நாகங்களை அங்கங்களாக்கிய நாக சொரூபினி

நாக வழிபாடானது ஆதிமனிதர்களின் வாழ்வோடு தொடங்கியது.
நாகங்களை அங்கங்களாக்கிய நாக சொரூபினி
Published on
Updated on
2 min read

எந்தவிதமான நாகதோஷங்கள் தாக்கினாலும் பிரச்னைகள் தீர, சென்னையை அடுத்த திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மன் கோயிலில் உள்ள மகா ஆரண்ய ஷேத்திரத்தில் தனி கோயிலாகத் திகழும் சர்வ காரிய நாக சொரூபினி கோயிலில் வழிபட்டால் தீரும்.

நாக வழிபாடானது ஆதிமனிதர்களின் வாழ்வோடு தொடங்கியது. சிவன், பார்வதி, திருப்பாற்கடலில் மகாவிஷ்ணு, மாரியம்மன், தேவி கருமாரியம்மன், முருகன் உள்ளிட்ட பல தெய்வங்களுமே நாகத்தை தங்கள் சிரசுக்கு குடையாக, படுக்கைக்கு பாம்பணையாக.. என பல்வேறு விதங்களில் பயன்படுத்துகின்றன.

கோயில்களில் நாக வழிபாட்டுக்காக, மரத்தடியில் தனி சிலா வடிவங்கள் உள்ளன. இறைவனை வழிபட்டு பேறு பெற்ற நாகங்களுக்கான, சோழநாட்டு தேவாரத் தலமான திருப்பாம்புரத்தில் கூட துணைச் சந்நிதிகளே அமைந்துள்ளன. ஆனால், நாகமே மூலவராகவும், அஷ்ட நாகங்கள் பரிவார நாகங்களாகவும் கொண்டு விளங்கும், அபூர்வக் கோயில் இங்குதான் உள்ளது.

இங்கு கலியுக காவல் தெய்வம் தேவி ஸ்ரீகருமாரியே நாகங்களால் உருவான, நாக சக்தியாகக் காட்சி அளிக்கிறாள். இதைச் சுற்றி, நாகலோகத்தின் தேவர்களான எட்டு நாகங்கள் புடைசூழ அமர்ந்து, ராகு} கேது எனும் சாயா கிரகங்களும் காவல் தெய்வங்களாக விளங்குகின்றன.

இந்த நாக சொரூபினியை அலங்காரத்துக்கு முன்பு தரிசித்தால், அவளின் திருமுகம், கரங்கள், கால்கள், அங்கங்கள் என அனைத்துமே தனித்தனி நாகங்களாக காட்சிதர அவற்றின் ஒருங்கிணைப்பே அமர்ந்த கோல நாக அம்மனாக காட்சியளிப்பது மெய்சிலிர்க்க வைக்கும். அத்துடன் சிரசில் உள்ள நாகத்திடம் சூரியனும், பாதத்தில் உள்ள மற்றொரு நாகத்திடம் சந்திரனையும் காண முடிகிறது. கிரகண காலத்தில் சூரியனையும், சந்திரனையும் அன்னை தடுத்தாட்கொள்ளும் ஐதீகத்தை இது நினைவுபடுத்துகிறது. கருவறையைச் சுற்றிலும் அஷ்ட நாக சந்நிதிகள் அணி சேர்க்கின்றன.

இந்த அபூர்வ கோலத்தையும் கோயிலையும் வடிவமைத்தவர் திருவடிசூலம் மருளாளர் ஸ்ரீ மதுரைமுத்து சுவாமிகள் ஆவார்.

ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் ராகு காலம், பௌர்ணமி, நாகபஞ்சமி, வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி ஆகியன வழிபாட்டுக்கு உகந்த நாள்களாகும். சனித் தொல்லைகள், பித்ரு தோஷம், ஜென்ம சாபங்கள், தொழில் தடைகள், மன உளைச்சல், தூக்கமின்மை, தொடர்ந்து வரும் நோய்கள், துன்பங்கள், வீட்டில் நாகம் வந்தது, நாகத்தை அடித்தவர்கள், வேலையின்றி அல்லல்படுவோர் என அனைவருக்கும் அருள்புரிவதே இந்தக் கோயிலின் மகிமையாகும்.

கருவறையைச் சுற்றி அமைந்துள்ள அஷ்ட நாகங்களைப் பற்றியும், அவற்றை வணங்குவதால் கிடைக்கும் பலன்களையும் அறியலாம்.

சங்கன்: நினைவாற்றல் பெருகும். கல்வியும்,ஞானமும் கிடைக்கும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும்.

பத்மன்: மலர்ந்த முகமும்,நிறைந்த ஆயுளும் கிடைக்கும். உடலுக்கும், உள்ளத்துக்கும் நலம்தந்து நிறைவான பொருள் கிடைக்கும்.

மகாபத்மன்: குறைவில்லா செல்வம்,வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள் கிடைக்கும்.

கார்கோடகன்: சனித் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம்.

அனந்தன்: திருமண வரம்,குழந்தை வரம் கிடைக்கும். குடும்பப் பிரச்னைகள் நீங்கி, நல்வாழ்வு கிடைக்கும்.

வாசுகி: கற்பக விருட்சம்போல், கேட்டதைத் தரவல்லவர்.

குளிகன்: உடல் உபாதைகள், அச்சம், மனக்குழப்பம், சித்தம் பேதலித்தல் முதலான குறைகள் நீங்கும்.

தட்ஷகன்: எம பயம் அகலும்,துர்கண்டங்கள் விலகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com