  ஆசார்யரின் இராமாயணமே ஆகும். இராம பக்தியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ள பானுபக்த இராமாயணம், நேபாள மக்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டுவிட்ட காப்பியம். சார்தூல விக்ரிதிதம் என்னும் செய்யுள் வகையை பானுபக்தர் பயன்படுத்தியிருக்கிறார். இராமாயணச் செல்வாக்கு, நேபாள இலக்கியத்தில் நன்றாகவே ஒட்டிக் கொண்டது;

சமஸ்கிருத சந்தஸ் வகையைச் சேர்ந்தது என்றாலும், பானுபக்தருக்குப் பின்னர் வந்த நேபாளக் கவிஞர்கள் பலரும், சார்தூல விக்ரிதிதம் வகையையே மிகுதியும் பயன்படுத்தியுள்ளனர். 

பானுபக்த ஆசார்யர் இராமாயணத்தை இயற்ற விழைந்ததற்கான காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. நேபாளப் பள்ளத்தாக்குப் பகுதியின் சின்னஞ்சிறு ராம்கா கிராமத்தில் பிறந்த பானுபக்தர், தம்முடைய மாணாக்கப் பருவத்தில் வாரணாசியில் வாழ்ந்தார். பின்னர் சொந்த கிராமத்துக்குச் சென்றார். ஒரு நாள், ஓய்வாக ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தார். புல்லை வெட்டி, கட்டாகக் கட்டி விற்பதற்குச் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, பணம் சேமித்து வைப்பதைச் சொன்னார். எதற்காக இப்படிச் சேமிக்கவேண்டும் என்று பானுபக்தர் வினவியபோது, தான் இறந்துவிட்டாலும் ஊர்மக்களுக்கு ஏதாவது விட்டுச் செல்லவேண்டும் என்றும், அதற்காக ஊர்க்கிணறு தோண்டுவதற்கான சேமிப்பு என்றும் புல்வெட்டி கூறியது, பானுபக்தரைச் சிந்திக்கச் செய்தது. ஊருக்கு ஏதேனும் சொத்து வைக்கவேண்டும். அதற்கு இராமகாதையைத் தவிர வேறெதுவும் உண்டா?
அடியேன் பானுபக்தன்  செல்வந்தன்; எனினும், பானுபக்தன் தக்கவனா? கிணறுகளில்லை, சத்திரங்கள் எதுவும் அடியேன் உழைப்பால் இல்லை;

செல்வமெல்லாம், உள்ளதெல்லாம், இல்லத்துக்குள்ளேயே  மூலை ஒன்றில்.. பாடமொன்று, ஆம், நல்ல பாடமொன்று, இன்று கற்பிக்கப்பட்டது; நாணம்; அடியேனின் இவ்வாழ்க்கை பயனற்றது; எனினும், நற்பெயர் பெற யாது வழி?
நற்பெயர் பெறவும் வருங்காலத் தலைமுறைகளுக்குச் சொத்து வைக்கவும் நல்ல வழி இராமகாதையை எடுத்துரைப்பது! இதையேதானே, கவியரசர் கண்ணதானும் கூறினார்?

கம்பநாட்டாழ்வாரின் இராமாவதாரத்தைப் போற்றுமிடத்துக் கண்ணதாசன் சொன்னது நினைவு வரவில்லையா?
காலமெனும் ஆழியிலும், காற்று மழை ஊழியிலும், சாகாது கம்பன் அவன் பாட்டு அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு வருங்காலத் தலைமுறைகளுக்கான சொத்து, இராமன்! எதிர்கால வாழ்க்கைக்கான செம்மை, இராமன்! அதுமட்டுமன்று. இராமன் பெயரைச் சொன்னால், நமக்கு நற்பெயர் கிட்டும்.

காத்மண்டுவில் பிறந்து, வாரணாசியிலும் கொல்கத்தாவிலும் கல்வி பயின்று, பண்டிதராஜர் என்னும் புகழுக்கு உரியவர் பண்டித சோமநாத சிக்தெல். ஆதர்ச ராகவம் என்னும் தலைப்பிட்ட தம்முடைய மகாகாப்பியத்தைத் தொடங்கும்போதே இவர் கூறுவதைக் கேளுங்கள்: பண்டைய காலத்தின் மேன்மைமிக்க தம்பதியைப் பற்றிய கதை இது.

