சமண சமயத்தைச் சேர்ந்த 24 தீர்த்தங்கரர்களில், இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராக விளங்குபவர் பார்சுவநாதர் எனும் அப்பாண்டைநாதர். இவர் இயற்கை எழில்மிக்க மலைக் கோயிலாக விளங்கும் திருநறுங்குன்றத்தில் அருளுகிறார். திருக்கோவிலூரை ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பழம்பெரும் ஆலயமாகும் இது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த வேடுவன் ஒருவன் தன் மனைவியோடு அன்றாட பிழைப்புக்காக மூலிகைகளையும், கிழங்குகளையும் வெட்டி எடுக்க நறுங்குன்றம் மலைக்கு வந்து சேர்கிறான். செடியை வெட்டி அதனுள் இருக்கும் கிழங்கை எடுக்க, வேடுவன் கடப்பாரையால் குத்தித் தோண்டினான். பாறை என்பதால் ஓங்கி குத்தினான். கடப்பாரை உள்ளே உள்ள சிலை மீது குத்தியதில், அடுத்த விநாடியே வேடுவன் பார்வையை இழந்தான்.
தான் பார்வை இழந்ததை அருகே இருந்த தன் மனைவியிடம் வேடுவன் கூற, அவள் பாறையின் மேல் உள்ள மண்ணை சுத்தம் செய்தார். அப்போது, அங்கே தெய்வத்தின் சிலை இருப்பதைக் கண்டு, கணவன் செய்தது தெய்வக்குற்றம் என்பதை உணர்ந்தாள். இருவரும் மனமுருகி வணங்கி நிற்க, இறைவன் காட்சி தருகிறார். வேடுவனுக்கும் பார்வை கிடைத்தது.
மன நிறைவோடு இருவரும் மலையை விட்டு இறங்கி இந்தச் செய்தியைத் தெரிவிக்க, ஊர்மக்களும் தாரைத் தப்பட்டைகளுடன் மலையேறி பகவானை வணங்கி மகிழ்ந்தனர்.
இதனால் பகவான் "அப்பாண்டவர்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
வேடுவன் அன்றிரவு தூங்கும்போது பத்மாவதி அம்மன் கனவில் வந்து, அதிசய நிகழ்வை மன்னன் ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை பிராட்டியிடம் சொல்லுமாறு கூறினார். இருவரும் குந்தவை பிராட்டியிடம் கூற, அவர் திருநறுங்குன்றம் வந்து தரிசனம் செய்தார். ஆலயத் திருப்பணியையும் செய்து முடித்தார்.
குந்தவை பிராட்டியைக் கௌரவிக்கும் வகையில் ஆலயத்தின் வடக்கே உள்ள ஏரியானது "குந்தவைப்பேரேரி' என அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்துக்கு அப்பாண்டைநாதர் உலா, திருமேற்றிசை அந்தாதி, திருநறுங்கொண்டை தோத்திரத் திரட்டு போன்ற பக்தி இலக்கிய நூல்கள் உள்ளன.
இந்த ஆலயம் இயற்கையான குன்றில் சுமார் 60 அடி உயரத்தில் 56 படிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மலை மீது கிழக்கு, மேற்கு என இரண்டு நீண்ட உருளை வடிவப் பாறைகள் அமைந்துள்ளன. பாறையில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார் நாதர். இந்த ஆலயத்தை "மேலைப்பள்ளி' என்றும் சந்திரநாதர் ஆலயத்தை "கீழைப் பள்ளி' என்று அழைக்கின்றனர். கொடி மரத்தின் அருகே ஜினவாணி சந்நிதி உள்ளது. மலையின் தென்புறத்தில் பத்மாவதி அம்மன் ஆலயம் அமைந்திருக்கிறது. இங்கே 43 கல்வெட்டு சாசனங்கள் உள்ளன.
கோயிலின் தெற்கே 40 அடி நீளம் உள்ள குகையிலே 12க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குகைப் பள்ளியில் வீரசங்கம் என்ற சமண சங்கம் செயல்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது.
ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஞாயிறன்று "நற்காட்சித்திருவிழா "கொண்டாடப்படுகிறது. இவ்வாலயம் சமணர்களுக்கானது என்றாலும் அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர். ஞாயிறு காலை 8 முதல் மதியம் 12 மணி வரையிலும், பௌர்ணமி நாள்களில் காலை 8 முதல் மாலை 6 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். மற்ற நாட்களில் பகல் நேரங்களில் மலையேறி ஆலய அமைப்பைப் பார்வையிடலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட திருநாவலூர் அருகே திருநறுங்குன்றம் அமைந்துள்ளது. திருவெண்ணெய்நல்லூர் } விருத்தாசலம் நெடுஞ்சாலையில் திருவெண்ணெய் நல்லூரில் இருந்து பெரிய செவலை, பிள்ளையார்குப்பம் ஊர்கள் வழியே சுமார் 6 கி.மீ. தொலையில் இத்தலம் உள்ளது. திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை , விழுப்புரத்தில் இருந்தும் பஸ் வசதிகள் உள்ளன.
தொடர்புக்கு:} 9655585738
பனையபுரம் அதியமான்