

பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்கிற ஐந்து நிலைகளிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் கடையநல்லூர் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள்.
தேவர்களும், அசுரர்களும் முதுமையடையாமல் இருக்க, பாற்கடலைக் கடைந்து அமுதைப் பெற்றனர். அதனை திருமால், மோகினி வடிவத்துடன் தேவர்களுக்கு மட்டும் பகிர்ந்து அளித்தார்.
அமுதம் கிடைக்காததால் போர் நடைபெற்றது. அதில், பல அசுரர்கள் அழிந்தனர். எஞ்சிய அவுணர்கள் பிருகு முனிவரைத் தஞ்சம் அடைந்து அவருடைய பாதுகாப்பில் இருந்தனர். ஒருநாள் பிருகு முனிவர் இல்லாத நேரம் பார்த்து தேவேந்திரன் அவுணர்களை அழிக்க, ஆசிரமத்துக்கு வந்தான். அதனை அறிந்த பிருகு பத்தினி, அவுணர்களை தன் வயிற்றில் மறைத்து வைத்துகொண்டார். இதையறிந்த இந்திரன், திருமாலிடம் இதைத் தெரிவித்தான். அவர் தன் சக்கரத்தை ஏவி, பிருகு முனிவர் பத்தினியின் தலையைக் கொய்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட பிருகு முனிவர், தன்னை மனைவியிடமிருந்து பிரித்தவன், தானும் தன் மனைவியை பிரிந்து அலைவானாக என்று சாபமிட்டார்.
மனைவியைப் பிரிந்து அலைந்துகொண்டிருந்த பிருகு முனிவரை, மற்ற முனிவர்கள் மந்திர தீர்த்ததால் சுய உணர்வு அடையச் செய்தனர். பின்னர் விந்திய பர்வதம் சென்ற பிருகு முனிவர், சிவனை நோக்கி தவம் செய்தார். திரிகூட மலைக்கு வடக்கே உள்ள ஒற்றை முடி மலையிலிருந்து உற்பத்தி ஆகி வரும் கருப்பாநதி அருகே உள்ள பில்வ வனத்திற்கு வந்த பிருகு முனிவர், அங்கு கமலேஸ்வரன் என்ற சிவலிங்கத்தை வணங்கி வந்தார். இதனால் மகிழ்ந்த கமலேஸ்வரன், ஸ்ரீ நீலமணிநாதர் (கரியமாணிக்க பெருமாள்) விக்கிரகத்தை முனிவரிடம் கொடுத்து, அவருக்கு வடக்குப் பக்கத்தில் இதை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், திருமால் அருள் பாலிப்பார் என்று கூறினார்.
அதன்படி, ஸ்ரீ நீலமணி நாதரை பிரதிஷ்டை செய்து பிருகு முனிவர் வழிபட்டு வந்தார். இதனால் திருப்தி அடைந்த திருமால், அவர் முன் தோன்றி பிருகு முனிவர் கொடுத்த சாபத்தை, "நான் ராமனாகப் பிறந்து அனுபவிக்கிறேன்' என்று கூறி மறைந்தார். பிருகு முனிவரும் அவ்விடத்திலிருந்து நீலமணி நாதரை நாளும் வழிபட்டு வந்தார்.
துர்வாச முனிவர் வைகுண்டத்துக்குச் சென்று திருமாலை வணங்கி அவரிடம் இருந்து பிரசாதமாக தாமரை மலரைப் பெற்றுகொண்டு வரும்பொழுது ஐராவதத்தின் மீது தேவேந்திரன் எதிரில் வந்தான். அந்தத் தாமரை மலரை துர்வாசமுனிவர் இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதனை ஒரு கையால் வாங்கி யானையின் மத்தகத்தில் வைத்தான். அந்த யானையோ அம்மலரை துதிக்கையில் எடுத்து தன் காலால் மிதித்துவிட்டது. கோபம் கொண்ட துர்வாசர், பில்வவனத்தில் இந்திரன் மருத மரமாகவும், ஐராவதம் பெரும் பாறையாகவும் கடவது என சாபமிட்டார்.
நீலமணிநாதரை வணங்கி வரும் பிருகு முனிவர், விஷ்ணு பிரசாதத்தை எப்போது மருத மரத்தடியில் போடுவாரோ அப்போது இந்திரன் சுய உருவம் பெற்று சொர்க்கம் அடைவான் என சாப விமோசனம் அளித்தார். சாபத்தின்படி இந்திரன் பில்வ வனத்தில் நீலமணி நாதருக்கு எதிரே மருதமரமாய் நின்றான். அம்மரம் இந்திரதரு என்ற பெயர் பெற்றது. ஐராவதமும் பெரும்பாறையாக அதன் அருகில் உருமாறிக் கிடந்தது.
ஒரு நாள் பிருகு முனிவர், நீலமணிநாதரின் பிரசாதமான கமலமலரை அந்த இந்திரதரு மீது கொண்டு வைத்தார். உடனே இந்திரனும் முனிவரின் சாபம் நீங்கி சுய உருவம் பெற்றான். அப்போது நீலமணிநாதர், இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்றார். அதன்படி தேவேந்திரன் கோயிலை பிரதிஷ்டை செய்து, நீலமணிநாதர் திருவருளைப் பெற்று சாபம் நீங்கி தேவலோகம் போய் சேர்ந்தான் என்கிறது தல வரலாறு.
ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ நீல மணிநாதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயிலின் மகா சம்ரோக்ஷணம் மார்ச் 20 }ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் திருமஞ்சனம், திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 9 மணிக்குள் பெருமாள் கருடசேவை நடைபெறும்.
தொடர்புக்கு: 95009 91799.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.