புனித நதிகள் இரண்டின் கரைகளில் வளர்ந்தவர்கள்; சரயூவும் பாக்மதியும் அளித்த அரும் செல்வங்கள். இவர்களே நமக்கு ஆதர்சமானவர்கள்.

நேபாள இலக்கியத்தின் பொற்காலம் என்றழைக்கப்படுகிற நவீன காலத்தில் எழுந்துள்ளது, பண்டித லேக்நாத சர்ம பெüத்யால் அவர்களின் "மேரோ ராம்'. இராமனை ‘என்னுடைய இராமன்' என்று சொந்தம் கொண்டாடும் இக்காப்பியத்தில், இராமனுக்குச் சுமார் 138 திருநாமங்களைச் சூட்டுகிறார் ஆசிரியர். பக்த சர்வஸ்வன் (அடியார்களுக்கு எல்லாமானவன்), ஜகன் மங்களாதாரன் (உலகுக்கு நன்மை அளிப்பவன்), மகாகீர்த்தி கீர்த்தன்யன் (புகழ் மிக்கவன்), சாந்தி சம்பன்னன் (சாந்தமானவன்), தபஸ்வி வ்ருந்தன் (தவசிகளால் ஆராதிக்கப்படுபவன்), ராஜநீதிக்ஞன் (அரசியல் அறிஞன்), யுத்த நீதிக்ஞன் (ராணுவ அறிஞன்) என்று அடுக்குகிறார்.

மேற்கூறியவை தவிர, இராமகாந்த பரல் இயற்றிய அத்புத இராமாயண மொழிபெயர்ப்பு, போஜராஜ சர்மாவின் ஆனந்த ராமாயண மொழி பெயர்ப்பு, காளிதாஸ் பரஜுலி மொழிபெயர்த்த உத்தர ராமசரிதம், குலசந்திர கெüதம் உரைநடையில் மொழிபெயர்த்த துளசி இராமாயணம், கட்க பகதூர் இயற்றிய ராதே ச்யாம இராமாயணம், தாரநாத் சர்மாவின் ராகவ விலாபம், சுப்ப ஹோமநாத கட்டிவாடா இயற்றிய ராமாச்வமேத காண்டம், பூர்ணபிரசாத் சர்மாவின் ராமாயண் கோ பலுன், லக்ஷ்மி பிரசாத் தெகோட்டா இயற்றிய சீதா ஹரண் என்று நேபாள இலக்கியம் முழுவதிலும் இராமகாதை பரந்து விரிந்து பரவி இருக்கிறது.

நேபாளம், திபெத், தெற்காசிய நாடுகள் எங்கிலும் இராமகாதை நகர்ந்துள்ளது; மக்கள் உள்ளங்களில் உறைந்துள்ளது; பண்பிலும் பழக்கங்களிலும் கலந்துள்ளது.
அண்டையிலிருக்கும் பிரதேசங்களைத் தாண்டியும் இராமகாதைக்குச் செல்வாக்குண்டு. தொலைவில் இருக்கும் ஜப்பான் நாட்டிலும் கூட இராமனுக்குச் சிறப்பு உண்டு.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தைரானோ யாசுயொரி என்னும் துறவி. இவர் செப்பனிட்டுத் தொகுத்துள்ள இலக்கியத் தொகுப்புக்கு ஹொபுத்சுஷு என்று பெயர். இந்த ஜப்பானியப் பெயருக்கு "புதையல் தொகுப்பு' என்று பொருள். ஹொபுத்சுஷுவில் இராமகாதை காணப்படுகிறது.

