பொன் பெற அருளும் தலம்!

கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு பின்புறச் சுவரில் சிவன், உமா தேவியின் திருமணத் திருமேனிக் காட்சி தருகிறது.
பொன் பெற அருளும் தலம்!

வழிபாடு சிறப்புமிக்க கோயில்களால் "கோயில் நகரம்' என்ற உயர்ந்த சிறப்பு பெற்று விளங்கும் காஞ்சிபுரத்தில், அனைத்து சமயங்களும் உயர்வு பெற்று விளங்கின.

சைவ சமயக் குரவர்களால் போற்றி பாடல் பெற்ற ஐந்து தலங்களில் ஒன்றான "ஓணகாந்தன் தளி' என்ற கோயில் நகரில் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ளது.

பாணாசுரன் என்ற அசுரனின் சேனாதிபதிகளான "ஓணன்', "காந்தன்' என்னும் அசுரர்கள் வழிபட்டு, இறையருளைப் பெற்றதால் இந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோயிலில் இரண்டு சிவலிங்கத் திருமேனிகள் வழிபாட்டில் உள்ளன. அடுத்தடுத்து தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. மேலும் சலந்தரன் வழிபட்டதாகக் கூறப்படும் சிவலிங்கத் திருமேனியும் தனியே அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள பிற கோயில்களைத் தரிசித்து பின்னர் இத்தலத்துக்கு வந்து இறைவனைப் போற்றி திருப்பதிகம் அருளுகிறார் சுந்தரர். "நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நாள்தோறும் நித்திய பூசனை செய்யலுற்றார் கையில் ஒன்றும் காணம் இல்லை' என துவங்கும் பதிகத்தில், "துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் இருந்து கரை ஏற பொருளும், இறையருளும் அருளுக' என்று வேண்டுகிறார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், "ஒணகாந்தன் தளியுள்ளீரே' என்று வேண்டுவதை காணலாம்.

இரண்டாவது பாடலில் சிவனின் மூத்த மகனாகிய விநாயகரை "வயிறுதாரி' என்று குறிப்பிடுகிறார். இந்தக் கோயில் திருச்சுற்றில் அமைந்துள்ள விநாயகப் பெருமான் வயிறுதாரி பிள்ளையார் என்று அழைக்கப்படுவது சிறப்பானது. மற்றொரு பாடலில் தடமார்பு நீங்காத்தையலாள், உலகு உய்ய வைத்த காரிரும் பொழில் கச்சி மூதூர்க் காமகோட்டம் இருக்கும் ஏன் நீர் ஊரவர் இடும் பிச்சையை ஏற்க வேண்டி பிச்சாடணர் கோலத்தில் ஏன் செல்ல வேண்டும் என வினவுவதைக் காணலாம். சுந்தரர் தாம் பாடிய பத்து பாடல்களை "பண்ணோடு நன்கு பாட வல்லாருக்கு அவர் செய்த பாவம் விரைந்து போகும்' எனவும் கூறுவதை காணலாம்.

இத்தலப் பதிகங்களில் ஐந்தாவது பாடலைத் தொடங்கி பாடும்பொழுது, இறைவன் பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும், அறிந்த சுந்தரர், பெருமானை அங்கு சென்று பாட, புளியமரத்து காய்களையே பொன்னாக சுந்தரர் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இன்றும் அக்கோயில் திருச்சுற்றில் புளியமரம் சிறப்பாகப் போற்றி வணங்கப்படுகிறது. இறைவன் எழுந்தருளி அருட்புரியும் கருவறை அருகே சுந்தர பெருமான் சிற்பத் திருமேனியும், அவருடைய திருவடிகளும் காணப்படுவது சிறப்பானது.

கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு பின்புறச் சுவரில் சிவன், உமா தேவியின் திருமணத் திருமேனிக் காட்சி தருகிறது. பல்லவர் காலத்திலேயேகோயில் கட்டப்பட்டதாகும். பின்னர், விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதற்கு அடையாளமாக விஜயநகர மன்னர் அரசு முத்திரை கருவறைச் சுவரில் காணப்படுகிறது. நுழைவு வாயில், மூன்று நிலை கோபுரத்துடன் காட்சி தருகிறது. அதனை அடுத்து பலிபீடம், நந்தியம் பெருமான் காட்சி தருகிறார். காந்தேசுவரர் சன்னதியில் ஓம்கார கணபதி வழிபாடு சிறப்பானதாக விளங்குகிறது.

சுந்தரர் பெருமான் பொன்னும், இறை அருளும் பெற்ற இந்தக் கோயிலில் மாசி மாத சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com