தத்தகத்த சாக்யமுனி என்னும் அரசரும் அவருடைய அரசியும், எதிரியின் படையெடுப்பின்போது நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.  வனப் பகுதியில் மிக எளிமையாக இவர்கள் வசித்துவரும்போது, இவர்களுக்கு உதவுவதற்காக வருகிறார் அந்தணர் ஒருவர். ஒருநாள் அரசர், நதிக்கரைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில், அரசியைக் காணவில்லை. தேடி அலைகையில், பறவையொன்று இறக்கைகளில் அடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறது. அந்தணரே அரசியைக் கடத்தியவர் என்பதைத் தெரிவிக்கையில், தான் சண்டையிட்டதையும், அந்தணர் அரக்கராக மாறியதையும் கூறிவிட்டுப் பறவையானது இறந்துபடுகிறது. பறவை காட்டிய தெற்கு திசை நோக்கி அரசர் செல்ல, வழியில் குரங்குகள் பல எதிர்ப்படுகின்றன. தங்களின் நாட்டை அண்டை அரசனொருவன் அடித்துப் பறித்துக் கொண்ட விவரத்தை வெளியிடுகின்றன. அரசர் மிகச் சிறந்த வில்லாளி. எனினும், அவர் அம்பை எய்வதற்கு முன்னமே, அவருடைய ஆற்றலைப் புரிந்துகொண்ட எதிரி ஓடிவிடுகிறான். அரசியைத் தேடுகிற அரச பணியில், குரங்குகள் ஈடுபடுகின்றன.

மேலும் செல்ல வழி தெரியாமல் அரசரும் குரங்குகளும் திகைத்து நிற்கையில், தேவலோகத்திலிருந்து பிரம்ம சக்கா பார்த்துவிடுகிறார்.

(பிரம்ம சக்கா என்பது தேவேந்திரனுக்கான பெயர்; பெüத்த வழிமுறைகளில், இந்திரனைச் சக்ரன் அல்லது சக்கன் என்னும் மாற்றுப் பெயர்களால் சுட்டுவர்). அஹிம்சையை நிலைநிறுத்தவே தம்முடைய அரசாட்சியை விட்டுவிட்டுக் கானகத்திற்கு அரசர் வந்துவிட்டார் என்பதே பிரம்ம சக்காவிற்கு நிரம்பக் களிப்பைத் தருகிறது. தன்னையே சின்னஞ்சிறு வானரமாக மாற்றிக்கொள்ளும் பிரம்ம சக்கா, கடல் தாண்டியிருக்கும் அரக்கனின் உறைவிடத்தை அடைவதற்குப் பாலம் கட்டும் வழியை உரைக்கிறார். தன்னுடைய தீவுநாட்டுக்குள் வந்துவிட்ட அரசரையும் குரங்குகளையும் கண்டு கொதித்துப் போகும் அரக்கன், மாலை நேரத்தில் வெளிச்சமொன்றை ஏவுகிறான். குரங்குகளெல்லாம் மயங்கி விழுந்துவிட, தப்பித்திருக்கும் இளைய குரங்கொன்றை இமயமலைக்கு அனுப்பி மகா ஒüஷதியைக் கொணரச் செய்கிறார் பிரம்மசக்கா. அரக்கன் சண்டையிட வரும்போது, குரங்குகளெல்லாம் அவனைச் சூழ்ந்து தாக்க, அரசரின் அம்பொன்றால் அரக்கன் வீழ்ந்துபடுகிறான்.

அரக்கனின் அரண்மனைக்குள் புகும் வானரங்கள், அரசியைப் பாதுகாப்பாக வெளிக்கொணர்கின்றன. இதற்கிடையில், அரசரின் நாட்டின்மீது படையெடுத்த கொடுங்கோலன் இறந்துபட, தத்தகத்த சாக்யரைத் தேடிவரும் மக்கள், இவருடைய நாடு,  கொடுங்கோலனின் க்யுஷி நாடு ஆகிய இரண்டு பூமிகளுக்கும் இவரையே அரசராக்குகின்றனர்.

பெயர்கள் மாறுபட்டாலும், ஒரு சில பெயர்கள் கொடுக்கப்படவில்லையாயினும், இதுவம் இராமகாதைதானே! மாதவ கந்தலீயின் அஸ்ஸôமிய இராமாயணத்தில் ஒரு காட்சி. இராமன் அயோத்தி திரும்புகிறான்.
ஹாúஸô ஹாúஸô கரே புரி அயோத்யா ஸம்ப்ரதி, ந்ருத்த கீதவாத்ய ஜேன தேகி அம்ராவதீ } இராமனைக் கண்ட அயோத்தி, மகிழ்ச்சியுடன் சிரிப்பது போலிருந்தது; நாட்டியமும் இசையும் இசைக்கருவிகளுமாக அமராவதியின் கொண்டாட்டம். இராமனைக் கண்டால், அயோத்திக்கு மட்டுமா கொண்டாட்டம்? அனைவருக்கும்தானே!
(நிறைவு)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com